உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் வரவேற்றுள்ளன. அதே சமயம், பாஜக பெரும்பான்மையை நிரூபிப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நவம்பர் 23ஆம் தேதி, தேவேந்திர பட்னாவிஸுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநா் பகத்சிங் கோஷ்யாரியின் நடவடிக்கைக்கு எதிராக சிவசேனா – என்சிபி – காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக மனுத் தாக்கல் செய்தன. அந்த மனுவை நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு இரு நாட்களாக விசாரித்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில், நாளை(நவ.27) மாலை 5 மணிக்குள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை ஆளுநர் பகத்சிங் கோஷியாரி நடத்தி முடிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என உத்தரவிட்டது.
**சிவசேனா-காங்கிரஸ்-என்சிபி வரவேற்பு**
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரித்விராஜ் சவான் கூறுகையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகளுக்கு மனநிறைவை அளிக்கிறது. பாஜகவின் உண்மையான முகம் நாளை வெளிப்பட்டு விடும். நாளை காலை 11 மணிக்கு அனைத்து எம்எல்ஏக்களும் பதவி ஏற்கிறார்கள். அதன்பின் தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தேவேந்திர பட்னாவிஸ் உடனடியாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “உண்மை வென்றது. நீதிமன்றம் 30 மணிநேரத்தை வழங்கியுள்ளது. ஆனால், 30 நிமிடங்களிலேயே எங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்” எனக் கூறினார்.
நவாப் மாலிக் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இந்திய ஜனநாயகத்தின் மைல்கல். 5 மணிக்கு முன்பாகவே பாஜகவின் விளையாட்டு முடிவுக்கு வந்துவிடும். சில நாட்களில் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணி ஆட்சி மகாராஷ்டிராவில் உதயமாகும்” எனத் தெரிவித்தார்.
**பாஜக நம்பிக்கை**
மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், “நாங்கள் நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயாராக உள்ளோம், அதை நாங்கள் காண்பிப்போம் ”என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து மும்பையில் உள்ள சட்டமன்றத்திற்கு உயர்மட்ட பாதுகாப்பு அளித்து வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வளாகத்திற்கு வெளியே எந்தவிதமான அசம்பாவிதங்களையும் தவிர்க்க விரிவான போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் , அங்கீகரிக்கப்படாத நபர்கள் யாரும் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
பாஜக தலைவர் ராவ் சாஹேப் டான்வே செய்தியாளர்களிடம், “நாளை நாங்கள் எங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்” என்றார். மேலும், அவர் “அனைத்து மகாராஷ்டிரா பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று இரவு 9 மணிக்கு மும்பையில் உள்ள கார்வேர் கிளப்பில் சந்தித்து நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து விவாதிப்பார்கள்” என்றும் கூறினார்.
[நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: மகா வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு!](https://minnambalam.com/k/2019/11/26/22/maharashtra-floor-test-tomarrow-superem-court-order)
