ஸ்விக்கி, ஜொமாட்டோவுக்கு மாற்றாக ‘ZAAROZ’- டெலிவரி App நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளனர் நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர். Swiggy Zomato
ஸ்விக்கி, ஜொமாட்டோ ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் இன்று பட்டி தொட்டிகளிலும் கால் பதித்துவிட்டன. மினி பேருந்துகள் கூட செல்லாத குக்கிராமங்களில் கூட ஸ்விக்கி, ஜொமாட்டோ டூவீலர்களைப் பார்க்க முடிகிறது.
பெரும்பாலான நகரங்களில் ஹோட்டல்கள், பேக்கரிகள்- ஸ்விக்கி, ஜொமாட்டோ மூலம் பொதுமக்களுக்கு வீடுகளுக்கே உணவுப் பொருட்களை சப்ளை செய்து வருகின்றன. தற்போது ஸ்விக்கி, ஜொமாட்டோ நிறுவனங்களுக்கும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் பல நகரங்களில் முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன. தொடக்கத்தில் ஹோட்டல் உரிமையாளர்களிடம் மிக குறைவான தொகையை கமிஷனாகப் பெற்று வந்தன ஜொமாட்டோ, ஸ்விக்கி உள்ளிட்டவை.
ஆனால் ஸ்விக்கி, ஜொமாட்டோவின் தேவை மிகவும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலை உருவாகிவிட்டதால் இப்போது தங்களிடம் இந்த நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது ஹோட்டல் உரிமையாளர்களின் புகார். விளம்பர செலவு முதல் ஜிஎஸ்டி வரை பல்வேறு செலவுகளை பிடித்தம் செய்து கொண்டு மிகவும் சொற்பமான கமிஷன் தொகையைத்தான் தங்களுக்கு ஸ்விக்கி, ஜொமாட்டோ நிறுவனங்கள் தருகின்றன என்பதும் ஹோட்டல் உரிமையாளர்களின் ஆதங்கம்.
இதனால் நாமக்கல் உள்ளிட்ட நகரங்களில் இனி ஸ்விக்கி, ஜொமாட்டோவுடன் இணைந்து செயல்பட முடியாது என ஹோட்டல் உரிமையாளர்கள் அறிவித்தனர். இதன் அடுத்த கட்டமாக நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் ‘ZAAROZ என்ற டெலிவரி App நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளனர். இந்த நிறுவனம், ஹோட்டலில் என்ன விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்கிறோமோ அதே விலைக்கே பொதுமக்களுக்கு சப்ளை செய்ய முன்வந்துள்ளதாகவும் எந்த மறைமுக கட்டணமும் இருக்காது என்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
