மாணவிகள் இடைநிற்றலைத் தடுக்கும் திட்டம்: அன்பில் மகேஷ்

Published On:

| By Kavi

புதுமைப்பெண் திட்டம் பள்ளி மாணவிகள் இடைநிற்றலை தடுக்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் தருமபுரி மாவட்டத்தில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,

“அரசுப் பள்ளிகள் தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

புதுமைப்பெண் நிதியுதவி திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவிகளின் இடைநிற்றலை தடுக்கும்.

இதுதவிர பல்வேறு மாவட்டங்களில் பள்ளிக் கல்வி தொடர்பாக உள்ள சில பிரச்சினைகளையும் இந்தத் திட்டம் களையும்.

மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கருதி சேதமடைந்த வகுப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறோம்.

அந்தந்த இடங்களில் தேவைக்கேற்ப புதிய கட்டடங்கள் கட்டுவது குறித்து பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வை ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களும் எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் எப்படியிருந்தாலும் மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

மாணவ-மாணவிகள் எதையும் எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

ராஜ்

ரூ. 1000 வழங்குவது இலவசம் அல்ல… கடமை: மு.க.ஸ்டாலின் பேச்சு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share