நந்தன்: விமர்சனம்!

Published On:

| By Selvam

உதயசங்கரன் பாடகலிங்கம்

ஆக்‌ஷனில் இறங்காத சசிகுமார்!

ADVERTISEMENT

’அயோத்தி’ படத்திற்குப் பிறகு சசிகுமார் நடிப்பில் என்ன படம் வெளியாகும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்கேற்றாற்போல சிறப்பான வெளிப்பாட்டினை ‘கருடன்’ படத்தில் அவர் காட்டியிருந்தார். இதோ, இப்போது அவர் நாயகனாக நடித்துள்ள ‘நந்தன்’ வெளியாகியிருக்கிறது. ‘கத்துகுட்டி’, ‘உடன்பிறப்பே’ படங்களைத் தந்த இரா.சரவணன் இதனை இயக்கியிருக்கிறார். இதில் ‘உடன்பிறப்பே’ படத்தில் சசிகுமார், ஜோதிகா சகோதரன் சகோதரியாக நடித்திருந்தனர்.

முந்தைய படங்கள் போன்று இதிலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள ஒரு கிராமத்தினைக் கதைக்களமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அந்த கிராமத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்பவர்களில் ஒருவராக இருக்கும் ஒரு மனிதர் உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்பதாகக் காட்டியது, ‘நந்தன்’ ட்ரெய்லர்.

ADVERTISEMENT

படமும் அதைத்தான் மையப்படுத்துகிறதா? அந்த வட்டாரத்தில் சாதீய பாகுபாடுகள் இருப்பதாகக் காட்டுகிறதா? எந்த வகையில் சசிகுமார் – இரா.சரவணன் கூட்டணி இப்படத்தை வித்தியாசமானதாகக் காட்டியிருக்கிறது? ’நந்தன்’ இக்கேள்விகளுக்கு என்ன பதில்களைச் சொல்கிறது?

ADVERTISEMENT

அதிகாரத்தை நோக்கிய நகர்தல்!

தஞ்சை வட்டாரத்திலுள்ள வணங்கான்முடி கிராமத்தின் ஊராட்சித் தலைவராகப் பதவி வகித்து வருகிறார் கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்). அவ்வூரில் பெரும்பான்மையாக உள்ள அவரது சாதியினர், தேர்தலுக்கு முன்னதாக ஒன்றுகூடி அப்பதவியை ஏற்கத் தயாராக இருப்பவர்கள் ஏலத்தொகையைக் கட்ட வேண்டும் என்ற வழக்கத்தைப் பின்பற்றுகின்றனர். அதனால், அந்த ஊரில் ஊராட்சித் தேர்தல் நடைபெறுவதே இல்லை.

இந்த நிலையில், அந்த ஆண்டு வணங்கான் முடி ‘ரிசர்வ்’ தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. அதனால், அந்த ஊராட்சியின் தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரே வர முடியும் என்ற நிலைமை உருவாகிறது. கோப்புலிங்கம் அதனை ஏற்கத் தயாராக இல்லை.

பதவி தன் பெயரில் இல்லாவிட்டாலும், அதன் அதிகாரம் தன் குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமாக வேண்டுமென்ற நோக்கத்தோடு செயல்படுகிறார் கோப்புலிங்கம். தன்னிடம் வேலை பார்க்கிற, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அம்பேத்குமாரை (சசிகுமார்) தேர்தலில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்குமாறு செய்கிறார்.

‘கூழ் பானை’ என்று கோப்புலிங்கத்தாலும், இதர மக்களாலும் அழைக்கப்படுகிற அம்பேத்குமார், தன் மனைவி செல்வி (ஸ்ருதி பெரியசாமி), மகன் அழகன் (மாதேஷ்) உடன் ஒரு குடிசையில் வாழ்ந்து வருகிறார்.

குடும்பம், உறவினர்கள், ஊராரைக் காட்டிலும் கோப்புலிங்கத்திற்கும் அவரது வீட்டிலுள்ளவர்களுக்கும் சேவையாற்றுவதையே பெரிதாக நினைக்கிறார். அப்படிப்பட்டவர் தனது நிலையில் இருந்து இறங்கி வருகிற சூழலொன்று உருவாகிறது.

