விழுப்புரம் மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் வழிபாடு செய்தனர். schedule caste people entered Draupadi Amman
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குள் சென்று வழிபட பட்டியலின மக்களுக்கு பல வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டது. அதையும் மீறி சென்ற பட்டியலின தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் தாக்குதல் நடத்தியதால் பெண்கள், குழந்தைகள் எல்லாம் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2 முறையும் வருவாய் கோட்டாட்சியர் 7 முறையும் என மொத்தம் 9 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் 2023 ஜூன் 7ஆம் தேதி காலை விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைத்தார். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.
கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி, அனைத்து தரப்பினரும் வழிபாடு நடத்த உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் பங்கேற்ற இரு சமுதாயத்தினரும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி கோயிலைத் திறந்து தரிசனம் செய்வது தொடர்பாக சமாதானம் என ஒப்புக் கொண்டனர்.
இதன் காரணமாக கோயிலில் தூய்மை பணி மேற்கொண்டு, பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்களும் பொறுத்தப்பட்டன.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) விழுப்புரம் எஸ்.பி.சரவணன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கோயில் திறக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் திறக்கப்பட்டதாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் வழிபாடு செய்ய ஊர்மக்கள் யாரும் வரவில்லை. 22 மாதங்களாக மூடிக்கிடக்கும் கோயிலை நல்ல நாள் பார்த்து திறக்காமல் ஏனோ தானோ என திறக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். வருவாய்த் துறை அதிகாரிகள் தன்னிச்சையாக திறந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமையான நாளை வழிபாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். எனினும் அந்த ஊரைச் சேர்ந்த பட்டியலினத்தவர்கள் 100 பேர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வழிபாடு செய்ய வந்தனர். ஆனால் மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வழிமறித்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
“எல்லோரும் சேர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவோம்’ என்று போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் மற்றொரு தரப்பினர் கேட்காததால், “ஏன் அட்ராசிட்டி செய்கிறீர்கள். ஏன் அவர்களை தடுக்கிறீர்கள். பிரச்சினை செய்யாதீர்கள்” என்று கண்டிப்புடன் கூறினர்.
இதையடுத்து பட்டியலின மக்கள் கோயிலுக்கு சென்று சாமி தரசனம் செய்தனர். இதுகுறித்து பட்டியலின சமூதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிறந்ததில் இருந்து நான் இந்த கோயிலுக்குள் சென்றதில்லை. இன்றுதான் முதன்முறையாக செல்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
அதே சமூதாயத்தைச் சேர்ந்த செல்வராஜ் கூறுகையில், “எனக்கு வயது 75. இதுவரை நான் கோயிலுக்குள் சென்றதில்லை.முகமது அஸ்லாம் ஆட்சியராக இருந்த போது, உங்கள் ஊருதானே வாங்க பாத்துகலாம் என்றார். அப்போது சூழ்நிலை சரியில்லாததால் போக முடியவில்லை. இப்போதுதான் முதன்முறையாக சென்றேன். விபூதி கொடுத்தார்கள் மகிழ்ச்சியாய் வைத்துக்கொண்டேன்” என்றார். schedule caste people entered Draupadi Amman