கார் ஓட்டுநர் உரிமம் (LMV) வைத்திருக்கும் ஒருவர், 7,500 கிலோ எடை கொண்ட கனரக வாகனத்தை ஓட்டுவதற்கும் உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மோட்டார் வாகன சட்டம் 1988-ன்படி, இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் (LMV) பெற்றவர்கள் கார், ஜீப், டாக்சி, ஆட்டோ ரிக்ஷா போன்ற இலகுரக தனியார் வாகனங்களை மட்டுமே இயக்க முடியும். வணிக நோக்கத்துக்கு கனரக வாகனங்களுக்கு கார் ஓட்டுநர் (LMV) உரிமத்தைப் பயன்படுத்த முடியாது.
இந்த நிலையில், கார் லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் இனி 7,500 கிலோ எடையுள்ள கனரகப் போக்குவரத்து வாகனத்தை ஓட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் (LMV) போக்குவரத்து வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்பட்டால், காப்பீட்டு வழங்கும் உரிமை கோரலில் சட்டச் சிக்கல்கள் இருந்து வருகிறது. இதையொட்டி பல்வேறு கேள்விகளும், சர்ச்சைகளும் அவ்வப்போது கிளம்புகின்றன. வழக்குகளும் தொடரப்படுகின்றன.
இது தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில், நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், பிஎஸ் நரசிம்ஹா, பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.
கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி நடந்த விசாரணையின்போது மத்திய அரசு சார்பில், ‘மோட்டார் வாகனங்கள் சட்டம், 1988ஐ திருத்துவதற்கான ஆலோசனைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மட்டுமே இதை நிறைவேற்ற முடியும்’ என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இதுதொடர்பாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், “எல்எம்வி (LMV) லைசன்ஸ் ஓட்டுநர்கள், போக்குவரத்து வாகனங்களை ஓட்டுவதால்தான் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்பதை உறுதிப்படுத்த அரசிடம் போதிய ஆதாரம் தாக்கல் செய்யப்படவில்லை.
நாட்டில் சாலை விபத்துகள் குறித்த தரவுகளின் பின்னணியில், எல்எம்வி ஓட்டுநர்கள்தான் காரணம் என்று கூறுவது ஆதாரமற்றது. உலக அளவில் சாலைப் பாதுகாப்பு என்பது ஒரு பொதுப் பிரச்சினை ஆகும்.
போக்குவரத்து வாகனங்களை ஓட்டுவதற்கான உச்ச வரம்பானது 7,500 கிலோவுக்கு மேல் எடையுள்ள போக்குவரத்து வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். எல்எம்வி லைசன்ஸ் உள்ளவர்கள் இனி 7,500 எடைகொண்ட போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம்.
7,500 கிலோவுக்கு குறைவான எடையுள்ள வாகனத்தை ஓட்டும் எல்எம்வி லைசன்சாளர்கள் இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய இந்தத் தீர்ப்பு உதவும்” என குறிப்பிட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
இந்தியாவில் வாகன ஓட்டுநர் உரிமம் என்பது பெரும்பாலான மக்களால் வைத்திருக்கப்படுகிறது. இதில் பலர் முறையாக டிரைவிங் தெரியாமலேயே ஓட்டுநர் உரிமத்தை வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில் இது போன்ற சட்டங்கள் கொண்டு வருவது இந்தியாவில் சாலை பாதுகாப்பில் குறைபாடு ஏற்படுத்தும் என்கிறார்கள் சாலைப் போக்குவரத்துத்துறையினர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: முடி உதிர்தலைத் தடுக்கும் எண்ணெய்… வீட்டிலேயே தயாரிக்கலாம்!
டாப் 10 நியூஸ் : கமலா ஹாரிஸ் உரை முதல் கமல்ஹாசன் பிறந்தநாள் வரை!
கிச்சன் கீர்த்தனா : ராஜ்மா மசாலா
விஷச்சாராயம் குடித்து 53 பேர் மரணம்… 23 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது!