நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை உயர் நீதிமன்றத்தால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் யுடியூபர் சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்தவர் சவுக்கு சங்கர். இவர், அரசு ஆவணங்களை கசியவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, கடந்த 2008ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தனியார் யுடியூப் சேனல்களில் அரசிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.
இதில், கடந்த ஜூலை 22ம் தேதி, ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்திருக்கிறது என்று யுடியூப் சேனலில் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்து, கடந்த செப்டம்பர் 15ம் தேதி, அவருக்கு, நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக 6 மாத சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் நிர்வாக காரணங்கள் மற்றும் அச்சுறுத்தலால் சவுக்கு சங்கர், மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த செப்டம்பர் 16ம் தேதி முதல் சவுக்கு சங்கர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் செப்டம்பர் 24ம் தேதி, கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர், சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு பணி நீக்கம் செய்வதற்கான Show cause நோட்டீசை வழங்கச் சென்றனர். அதை அவர் வாங்க மறுத்ததால், அவர் அடைக்கப்பட்டிருக்கும் சிறையின் அறை வாசலில் அதை ஒட்டிச் சென்றனர்.
இதற்கிடையில் சவுக்கு சங்கரை சிறையில் பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு கடலூர் மத்திய சிறை நிர்வாகம் தடை விதித்திருப்பதாக தெரிகிறது. இதையடுத்து இன்று முதல் கடலூர் மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள்.
கடலூர் மத்திய சிறை வட்டாரத்தில் இதுகுறித்து நாம் விசாரித்தோம்.
“நேற்று (செப்டம்பர் 29) மாலை அவரது வழக்கறிஞர் சங்கரை சிறையில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போதுதான் இந்த உண்ணாவிரத முடிவு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இன்று காலை தனது சிறை அறையில் உள்ள பழங்கள், பிஸ்கட்டுகளை எல்லாம் அருகே இருக்கும் கைதிகளுக்கு கொடுத்துவிட்டு, அதிகாரிகளிடம், ‘நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்’ என்று அறிவித்தார். அதிகாரிகள் சொல்லியும் உணவை அவர் ஏற்கவில்லை. தண்ணீர் மட்டும் அருந்துகிறார்.
சங்கரை லஞ்ச ஒழிப்புத் துறை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதற்கான ஷோகாஸ் நோட்டீஸ் சில நாட்களுக்கு முன் சிறையில் உள்ள அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளிடம் இருந்து அதை பெற அவர் மறுத்துவிட்டார். எனவே அவரது சிறை சுவரில் அந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் அந்த நோட்டீசை சவுக்கு சங்கர் கிழித்து எறிந்துவிட்டார்.
சிறையின் விதிமுறைகளை கைதிகள் பின்பற்றவேண்டும். ஆனால் அதை மீறி சங்கர் தனக்கு வழங்கப்பட்ட நோட்டீசை கிழித்துப் போட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக குறிப்பிட்ட காலம் வரை அவரை பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டது. பார்வையாளர்கள் சந்திப்பதற்குத்தான் தடை விதிக்கப்பட்டதே தவிர, சங்கரின் வழக்கறிஞர் சிறைக்குள் முறையான இடைவெளியில் அவரை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
சவுக்கு சங்கர் தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரியும், பார்வையாளர்கள் தன்னை சந்திக்க அனுமதி கோரியும் சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். அந்த மனுவை நாங்கள் மேலிடத்துக்கு அனுப்பியுள்ளோம். ஆனால் உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றக் கோரி அவர் உண்ணாவிரதம் இருக்கிறார். மேலிட உத்தரவின்படி செயல்படுவோம். அதேநேரம் இன்று முதல் சிறைக்குள் உண்ணாவிரதம் இருக்கும் சங்கரை சிறை மருத்துவமனை மருத்துவர்கள் செக் செய்து வருகிறார்கள். அவரை உணவு உட்கொள்ளும்படி வற்புறுத்தியும் அவர் மறுத்து வருகிறார். தொடர்ந்து அவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சிறைக்குள் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்” என்கிறார்கள்.
ஜெ.பிரகாஷ், வணங்காமுடி