ஏ.எஸ்.பன்னீர்செல்வன்
கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு பல்வேறு இழப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். இந்த இழப்புகளில் மிக முக்கியமான இழப்பு என்பது, நமது உணர்வுக்கும் உள்ளத்துக்கும் நெருக்கமான ஒருவர் மறைந்துவிட்டால் அவருக்குக் கடைசியாக முறையான வழியனுப்புகூட செய்ய முடியாத அவலம்தான். இந்த அவலத்திற்கு சமீபத்தில் நானும் உட்பட்டிருக்கிறேன். எனக்கு ஆசிரியராகவும், எழுதுவதற்கு முன்மாதிரியாகவும் திகழ்ந்த சா.கந்தசாமி மறைந்தவுடன் அவருடைய இறுதிச் சடங்குக்குக்கூட செல்ல முடியாத துர்ப்பாக்கிய சூழல் எனக்கு ஏற்பட்டது.
கந்தசாமியைப் பற்றி சுலபமான கட்டுரைகளை எழுத முடியும். அவர் சாகித்திய விருதுபெற்ற எழுத்தாளர். 1939ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள மாயவரம் அருகே பிறந்தார். பூம்புகார் அருகேயுள்ள சாயாவனத்தில் வளர்ந்தார். பின்னர் சென்னைக்கு வந்தார். இந்திய உணவு கழகத்தில் பணியில் சேர்ந்தார். சாயாவனம் என்னும் நாவலை தனது 25ஆவது வயதில் எழுதினார். பின்னர், ஐந்து பெரும் நாவல்களை, தொடர் கட்டுரையையும் எழுதியவர் என்று நம்மால் சுருக்கி எழுதிவிட முடியும். ஆனால், அவை கந்தசாமி என்னும் ஆளுமையின் முழு பரிமாணத்தையும் நமக்குத் தருவதில்லை.
கந்தசாமியின் தனித்த பார்வைகள்
நான் எனக்குக் கிடைத்த சில தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 1980ஆம் ஆண்டிலிருந்து அவருடன் எனக்குப் பழக்கம் உள்ளது. நாங்கள் இருவரும் புத்தகக் காட்சியில்தான் முதன்முதலில் சந்தித்துக்கொண்டோம். ஆரம்பத்தில் வந்த தமிழ் சிறுகதைகளில் தொடங்கி குறிப்பாக ‘குளத்தங்கரை அரசமரத்தில்’ தொடங்கி புதுமைப்பித்தன் வழியாக ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி விரிவாக எடுத்துச் சொன்ன விதம், தமிழ் சிறுகதைகளின் நவீனத்துவம் பற்றி அறிந்துகொள்ள எனக்குப் பெரிய வாய்ப்பை அளித்தது. பின்னர், அவர் மூலமாகவே எனக்கு அறிமுகமான உலகம்தான், நவீன ஓவியம் உலகம். இவை குறித்து சா.கந்தசாமியும், ஓவியர் ஆதிமூலமும் எடுத்துக் கூறிய அளவுக்கு வேறு யாரும் கூறியிருப்பார்களா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
தங்களுடைய அறிவை பகிர்ந்துகொள்வதில் எந்தவித தயக்கமும் இல்லாமல் பெரிய மனதுடன் பகிர்ந்துகொண்ட பெரிய கொடை வள்ளல்கள் இவர்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்திய ஓவிய மரபில் உள்ள இரண்டு சரடுகளை எப்படி சென்னை வாழ் நவீன ஓவியர்கள் இணைத்து புது வடிவத்தைப் பெற்றார்கள் என்பதை கந்தசாமி பலமுறை எனக்கு விளக்கிக் கூறியிருக்கிறார்.
