சாத்தான்குளம் வழக்கு: திறந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு இடமில்லையா?

Published On:

| By Balaji

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சித்திரவதைப்படுத்தப்பட்டதன் காரணமாக அவர்கள் கோவில்பட்டி கிளைச் சிறையில் ஜூன் 22 ஆம் தேதியும், அடுத்த நாளும் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை தானாக முன் வந்து விசாரித்து மதுரை உயர் நீதிமன்றம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தமிழக அரசையே உலுக்கும் வண்ணம் அமைந்துள்ளன. சாத்தான்குளம் கொடூரம் குறித்து மதுரை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகிறது. நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் இவ்வழக்கை விசாரிக்கிறார்கள். அதன்படி கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல்நிலையம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தி அதன் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்துக்கு இமெயில் அனுப்பினார்.

அந்த அறிக்கை பற்றி குறிப்பிட்ட நீதிபதிகள், ‘சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்தது பற்றி விசாரணை செய்யச் சென்ற மாஜிஸ்திரேட்டை போலீஸார் மரியாதைக் குறைவாக நடத்தியிருக்கிறார்கள். விசாரணையை தடுப்பதிலேயே மாவட்ட போலீஸ் நிர்வாகம் எல்லா வகையிலும் ஈடுபட்டிருக்கிறது’ என்று கூறி ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பார்த்திபன், காவலர் மகாராஜன் ஆகியோரை மதுரை உயர் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி அம்மூவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வழக்கு காணொலி முறையில் நடந்தாலும் போலீஸாருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

அதன்படி மூவரும் நேற்று மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். உயர் நீதிமன்றம் உத்தரவிடாதபோதும் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

அரசுத் தரப்பில் போலீஸாருக்காக வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் ஆஜரானார். இவர் துணை முதல்வர் ஓ.பன்னீரின் சம்பந்தி என்பது குறிப்பிடத் தக்கது. “போலீசார் மன அழுத்தத்தில் தவறான வார்த்தைகளைப் பேசியிருக்கலாம்” என்று அரசு வழக்கறிஞர் கூற 3 பேருக்கும் தனித்தனி வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையடுத்து சாத்தான்குளம் கொடூர வழக்கை விசாரித்தனர். மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் அறிக்கை, ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்திடம் மெயில் மூலம் சமர்பிக்கப்பட்ட நிலையில் நீதிபதிகள் இதுகுறித்து,

“பிரேத பரிசோதனை அறிக்கையில், இறந்தவர்களின் உடல்களில் ஏராளமான மோசமான காயங்கள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் இறந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய சாத்தான்குளம் போலீஸ்நிலைய தலைமை காவலர் ரேவதியின் சாட்சியம் போதுமானதாக இருக்கும். எனவே சாத்தான்குளம் போலீசாருக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. ரேவதி சாட்சி சொல்லுகையில் மிகவும் அச்சமடைந்துள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

தொடர்ந்து நீதிபதிகள், “இந்த வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். ஆகவே, ஒரு நொடி கூட தாமதிக்கக் கூடாது. சிபிஐ இந்த வழக்கின் விசாரணையை துவங்கும் வரை நெல்லை சரக டி.ஐ.ஜி இந்த விசாரணையை ஏற்க இயலுமா அல்லது நெல்லை சிபிசிஐடி விசாரணை நடத்த முடியுமா?. ஏனெனில் சிபிஐ முறையான அனுமதி பெற்று விசாரணையை துவங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன” என்று குறிப்பிட்டனர். இதுதொடர்பாக 12 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்ட நிலையில், அரசு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

12 மணிக்கு அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், “சிபிஐ விசாரிக்கும் வரை நெல்லை சரக டி.ஐ.ஜி.யிடம் இந்த வழக்கை ஒப்படைக்கலாம்” என்று நீதிமன்றத்திடம் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், “அவரின் கட்டுப்பாட்டில் 3 மாவட்டங்கள் வருகின்றன. தற்போதைய ஊரடங்கு சூழ்நிலையில் இந்த வழக்கை கையில் எடுப்பதால் அவருடைய வழக்கமான பணிகளில் பாதிப்பு ஏற்படும். அது இந்த வழக்கிலும் தாமதத்தை ஏற்படுத்தலாம். எனவே சி.பி.சி.ஐ.டி. நெல்லை டிஎஸ்பி அனில்குமார், இந்த வழக்கு விசாரணையை தற்காலிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உரிய ஆவணங்களை உடனடியாக டி.எஸ்.பி.யிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் இன்றே அதை கையில் எடுக்க வேண்டும்” என்ற நீதிபதிகள்,

“இறந்தவர்களின் குடும்பத்தினரின் கண்களில் இருந்து வழியும் கண்ணீரானது, சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அனில்குமாரின் கண்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறோம்” என்றும் குறிப்பிட்டனர்.

