விமர்சனம் : சட்டம் என் கையில் !

Published On:

| By Kavi

உதயசங்கரன் பாடகலிங்கம்

நகம் கடிக்க வைக்கும் ‘த்ரில்லர்’!

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பார்க்க நேரும் திரைப்படமொன்று ஆச்சர்யத்தைத் தருவது மிக அரிதாக நேரும் சம்பவம். அப்போது ஏற்படும் மகிழ்ச்சியை அளவிட முடியாது. நீண்ட நாட்களாகக் காத்திருப்பில் இருந்த ஒரு திரைப்படம் அப்படியொரு அனுபவத்தைத் தரும்போது, ‘இதற்கு முன்னர் வந்திருந்தால் கவனிக்கப்படாமல் போயிருக்குமோ’ என்ற எண்ணம் கூட எழும். ’நாய் சேகர்’ மூலமாகக் கதாநாயகன் அந்தஸ்தை எட்டியிருக்கும் சதீஷ் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் ‘சட்டம் என் கையில்’ படம் அப்படியொரு நிலைக்கு நம்மை ஆளாக்கியது.

’சிக்சர்’ படத்தை இயக்கிய சாச்சி இதனை இயக்கியிருக்கிறார். ஜோன்ஸ் ரூபர்ட் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

எப்படி இருக்கிறது ‘சட்டம் என் கையில்’?!

மெதுவான தொடக்கம்!

ஏற்காடு காவல்நிலையம். மருத்துவமனையில் கர்ப்பிணி மனைவிக்கு உரிய சிகிச்சை தராமல் போனதால் குழந்தை இறந்துபோய்விட்டதாக ஒரு நபர் புகார் அளிக்கிறார். ஆனால், எஸ்.ஐ. பாட்ஷா (பாவெல் நவகீதன்) அவரைத் தாக்குகிறார். அதில் காயம் ஏற்பட்டு, அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
அதேநேரத்தில், கார் ஓட்டி வரும் கௌதம் (சதீஷ்) எதிரே ஹெல்மெட் அணிந்து பைக்கில் வரும் ஒரு நபர் மீது மோதுகிறார். அதன்பிறகு, அந்த நபரின் சடலத்தை காரின் பின்புறம் ஏற்றுகிறார்.

சோதனைச்சாவடியொன்றில் கௌதம் ஓட்டி வரும் காரை வழிமறிக்கிறார் காவலர். அவர் நிறுத்தாமல் செல்லவே, வாக்கிடாக்கியில் தகவல் சொல்கிறார். அதையடுத்து, ஆற்றுப்பாலம் அருகேயிருக்கும் இன்னொரு சோதனைச்சாவடியில் கௌதமின் காரை நிறுத்துகின்றனர் போலீசார். ’உரிய ஆவணங்கள் இருக்கிறதா’ என்று அவரை விசாரிக்கின்றனர்.

இந்த நிலையில், காரின் பின்புறத்தை திறந்து பார்க்க முற்படுகிறார் ஒரு காவலர். அந்த நேரத்தில், பாட்ஷாவின் கன்னத்தில் அறைந்துவிடுகிறார் கௌதம். ‘திக்குவாய்’ என்று சொல்லித் தன்னை கிண்டலடித்ததால் ஆத்திரமடைந்ததாகக் கூறுகிறார்.
அதன்பிறகு, காருடன் கௌதம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு, அவர் மீது பொய் வழக்கு பதிய முயற்சிக்கிறார் பாட்ஷா.

அந்த நேரத்தில் அங்கு வருகிறார் எஸ்.ஐ.நாகராஜன் (அஜய்ராஜ்). அவருக்கும் பாட்ஷாவுக்கும் ஏழாம் பொருத்தம் என்பது கௌதமின் முதல் பார்வையிலேயே தெரிந்துவிடுகிறது.

இதற்கிடையே, ஏற்காட்டின் மையப்பகுதியில் ஒரு இளம்பெண் சடலம் இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. நாகராஜன் அங்கு செல்கிறார். கள நிலைமையை ஆராய்வதுடன், பிரேதப் பரிசோதனைக்கு அந்த உடலை அனுப்பி வைக்கிறார்.

அத்துடன், அந்த பெண்ணின் பெற்றோரும் காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்படுகின்றனர். அவர்களைப் பார்த்ததும் கூனிக் குறுகுகிறார் கௌதம். அந்த இடத்தை விட்டு ஓட முயற்சிக்கிறார்.

