“கழிவுகள் கொட்டியதற்கு இவர்கள்தான் காரணம்” : சவுக்கு சங்கர் பேட்டி!

Published On:

| By Kavi

யூடியூபர் சவுக்கு சங்கரின் சென்னை வீட்டில் துப்புரவு தொழிலாளர்கள்  என சுமார் 30 பேர் புகுந்து மலம், சாக்கடையை கொட்டிவிட்டு சென்றிருக்கின்றனர்.  அவரது வீட்டுக்குள் சாக்கடை கழிவுகள் கொட்டிக்கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.  இந்த சம்பவத்தின் போது சவுக்கு சங்கரின் தாயார் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். savukku shankar accuses selvaperundhagai

இதற்கிடையே மூன்று மாதங்களுக்கு முன்பு  ‘சவுக்கு மீடியா’ யூடியூபில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில்,  கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கும் திட்டம் குறித்து சங்கர் பேசியிருந்தார். 

“மாதம், மாதம் எந்த வேலையும் செய்யாமல் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து, குடித்துவிட்டு வீட்டில் இரு என்றால் இந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு எல்லாம் கசக்குமா… இந்த ஸ்கீமை போடும்போது  வீடியோ எடுப்போம்,  அப்போது “ஸ்டாலின் ஐயா எங்களுக்கு தந்தை போல இருந்து இதெல்லாம் செய்கிறார் என்று கொடுத்த காசுக்கு மேல் நடிக்க வேண்டும் என்று சொல்லி  7 ஆண்டுகளுக்கு மாதம் மாதம்   50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இந்த ஏழை தொழிலாளிகளுக்கு  கசக்குமா” என்று  கூறியிருந்தார். 

அதோடு,  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகையால் கொண்டுவந்த திட்டம் இது. இதில் ஊழல் செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். 

இந்நிலையில் துப்புரவு தொழிலாளிகளை இழிவாக பேசுவதா என சவுக்கு சங்கருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்த நிலையில் இன்று இதுபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

இந்தநிலையில் சவுக்கு சங்கரின் தாயார் சென்னை   காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக கீழ்ப்பாக்கத்தில்  இன்று (மார்ச் 24) மாலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சவுக்கு சங்கர்,  “கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கும் திட்டத்தை உருவாக்கியவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை. இந்த திட்டத்தால் சுமார் ரூ.150 கோடி ரூபாய் பயனடைகிறார். 7 ஆண்டுகளுக்கு இதன்மூலம் செல்வப்பெருந்தகைக்கு வருமானம் வரும்.  இந்த திட்டத்தால் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் பயனடையமாட்டார்கள். ஏமாற்றப்படுவார்கள் என இரண்டு மூன்று வீடியோக்கள் போட்டிருந்தேன். 

முதல் வீடியோ வெளியிட்ட பிறகு சென்னை மாவட்ட காவல்துறையில்  என் மீது ஒரு வழக்கு போடப்பட்டது.  சுத்திகரிப்பு தொழிலாளிகளை நான் அவமரியாதையாக பேசி  கலவரத்தை தூண்டிவிட்டேன் என்று  அதில் தெரிவித்திருந்தனர். 

இந்த வழக்கில் என்னை கைது செய்து நீதித்துறை 11ஆவது நடுவர் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்ற போது , ‘சுத்திகரிப்பு தொழிலாளிகளை இழிவாக பேசியதாக ஒரே ஒரு வரியை காட்டுங்கள் என்று நீதிபதி கேட்டார். 

