வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆதார் அட்டையை 12 ஆவது ஆவணமாக ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் நடத்தியது. இதைத்தொடர்ந்து சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 8) விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் சூரியகாந்த், ஜாய்மால்யா அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் பீகாரில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஏற்கனவே 11 ஆவணங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 12 ஆவது ஆவணமாக ஆதார் அட்டையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதேசமயம் ஆதார் அட்டையின் நம்பகத்தன்மை மற்றும் உண்மைத் தன்மையை சரிபார்க்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு .
ஆதார் சட்டபூர்வ அந்தஸ்தை பெற்றிருந்தாலும் குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (4) ன் படி ஆதார் ஒரு அடையாளச் சான்று; வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க பிற 11 ஆவணங்களுடன் ஆதார் அட்டையை பன்னிரண்டாவது ஆவணமாக ஏற்றுக்கொள்வது குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
