மீண்டும் சவுக்கு சங்கருக்கு சிறை!

Published On:

| By Kalai

அவதூறு பரப்பிய வழக்கில் சவுக்கு சங்கரை நவம்பர் 25 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தவர் சவுக்கு சங்கர்.

ADVERTISEMENT

கடந்த 2008-ஆம் ஆண்டு அதிகாரிகள் பேசிக்கொண்ட ஆடியோவை  வெளியிட்ட விவகாரத்தில் சங்கர் கைது செய்யப்பட்டார்.

இதனால், சங்கரை பணியிடை நீக்கம் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து வெளியே வந்த சவுக்கு சங்கர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அரசியல் ரீதியிலான பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வந்தார்.

இதற்கிடையே சமீபத்தில் நீதிமன்றம் மற்றும் நீதிபதி குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை  தாமாக முன்வந்து சவுக்கு சங்கர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து செப்டம்பர் 15-ஆம் தேதி அவருக்கு 6 மாத கால சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து இந்த வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்ட சங்கரிடம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் வழங்கியது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் அளித்த மேல்முறையீட்டு மனுவை நேற்று (நவம்பர் 11) விசாரித்த நீதிபதிகள்,

சவுக்கு சங்கருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய 6 மாத கால சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இதுதொடர்பாக நம்முடைய மின்னம்பலத்தில், ’சவுக்கு சங்கர் தண்டனைக்கு இடைக்காலத் தடை’ என்ற தலைப்பில் நேற்று (நவம்பர் 11) செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதனைத் தொடர்ந்து ஏற்கனவே சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள 4 வழக்குகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்தனர்.

குறிப்பாக  கடந்த 2020-ஆம் ஆண்டு ஈ.பி.எஸ் மற்றும் ஓபிஎஸ் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்தை பதிவிட்டதற்காக இரண்டு வழக்குகளும், 2021-ஆம் ஆண்டு பிரதமருடைய பயண விவரங்களை பொது வெளியில் வெளியிட்டதற்காக 2 வழக்குகளும் பதியப்பட்டன.

இந்த கைது தொடர்பான ஆவணங்களை சிறைத்துறை அதிகாரிகளிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கொடுத்தனர்.

இந்தநிலையில் இன்று (நவம்பர் 12) எழும்பூர் ஐந்தாவது நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.

சவுக்கு சங்கரை வரும் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீண்டும் கடலூர் சிறைக்கே அனுப்பப்படுகிறார்.

கலை.ரா

அமித்ஷா சொன்னது என்ன?- அண்ணாமலை விளக்கம்!

நளினி விடுதலை: முகாமுக்கு செல்லும் நால்வர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share