மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரின் தண்டனையையும் ரத்து செய்து, அவர்களை விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 24) நிறுத்தி வைத்தது. sc stays on mumbai train blast judgement
மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளூர் மின்சார ரயில்களில் அடுத்தடுத்து 7 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் மொத்தம் 189 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 800க்கும் மேற்பட்ட அப்பாவிகள் படுகாயமடைந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர். நீண்ட நாட்களாக நடைபெற்ற இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றம் (MCOCA) 5 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் கடந்த 2015ஆம் ஆண்டு விதித்தது.
இதனையடுத்து குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது.

இந்த நிலையில் ”நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல. ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது” எனக்கூறி 12 பேரையும் விடுதலை செய்து கடந்த 21ஆம் தேதி சிறப்பு அமர்வு தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் MCOCA இன் கீழ் நிலுவையில் உள்ள பிற விசாரணைகளைப் பாதிக்கக்கூடும். எனவே மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்” என வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதிகள் அமர்வு, “பிரதிவாதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர், அவர்களை மீண்டும் சிறைக்குக் கொண்டுவருவது குறித்து எந்த கேள்வியும் இல்லை என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சட்டப் பிரச்சினையில் சொலிசிட்டர் ஜெனரலின் வாதத்தை கருத்தில் கொண்டு, மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை, பிற வழக்குகளில் ஒரு முன்னுதாரணமாகக் கருதக்கூடாது என்று நாங்கள் கூறுகிறோம். எனவே 12 பேர் விடுதலை தீர்ப்புக்கு தடை விதிக்கிறோம்” என தீர்ப்பளித்தனர்.
மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கமல் அன்சாரி கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இறந்துவிட்டார். மீதமுள்ள 11 பேரில் முகமது பைசல் அதவுர் ரஹ்மான் ஷேக் மற்றும் நவீத் ஹுசைன் ஆகிய இருவர் மீது வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர்கள் தவிர மற்ற 9 பேரும் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
