தேர்தல் அறிவிப்பு.. பொன்முடி அமைச்சராவதில் சிக்கலா? – சத்யபிரதா சாகு விளக்கம்!

Published On:

| By Selvam

தேர்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் பொன்முடி அமைச்சராக பதவியேற்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று (மார்ச் 16) தெரிவித்துள்ளார்.

டெல்லியில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதியை இன்று (மார்ச் 16) தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி, 2024ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். இந்த தேர்தல் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனைப்போன்று கன்னியாகுமரிக்கு உட்பட்ட விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், “நாடு முழுவதும் உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளிடமும் கருத்துகளை பெற்றுதான் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு அலுவலகங்களில் இருந்த முதலமைச்சர், அமைச்சர்களின் படங்கள் அகற்றப்பட்டுள்ளன. தேர்தலுக்காக அரசு வாகனங்களில் கேமரா, ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளை கண்காணிப்பதற்கான கட்டுப்பாடு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

இப்தார் நோன்பு நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கத் தடை ஏதும் இல்லை. 85 வயதான முதியவர்களிடம் தபால் வாக்குகள் வீட்டுக்கே சென்று பெறப்படும். இதுவரை 25 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். வாக்குப்பதிவுக்கு 7 நாட்களுக்கு முன்னதாக பூத் சிலிப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் புதிய திட்டங்களுக்கான அரசாணையை வெளியிடக்கூடாது.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மார்ச் 18ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளோம். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்வு தளப்பாதை கட்டாயம் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்.” எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் பொன்முடி அமைச்சராக பதவியேற்க முடியுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சத்யபிரதா சாகு, “தமிழகத்தில் புதிதாக அமைச்சர் பதவியேற்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மதுபான ஊழல் வழக்கு: கவிதாவுக்கு ED கஸ்டடி!

சித்திரைத் திருவிழா… அக்னி நட்சத்திரம்…  தேர்தல் தேதிக்குள் இருக்கும் சுவாரஸ்யங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share