பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக யூடியுபர் சவுக்கு சங்கர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரால் இன்று (மே 4) அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு ஊழியராக பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சனங்களை மிக காட்டமாக முன்வைத்து வருகிறார்.
மேலும் அரசியல் பிரபலங்கள் மட்டுமல்லாமல் காவல் துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளையும், அரசியலுக்கு வரும் திரை நட்சத்திரங்கள், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சவுக்கு சங்கர் பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வந்தார்.
சமீபகாலமாக ஆளும் கட்சியான திமுகவுக்கு எதிராகவும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் அவர் பேசி வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.
கடந்த சில தினங்களாக அவருடன் இணைந்து பணியாற்றும் ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அவர், “திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் சவுக்கு மீடியா ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம்.
திமுகஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம்.
சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்யுமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை தேனியில் இன்று அதிகாலை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு அழைத்து செல்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!