யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். savukku shankar house attack
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் சவுக்கு சங்கர் வசித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த மார்ச் 25-ஆம் தேதி 50 பேர் கொண்ட கும்பல் சவுக்கு சங்கர் வீட்டிற்குள் புகுந்து மலம், கழிவுநீரை கொட்டினர். இவர்கள் தூய்மைபணியாளர்களின் உடை அணிந்திருந்தனர். சவுக்கு சங்கர் தூய்மைபணியாளர்களை இழிவாக பேசியதால் அவர் வீட்டில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சவுக்கு சங்கர் தாயார் போலீசில் புகார் அளித்திருந்தார். சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியதால், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார், செல்வா, கல்யாண், விஜய், பாரதி, தேவி ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். savukku shankar house attack