நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மைக் சின்னத்திற்கு பதில், வாக்கு பதிவு இயந்திரத்தில் வேறு மைக் சின்னம் பொருத்தியிருப்பதாக புகார் எழுந்த நிலையில், அதுகுறித்து தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. களத்தில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இதில் கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்துடன் களமிறங்கிய நாம் தமிழர் கட்சிக்கு, இந்த தேர்தலில் மைக் சின்னத்தை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்.
அதன்படி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மைக் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
தேர்தல் ஆணையரிடம் புகார்!
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மைக் சின்னத்திற்கு பதிலாக, வாக்கு பதிவு இயந்திரங்களில் வேறு மைக் சின்னத்தை பொருத்தியிருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சங்கர் கடந்த 10ஆம் தேதி தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து புகார் மனு அளித்தார்.
நாதக வாக்கு வங்கியை பாதிக்கும் முனைப்பில் பாஜக
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு ஆன்/ஆஃப் பட்டன் இல்லாத மைக் சின்னத்தை ஒதுக்கியருந்த நிலையில், அதற்கு பதிலாக தற்போது வாக்கு பதிவு இயந்திரங்களில் ஆன்/ஆஃப் பட்டனுடன் இருக்கும் மைக் சின்னம் பொருத்தப்பட்டு வருகிறது.
அதனை தடுத்து நிறுத்தி எங்களுக்கு ஒதுக்கிய மைக் சின்னத்தை பொருத்த நடவடிக்கைகள் எடுக்கும்படி தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எங்களின் வாக்கு வங்கியை பாதிக்கவே பா.ஜ.க. இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார்.
தேர்தல் ஆணையர் விளக்கம்!
இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு இன்று (ஏப்ரல் 12) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நாம் தமிழர் கட்சியின் புகார் குறித்து அவர் பேசுகையில், “நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் மாற்றப்படுவதாக வரும் செய்திகள் உண்மை இல்லை. அக்கட்சிக்கு வழங்கப்பட்ட மைக் சின்னம் தான் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஏப்ரல் மாத மகளிர் உரிமைத் தொகை வழங்க தடையா? : சத்யபிரதா சாகு பதில்!
IPL 2024: நல்லா வாழ்ந்தவன் ‘கெட்டு’ போகக்கூடாது… தெறிக்கும் மீம்ஸ்கள்!