**வழக்கறிஞர்களுக்கு மட்டும் அனுமதி இல்லையா?**

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஷாஜி செல்லான் இவ்வழக்கு குறித்து மின்னம்பலத்திடம் பேசினார்.

“நான் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தேன். ஆனால் என்னை அனுமதிக்கவில்லை. இப்போது திறந்த நீதிமன்றத்தில் விசாரணைகள் நடக்காது என்பது ஹைகோர்ட் நோட்டிபிகேஷன் ஆகும். அதையும் தாண்டி இது முக்கியமான வழக்கு என்பதால் திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கிறார்கள். அதுவும் குறிப்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பதால் இதை விசாரிக்கலாம் தவறில்லை. ஆனால் இந்த வழக்கு விசாரணையை பார்வையிட வழக்கறிஞர்கள் யாரையும் அனுமதிக்க மறுப்பது என்பது மிகப்பெரிய தவறு.

பத்திரிகையாளர்கள் விசிட்டர்ஸ் கேலரியில் அனுமதிக்கப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட போலீசாரையும் அவர்களுக்காக வாதாடுகிற அரசு வழக்கறிஞரை மட்டுமே வைத்துக் கொண்டு மற்ற வழக்கறிஞர்களை எல்லாம் வெளியே நிறுத்திவிட்டு வழக்கு நடத்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இது இன் கேமரா ப்ரொசீடிங்தான்.

வன்புணர்வு வழக்குகளில் இதுபோன்ற ரகசிய விசாரணைகள் நடத்தப்படும். அதுபோன்ற ரகசிய விசாரணை நடத்த வேண்டிய தேவை இந்த வழக்கில் இல்லை.

**நீதிபதியை பணி செய்யவிடாமல் போலீசார் நேரடியாக மிரட்டிய வழக்கு இது. இந்த வழக்கில் போலீஸார் சார்பாக அரசு வழக்கறிஞர் என்ன சொல்கிறார், நீதிபதி என்ன சொல்கிறார் என்ன விவாதங்கள் நடக்கின்றன என்பதையெல்லாம் வழக்கறிஞர்கள் அறிந்துகொள்ளக் கூடாது என்பது என்ன நியாயம்?** இரட்டைக் கொலையில் உயர் நீதிமன்ற கண்காணிப்பில் ஸ்பெஷல் டீம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று ஏற்கனவே நான் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறேன். அது இன்னும் நம்பர் ஆகவில்லை. நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கே இப்போது நடக்கிறது” என்றவரிடம்,

**“மீடியாக்களை அனுமதித்திருக்கிறார்களே?”** என்று நாம் கேட்டபோது,

“இந்த முக்கியமான வழக்கில் என்ன விவாதம் நடந்தது என்பது மக்களின் பார்வைக்கும், வழக்கறிஞர்களின் பார்வைக்கும் வரவேண்டும். நீதிபதி என்ன கருத்துரைத்தார்,என்ன உணர்ந்தார், அரசு வழக்கறிஞர் என்ன சொன்னார், விவாதத்தில் என்ன நடந்தது என்பதை ஊடகங்கள் முழுமையாக வெளி கொண்டுவர இயலாது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தகவல்களைதான் மீடியாக்கள் வெளியிட முடியும். இந்த முக்கியமான வழக்கில் என்ன நடந்தது என்பதை அறிய நீதிபதிக்கு வாய்ப்பிருக்கிறது. போலீஸாருக்கு வாய்ப்பிருக்கிறது. அரசு வழக்கறிஞருக்கு வாய்ப்பிருக்கிறது. இதில் பொதுவாக அக்கறை காட்டக் கூடிய, வழக்கு தொடுத்திருக்கக் கூடிய வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பு இல்லை என்பது சரியல்லவே. திறந்த நீதிமன்றம் என்றாலே வழக்கறிஞர்கள் உட்பட்டவைதானே?” என்று கூறினார் வழக்கறிஞர் ஷாஜி செல்லான்

**-ஆரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share