சில நிமிடங்கள் கழித்து, அந்த பெண் இறந்ததாகப் பெற்றோரிடம் சொல்கின்றனர் போலீசார். இருவரும் கதறி அழுகின்றனர். அவர்களை ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைக்கிறார் ஒரு கான்ஸ்டபிள்.

இந்த நிலையில், கொலையான பெண்ணிடம் செயின் திருடிய நபர் இடம்பெற்ற சிசிடிவி பதிவு கிடைக்கிறது. அதில், குறிப்பிட்ட இடத்திற்குப் பிறகு அந்த நபர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அதையடுத்து, அந்த திருடன் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவரது மனைவியும் மகனும் அழைத்து வரப்படுகின்றனர்.

அது மட்டுமல்லாமல், கௌதம் விபத்து ஏற்படுத்திய இடத்தையும் போலீசார் கண்டறிகின்றனர். அங்கு சில தடயங்கள் கிடைக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, கௌதமின் காரில் செயின் திருடனின் சடலம் இருப்பதைக் காண்கிறார்.

காவல்நிலையத்தில் இருக்கும் கான்ஸ்டபிள்கள் அனைவரையும் வெளியேற்றுகிறார். சந்தேக கேஸில் பிடித்தவர்களையும் விடுவிக்கிறார். அதன்பிறகு என்ன நடந்தது? கௌதம் என்னவானார்? அவர் மீது நாகராஜ் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று நீள்கிறது இப்படத்தின் மீதி.

விபத்து, பலி என்று மெதுவாகத் தொடங்கினாலும், சடலம் இருக்கும் காரோடு கௌதம் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்படும்போது திரைக்கதையில் வேகம் ஏறுகிறது. அதன்பிறகு நிகழும் அடுக்கடுக்கான சம்பவங்கள் நம்மை யோசிக்கவிடாமல் திரையையே வெறிக்கச் செய்கின்றன. அந்த ‘த்ரில்’ கடைசி இருபது நிமிடங்களில் உச்சகட்டத்தை அடைகிறது.

ஆனால், கிளைமேக்ஸ் என்னவென்று தெரிந்தபிறகும் சில நிமிடங்கள் படம் ஓடுவதுதான் கொஞ்சம் எரிச்சலூட்டுகிறது.

வேகமெடுக்கும் ’நடுப்பகுதி’!

’சட்டம் என் கையில்’ படத்தின் சிறப்பே அதன் திரைக்கதை தான். கொஞ்சம் யோசித்தால், இதில் சில லாஜிக் குறைகளைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், படம் பார்க்கையில் நமக்கு அவற்றை யோசிக்கத் தோன்றாது. அந்த அளவுக்குத் திரையில் காட்சிகளை அடுத்தடுத்து நிறைத்து நம் மனதுக்கு அணை போட்டிருக்கிறார் இயக்குனர் சாச்சி.

ஜே.எம்.ராஜாவின் வசனங்கள் மிக இயல்பான பேச்சு நடையில் இருக்கின்றன. பேச்சில், செயல்பாட்டில் தென்படும் அதிகார தோரணையைப் பயன்படுத்தி எரிச்சலூட்டுவது, பயமுறுத்துவது போன்றவற்றை பாவெல் நவகீதன், அஜய்ராஜ் உட்படப் பல பாத்திரங்கள் பேசும் வசனங்கள் வழியே உணர வைத்திருக்கிறது அருமை.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு, படத்தின் பெரும்பகுதி இரவு நேரத்தில் நடப்பதைத் தெளிவாகக் காட்டியிருக்கிறது. அதேநேரத்தில், செயற்கை விளக்குகள் பயன்படுத்தப்பட்டதை நாம் அறியாத அளவுக்குத் திரையில் காட்சிகளை இயற்கை நிகழ்வுகளாகக் காட்ட முயற்சித்திருக்கிறது.

பசர் என்.கே.ராகுலின் கலை வடிவமைப்பு, இதில் காட்டப்படும் காவல்நிலையத்தை உண்மை என்று நம்ப வைக்கிறது. மார்ட்டின் டைட்டஸின் படத்தொகுப்பில் காட்சிகள் சீராக நகர்ந்து நமக்கு கதை சொல்கின்றன. இறுதியாக வரும் பத்து நிமிடக் காட்சிகளைக் கொஞ்சம் செறிவானதாக மாற்றியிருக்கலாம். ஆனால், அது சரிவர விஷயங்களை உணர்த்தாதோ என்று நீட்டி முழக்கியிருக்கின்றனர். அதனைத் தவிர்த்திருக்கலாம்.