காவல்துறையின் ரிமாண்ட் கோரிக்கையை நிராகரித்தார்.  அதன்பிறகு இந்த ஊழல் தொடர்பாக கூடுதலாக  சில தகவல்கள் கிடைத்தன. அந்த தகவல் என்னவென்றால், மொத்தம் 230 பேர் இந்த திட்டத்தின் பயனாளிகள் ஆவர். அதில் 130 பேர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்தவர்கள். எஸ்.சி/எஸ்.டி கம்யூனிட்டியை சேர்ந்தவர்கள். வழக்கறிஞர்கள் உட்பட நல்ல தொழிலில் இருக்கிறார்கள். மத்திய மாநில அரசுகள் இந்த சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு கொடுக்கக்கூடிய மானியத்தை செல்வப்பெருந்தகை கொள்ளையடித்திருக்கிறார் என்று சொன்னேன். 

இதன்பிறகு, செல்வப்பெருந்தகை என் மீது கோபமாக இருக்கிறார் என பல மிரட்டல்கள் வந்தன. முதலில் செல்வப்பெருந்தகை சென்னை காவல் ஆணையர் அருணிடம் கேட்டுக்கொண்டதன்  பேரில் தான் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  நீதிமன்றம் பிறப்பித்த நான்பெயிலபிள் வாரண்ட்டின் அடிப்படையில்,  மதுரை சிறையில் இருந்த போது சென்னை மாநகர சைபர் க்ரைம் ஆய்வாளர்கள், 4,5 முறை விமானம் மூலம்  மதுரைக்கு வந்து  காலையில் ஒரு கைது, மாலையில் ஒரு கைது என என்னை இரண்டு முறை கைது செய்தனர். 

இந்த காவல் ஆய்வாளர்களுக்கு விமான டிக்கெட் வாங்கித் தந்ததே செல்வப்பெருந்தகைதான் என எனக்கு தகவல் தெரியவந்தது.  ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருக்கிறது. இந்த தொடர்பை நேரடியாக அறிந்தவர் ஆம்ஸ்ட்ராங் வழக்கின் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் . இந்த விஷயத்தை  திருவேங்கடம் வெளியில் சொல்லிவிடுவாரோ என்பதால் தான் திருவேங்கடத்தை ஆணையர் அருண் என்கவுண்ட்டர் செய்தார். 

இன்று காலையில் எனது வீட்டில் நடந்த தாக்குதலுக்கு பின்னணியில் செல்வப்பெருந்தகையும், அருணும்தான் இருக்கிறார்கள்.  இந்த வீட்டுக்கு நான் குடியேறி மூன்று மாதங்கள்தான் ஆகிறது. இந்த முகவரியை நான் எந்த இடத்திலும் பதிவு செய்யவில்லை. அப்படி இருக்கையில்,  நன்றாக திட்டமிட்டு எனது  புகைப்படங்களுடன் கூடிய பதாகைகளுடன் இரண்டு வாகனங்களில் அழைத்து வந்தனர். காவல்துறையை தவிர எனது வீட்டு முகவரியை வேறு யாரும் அவர்களுக்கு கொடுத்திருக்க முடியாது. 

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இருக்கக்கூடிய செல்வப்பெருந்தகை ஆதரவாளரான வாணிஸ்ரீ விஜயகுமார்  என்ற வழக்கறிஞர் சுத்திகரிப்பு தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தார். அதன் பிறகுதான் என் வீட்டுக்குள் வந்தனர். 

காவல்துறை நினைத்திருந்தால் இந்த குற்றத்தை தடுத்திருக்க முடியும். இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்று உளவுத்துறைக்கு தெரியாதா?  இதனால் தான் செல்வப்பெருந்தகை, அருண் தூண்டுதலின் பேரில்தான் என் வீடு தாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறேன்.  இந்த தாக்குதல் நடந்த போது நான் வீட்டில் இருந்திருந்தால் என் உயிருக்கு ஆபத்தாகியிருக்கும்” என்று கூறியுள்ளார். 

இதற்கிடையே சவுக்கு சங்கரின் வீட்டில் மலம் கலந்த சாக்கடையை கொட்டியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விசிக தலைவர் திருமாவளவன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி  ஆனந்த், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  savukku shankar accuses selvaperundhagai

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share