உதாரணமாக, ஆரம்பத்தில் இந்திய ஓவிய மரபு என்ற ஒன்றை நவீன ஓவியர்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னை ஓவியக் கல்லூரிக்கும், கொல்கத்தா ஓவியக் கல்லூரிக்கும் தலைவராக இருந்த ஹேவல் என்பவர் முயற்சி செய்கிறார். அதை கவிஞரும், மாபெரும் சிந்தனையாளருமான ரவீந்திரநாத் தாகூர் நிராகரிக்கிறார். அவரின் பார்வைப்படி, தேசிய குறியீட்டுக்குள் கலையை அடக்குவது தங்களை ஒரு லேபிளுக்குள் சுருக்கிக்கொள்ளக் கூடிய அபாயம் கொண்டது என எடுத்துக்கூறுகிறார்.
இந்த இரண்டு பார்வைகளும் ஒன்றிணைந்து அதாவது ஏதோ ஒரு விதத்தில் தங்களுக்கான அடையாளமும், மற்றொரு விதத்தில் பொதுவான உலகம் தழுவிய பார்வையும் இருக்கக் கூடிய விஷயமாக சென்னை ஓவியக் கல்லூரியின் பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சா.கந்தசாமி எனக்கு விளக்கிக்கூறினார்.
கந்தசாமியிடம் எனக்குப் பிடித்தது என்னவென்றால் எந்தவொரு ஆழமான, தீர்க்கமான விஷயங்களையும் எளிமையான மொழியில் புரியும்படி கூறிவிடுவார். அவருடைய கருத்தின்படி, தீவிரமாகச் சிந்தித்து தெளிவான முடிவெடுத்து ஆழமான பார்வை கிடைத்துவிட்டால், அதை விளக்க எளிமையான சொற்கள் போதும் என்பதே. கணியன் பூங்குன்றன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னதும், வள்ளுவன் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்றதும், ஒளவையார் அறம் செய்ய விரும்பு என்று கூறியதும் மிக உயரிய கருத்துகளே..ஆனால், அவர்கள் சொன்னதற்கு எளிமையான வார்த்தைகளே போதுமானதாக இருந்தது. ஆகவே, உயரிய கருத்துகளைக் கூற எளிய சொற்கள் போதும் என்பதே அவருடைய எண்ணம்.
இந்த எண்ணத்துடன்தான் அவர் தன்னுடைய கதைகளையும் எழுதினார்..திரைப்படங்களையும் எடுத்தார். அவர் சுடுமண் சிலைகளைப் பற்றி எடுத்த ஆவணப்படம் மிக மிக முக்கியமான ஒன்று. அந்த ஆவணப்படத்தில்தான் தமிழின் விஷுவல் எஸ்திடிக் (visual aesthetic) எனப்படும் ஓவியம் சார்ந்த அல்லது சிற்பம் சார்ந்த அழகியல் எவ்வாறு தொடர்ந்து இருக்கிறது என்பதை நமக்கு எடுத்துச் சொல்கிறது.
சுற்றுச்சூழல் மரபின் முதல் நாவல்
இவருடைய முதல் நாவலான சாயாவனம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நாவல். வெளிவந்த ஆண்டு 1968. அப்போது, உலகத்தில் யாரும் சுற்றுச்சூழலைப் பற்றி பெரிதாக எழுத ஆரம்பிக்கவில்லை. சுற்றுச்சூழல் தனியான கவலைக்குரிய விஷயமாக மாறவில்லை. ஆனால், இந்திய மரபில் தோன்றிய முதல் சுற்றுச்சூழல் நாவல் சாயாவனம்தான். அவரிடம் அதுபற்றி ஒருமுறை கேட்டபோது, ‘எனக்கு இதுபோன்ற லேபிள்கள் மீதெல்லாம் நம்பிக்கையில்லை. நான் எழுதியது என்னவென்றால், என்னைச் சுற்றி நடக்கும் பேரழிவைப் பதிவு செய்ய வேண்டிய சாட்சியாக இருப்பதை மறக்கக் கூடாது என்பதுதான். அந்த மரபில்தான் சாயாவனத்தை எழுதினேன்.
இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையப்படுத்தி தஞ்சை மாவட்ட கிராமியப் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல் எல்லா காலத்திலும் பொருத்தமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. இதற்குக் காரணம் நேரடியாக சில விஷயங்களின் சாட்சியாக என்னுடைய எழுத்து இருந்ததுதான்’ என்றார்.