இந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் ஜோன்ஸ் ரூபர்ட், ‘அடுத்த காட்சி எப்படியிருக்கும்’ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்விதமாக பின்னணி இசை அமைத்திருக்கிறார். ஒரே இடத்தைச் சுற்றிச் சுற்றி கேமிரா வலம் வந்தாலும், அந்த உணர்வு எழாமல் காப்பாற்றுவது அதுவே.

இது தவிர்த்து டிஐ, விஎஃப்எக்ஸ், ஒப்பனை உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இதில் எளிமையாக, அழகாக அமைந்திருக்கின்றன. கடைசி அரை மணி நேரக் காட்சிகளில் பிரமாண்டத்தைக் காட்டியிருக்க முடியும். ஆனால், பட்ஜெட் கட்டுப்பாடுகள் அதற்குத் ‘தடை’ போட்டிருப்பதை உணர முடிகிறது.

இயக்குனர் சாச்சி இந்தப் படத்தில் உண்மையிலேயே ‘சிக்சர்’ அடித்திருக்கிறார். ஏனென்றால், முதல் படத்தை முழுமையான கமர்ஷியல் படமாகத் தந்திருந்தார். அதில் நகைச்சுவை குறிப்பிடத்தக்க அளவில் வரவேற்பைப் பெற்றது. அந்த நிலையில், குறிப்பிட்ட வகைமையில் ஒரு படத்தைத் தரத் துணிவு வேண்டும். அந்த சவாலில் வென்றிருக்கிறார்.

சதீஷுக்கு இது மறக்க முடியாத படமாக அமைந்திருக்கிறது. ‘டீ’ கப்பை நீட்டும் பாவெல் நவகீதனிடம், ‘காபியா’ என்று கேட்கும்போது மட்டும் ‘பழைய சதீஷ்’ எட்டிப் பார்க்கிறார். மற்றபடி, இதில் ஒரு பாத்திரமாகவே வந்து போயிருக்கிறார்.

பாவெல் நவகீதன் ஆர்ப்பாட்டமாக நடித்து நம்மை ஈர்க்க, ‘சைலண்டாக’ வந்து ‘வயலண்ட்’ ஆக அவதாரம் எடுக்கிறார் அஜய்ராஜ். இருவருமே நடிப்பில் பின்னி எடுத்திருக்கின்றனர்.

கிளைமேக்ஸில் வரும் மைம் கோபி தொடங்கி மறைந்த ராம்தாஸ், பவா செல்லதுரை, கேபிஒய் சதீஷ் என்று பலர் இதில் நல்ல நடிப்பைத் தந்திருக்கின்றனர். இந்தப் படத்தில் பெண் பாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. அதனால் ரித்திகா தமிழ்செல்வி, வித்யா பிரதீப்புக்கு பெரிய வேலைகள் இதில் இல்லை.

படத்தின் ஆரம்பக் காட்சிகள் மெல்ல நகர்ந்தாலும், கதையின் முடிச்சு இறுகியபிறகு நடுப்பகுதி வேகமாகத் திரையில் பாய்கிறது; பிறகு, ‘முடிவு என்னவாக இருக்கும்’ என்று நம் பதைபதைப்பை அதிகப்படுத்தும்விதமாகக் கடைசி அரை மணி நேரக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே சொன்னது போன்று இதில் சில லாஜிக் குறைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றைப் புறந்தள்ளலாம்’ என்று சலுகையளிக்கும் அளவுக்கு அமைந்திருக்கிறது ‘சட்டம் என் கையில்’ தரும் காட்சியனுபவம். ஒரு சீரியசான பாத்திரத்தில் சதீஷ் நடித்திருப்பது இப்படத்தின் யுஎஸ்பியாக இருக்கிறது.

தொடக்கம் முதல் இறுதி வரை நாம் நகம் கடிக்கும் வகையிலான ‘த்ரில்லர்’ ஆக அமைந்திருக்கிறது. ஆக, நாம் எதிர்பாராத ஆச்சர்யத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் சாச்சி. வாழ்த்துகள் படக்குழுவினருக்கு..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

யூடியூபர்கள் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்களா? – கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

கொடுமை தாங்க முடியாமல் ஜெயம் ரவி பிரிந்தாரா? – மெளனம் கலைத்த ஆர்த்தி

செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் – போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?: ஈபிஎஸ் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share