மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைமுறையில் உள்ள கை ரிக்ஷாக்களுக்கு (Hand-Pulled Carts) உச்சநீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. கை ரிக்ஷாவில் மனிதனை மனிதனே இழுத்துச் செல்வது மனிதாபிமானமற்றது எனவும் உச்சநீதிமன்றம் கடுமையாக சாடி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ‘மதேரன்’ (Matheran) சுற்றுலா நகரத்தில் தற்போதும் மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லக் கூடிய கை ரிக்ஷாக்கள் நடைமுறையில் உள்ளன. இதற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.
இந்த பொதுநலன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 6-ந் தேதி தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு விடுதலை அடைந்து 78 ஆண்டுகள் ஆன நிலையிலும் மனிதர்களை உட்கார வைத்து மனிதர்களே இழுத்துச் செல்லக் கூடிய கை ரிக்ஷாக்கள் எப்படி அனுமதிக்கப்படுகின்றன? வாழ்வாதாரத்துக்காக மக்கள் இத்தகைய மனிதாபிமானமற்ற முறையை தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்; தனி மனிதர்களின் கண்ணியம் என்ற அடிப்படைக்கே இது எதிரானதாக உள்ளது; இதனை அனுமதிப்பது அரசியல் சாசனம் அனுமதித்த சமூக பொருளாரா நீதிக்கு எதிரானது; ஆகையால் கை ரிக்ஷா முறைக்கு தடை விதிக்கப்படுகிறது என காட்டமாக உத்தரவிட்டனர்.
மேலும் மகாராஷ்டிரா மாநில அரசு, குஜராத்தின் கேவதாவை பின்பற்றி இ- ரிக்ஷா (மின்சார ரிக்ஷாக்கள்) திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தியது உச்சநீதிமன்றம். அதேபோல, கை ரிக்ஷா திட்டத்துக்கு தடை விதிக்கப்படுவதால் பாதிக்கப்படுவோருக்கு மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கை ரிக்ஷா நடைமுறையை ஒழித்த கலைஞர்
தமிழ்நாட்டிலும் கை ரிக்ஷாக்கள் செயல்பட்டு வந்தன. இன்றைக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிஆர் கவாய் சொல்கிற அதே வார்த்தைகளைத்தான் 43 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கை ரிக்ஷாக்கள் நடைமுறையை ஒழித்த அந்நாளைய முதல்வர் கலைஞர் அவர்களும் உரக்க சொன்னார். அன்று கை ரிக்ஷாக்களை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாக்களை இலவசமாகவும் வழங்கினார் கலைஞர். தமிழ்நாட்டில் 3.6.1973 முதல் கை ரிக்ஷா நடைமுறை கைவிடப்பட்டது. அத்துடன் கை ரிக்ஷாவை, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாகவே வைத்தார் அன்றைய முதல்வர் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