கந்தசாமியின் காட்சி விவரணைகள்
சா.கந்தசாமியின் எழுத்துத் திறத்தைப் பற்றி எழுத்தாளர் பாவாணன் ஒருமுறை தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டதை நாம் நினைவில்கொள்ள வேண்டியது அவசியம். “தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகள், துல்லியமான தகவல்கள் மற்றும் உரையாடல்கள் மூலம் முன் நகரும் கந்தசாமியின் கலை ஆளுமை கவனத்திற்குரியது. அவர் விட்டுச் செல்லும் இடைவெளிகள் நம் கற்பனைக்கு முழு அளவில் இடமளிக்கின்றன. மரங்களோடு பின்னிப் பிணைந்து வேர்கள் எங்கிருக்கின்றன எனக் கண்டறியா வண்ணம் அடர்ந்து செழித்திருக்கும் பல வகையான கொடிகளை அறுத்தல், தேனடையை கலைத்தல் என நாவலில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் தன்னளவில் குறியீட்டுத் தன்மை கொண்டதாகவே உள்ளது.
இப்படி ஒரு தோப்பை அங்குலம் அங்குலமாக அழிக்கும் காட்சிகளை ஒரு படைப்பாளி தொகுத்து எழுத வேண்டிய அவசியம் என்ன என்று யோசிக்கும்போது அதன் படிம எல்லைகளை பல நிலைகளில் விரிவாக்கிக்கொள்ள முடியும். சாயாவனம் ஒரு தோப்பு அல்ல. நம் நாடு, நம் மண் என்ற குறியீடாகப் பார்க்கும்போது இந்த அழிவின் வலியை நம்மால் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். விவசாய சமூகத்தில் எந்திரங்களை மூலதனமாகக் கொண்டு தொழில் சமூகத்தின் நுழைவால் நிகழ்ந்த ஆதாயங்களையும் இழப்புகளையும் தொகுத்துக்கொள்ளவும் முடியும்.
தன்னை நிலைநாட்டிக்கொள்ளும் முனைப்பில் இரண்டு யுகங்கள் மோதி ஏதோ ஒரு சமரசப் புள்ளியில், இரண்டாம் யுகம் தனது பயணத்தைத் தொடங்கி விரிகிறது. புளியந்தோப்பு அழிந்த பிறகு கூட புளி கிடைக்கிறது. ஆனால், அது ஒரே மரம் வழங்கும் தூய புளி அல்ல. விற்பனைக்காக பல நூறு இடங்களில் இருந்து திரட்டப்பட்டு தொகுக்கப்பட்டு மூட்டை மூட்டையாகப் பிரிக்கப்பட்டு அனுப்பப்படும் சிறு சரக்கு. தூய புலியின் ருசிக்கு பழகிய நாக்குக்கு அதன் பன்மை ருசியை ஏற்றுக்கொள்வது அசாத்தியமாக இருக்கிறது.
புளியை வாயிலேயே வைக்க முடியல என்று நாவலின் இறுதிக் காட்சியில் குறைபட்டுக்கொள்ளும் குரல் மிகவும் முக்கியமானது. அது எல்லாத்துலயும் கறுக்கிகிட்டியே… இன்னுமா இங்கிருந்து அனுப்பப் போற என்று சுட்டிக்காட்டும் ஆற்றின் நாட்டாண்மையின் குரல் இனி ஒருபோதும் திரும்பாத இறந்த காலத்தையும், பன்மை ருசிக்குப் பழகி மானுடம் வாழ வேண்டிய நெருக்கடிகளையும் கொண்ட நிகழ்காலத்தையும் முன்வைக்கிறது’ இவ்வாறு பாவாணன் தன்னுடைய கருத்தைத் தெரிவிக்கிறார்.
