சவுக்கு சங்கர் வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 15) கேள்வி எழுப்பியுள்ளது. பெண் போலீசாரை அவதூறாக பேசிய யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குண்டாஸை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தாயார் கமலா தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார். இந்த மனு கடந்த ஜூலை 10ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் இருந்து விலகிக்கொள்வதாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தார். தான் இடம்பெறாத அமர்வு முன் இந்த மேல்முறையீட்டு மனுவை பட்டியலிட தலைமை நீதிபதிக்கு கோப்பை அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் இம்மனு இன்று (ஜூலை 15) நீதிபதிகள் சுதன்சு துலியா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, “சவுக்கு சங்கர் இப்படி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வார்த்தைகளை நான் பயன்படுத்த விரும்பவில்லை. பெண் காவலர்களை பற்றி அவதூறாக பேசி நேர்காணல் கொடுத்துள்ளார்” என்று வாதாடினார்.
சவுக்கு சங்கர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த்தா டேவ் ஆஜராகி, “சவுக்கு சங்கர் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கிறது. அவசரம் கருதி இவ்வழக்கை விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இந்த வாதங்களைத் தொடர்ந்து, “நீங்கள் மிகவும் கடுமையாக நடந்துகொள்ள முடியாது. சரியாக நடந்துகொள்ள வேண்டும்.
தடுப்பு காவலில் வைப்பது என்பது தீவிரமான விஷயம். அவர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தாரா? சவுக்கு சங்கரின் நடத்தை மன்னிக்க முடியாதது தான். அதேசமயம் அவருக்கு ஏன் இடைக்கால நிவாரணம் வழங்கக் கூடாது” என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“சினிமாவை விட்டு விலக நினைத்தேன்” – பார்த்திபன் எமோஷனல்!
காவிரி விவகாரம்: துரைமுருகன் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்!