சாயாவனத்தில் மட்டும் இதுபோன்ற நுட்பமான விஷயங்கள் வருவதில்லை. அவருடைய மற்றொரு நாவலான தொலைந்துபோனவர்களை எடுத்துக்கொண்டாலும் நாஸ்டாலஜியா என்ற மறைந்துபோன காலத்தைப் பற்றி அவருக்கு எந்தவிதமான ரொமான்டிக் பார்வையும் இல்லை. கடந்த சென்ற விஷயங்கள் எப்போதும் திரும்ப வராது என்பதில் அவருக்கு இருந்த உறுதி அவருடைய எழுத்தில் விரிவாக வெளிப்பட்டது. அவருடைய எழுத்துகள் நம்பிக்கை தரக்கூடியவையாக இருந்தாலும், பொய் நம்பிக்கை தரக்கூடியவையாக மாறவே இல்லை. அவருடைய கலைத்தன்மையின் அடிநாதமாக இருப்பது அவருடன் எழுத்தின் நம்பிக்கைகளும், அது தர மறுத்த பொய் நம்பிக்கைகளும்தான் என அறுதியிட்டு உறுதியாகக் கூறலாம்.
அவருடைய முயற்சியில் பல்வேறு விஷயங்கள் நடந்தாலும் தமிழில் வந்த ஆட்டோ பயோகிராபி எனப்படும் சுய வரலாறுகளை கந்தசாமி தொகுத்து சாகித்திய அகாடமிக்காக வெளியிட்ட புத்தகம்தான் என்னை கவர்ந்தது. அதில் அனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் தொடங்கி கலைஞரின் நெஞ்சுக்கு நீதி உட்பட பல்வேறு ஆளுமைகளில் வரலாற்றைப் பதிவு செய்கிறார். ஒவ்வொரு சுய வரலாறும் ஏதோ ஒரு வகையில் கடந்த 300 வருடங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட வெவ்வேறு மாற்றங்களை பதிவு செய்யும் அற்புத ஆவணங்களாக மாறுகின்றன.
வ.உ.சி பற்றிய குறிப்பில், இன்றைக்கு மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதும் சவார்க்கர் கூட்டம் அதிகரித்திருக்கும் காலத்தில் மன்னிப்பு கேட்க மறுத்து சுயமரியாதைக்கு எந்த பங்கமும் ஏற்பட விடாமல் தன்னுடைய போராட்டத்தை நடத்திய விதத்தை, அந்த சுயசரிதை எவ்வாறு எடுத்துக்காட்டுகிறது என்பதை படம்பிடித்திருக்கிறார் கந்தசாமி. அனைவரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகமாக சா.கந்தசாமி எழுதிய சாகித்ய அகாடமியில் வெளியிட்ட இந்த புத்தகத்தைக் கூறுவேன்.
அவரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது வந்த இன்னொரு விஷயம் என்னவென்றால் ஓவியத்தில், இசையில், எழுத்தில் அவருக்கு ஈடுபாடு உண்டு என்பது தெரியும். ஆனால், தொழில்நுட்ப வரலாற்றிலும் அவருக்கு மிகப்பெரிய ஈடுபாடு இருந்தது. அச்சு எந்திரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பல்வேறு வகைகளில் சிந்தித்திருக்கிறார். இதைப் பற்றி விரிவாகவும் பேசியிருக்கிறார்.
அவரின் பார்வையில் தொழில்நுட்ப மாற்றமும், பொருளாதார மாற்றமும் ஏதேனும் ஒரு விதத்தில் அனைவரின் வாழ்க்கையிலும் வரக்கூடியவைதான். அவருடைய பார்வையில் சாயாவனம் என்பது ஒருபுறம் சுற்றுப்புறத்தைப் பற்றி இருந்தாலும் மறுபுறம் பொருளாதாரத் தாக்கங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் எவ்வாறு நம்மை பாதிக்கிறது என்பதை பதிவு செய்யும் முயற்சிதான் என்று கூறுகிறார். இவ்வாறு பல நிலைகளை ஒன்றிணைத்து நமக்கான அற்புத படைப்புகளை நெய்த கந்தசாமி சென்ற வாரம் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.

கட்டுரையாளர் : தி இந்து ஆங்கில இதழின் வாசக ஆசிரியர் (Readers Editor).