ஊராட்சித் தலைவரானாலும், அதற்குரிய அதிகாரமோ, மரியாதையோ அம்பேத்குமாருக்குக் கிடைத்துவிடாமல் தடுக்கிறார் கோப்புலிங்கம். அவரது சாதியினரும் அதற்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

ஒருநாள் அம்பேத்குமாரின் பாட்டி இறந்து போகிறார். அவரது சடலத்தைத் தகனம் செய்ய சுடுகாட்டுக்குச் செல்கின்றனர். அப்போது அடைமழை பெய்கிறது.

வேறு வழியில்லாமல், கோப்புலிங்கம் சாதியினர் பயன்படுத்தும் தகனமேடையைப் பயன்படுத்த நினைக்கிறார் அம்பேத்குமார். ஆனால், கூரை வேயப்பட்ட அந்த இடம் தங்கள் சாதிக்கானது’ என்று கூறி சிலர் அனுமதி மறுக்கின்றனர். கோப்புலிங்கத்தைச் சந்தித்து, தனது நிலையைச் சொல்கிறார் அம்பேத்குமார். அவரும் ‘அது தங்கள் சாதிக்கானது’ என்று சொல்லி மறுத்துவிடுகிறார்.

அடுத்தநாள், வட்டார வளர்ச்சி அலுவலர் மருதுவைச் (சமுத்திரக்கனி) சந்தித்து விஷயத்தைச் சொல்கிறார் அம்பேத்குமார். அதையடுத்து, அக்கிராமத்திலுள்ள புறம்போக்கு நிலமொன்றை அம்பேத்குமாரின் சாதியினர் சுடுகாடாகப் பயன்படுத்த அலுவலர் அனுமதி கொடுக்கிறார்.

ஆனால், அந்த இடத்தை ஆக்கிரமித்து பயிர் செய்து வருகிறார் கோப்புலிங்கம். மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட, அவரும் அவரது உறவினர்களும் கொந்தளிக்கின்றனர்.

’உடனடியாக அம்பேத்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால், அவரும் அவரது உறவினர்களும் வசிக்கும் தனது நிலத்தை விட்டு வெளியேற வேண்டும்’ என்கிறார் கோப்புலிங்கம்.

அம்பேத்குமார் அதனைச் செய்தாரா, இல்லையா என்று சொல்கிறது இப்படத்தின் மீதிப்பாதி.

அரசியல், சமூகம் குறித்து புரிதல் சிறிதுமற்ற அம்பேத்குமார் எனும் நபர், அதிகாரத்தை நோக்கி நகர்வதைச் சொல்கிறது ‘நந்தன்’. அதனால்,  அவரும் அவரைச் சார்ந்தவர்களும் ஒடுக்கப்படுகிற, அவர்களது அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகிற காட்சிகள் இக்கதையில் அளவுக்கு அதிகமாக உள்ளன. அதுவே இப்படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

அதனைக் கடந்துவரத் தயார் என்றால், இப்படத்தை இரண்டு மணி நேரம் காண்பதில் பெரிதாகத் தடைகள் இருககாது.

யார் இந்த ‘நந்தன்’?

மேற்சொன்ன கதையில் நாயகனின் உறவினராக ஒரு இளைஞர் வருகிறார். அவரது பெயரே நந்தன் (மிதுன் போஸ்). அப்பாத்திரம் விரும்பிய, செய்ய முனைந்த மாற்றங்களையே இக்கதை பேசுகிறது என்பதால் டைட்டிலில் அதன் பெயரைச் சூட்டியிருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன்.

டைட்டிலை யோசித்தது வித்தியாசமாக இருந்தாலும், திரைக்கதையில் பெரிதாகப் புதிய விஷயங்கள் இல்லை. வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’னில் தனுஷ், வெங்கடேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளை மேலும் அதிகமாக்கி ஒரு முழுப்படமாக ஆக்கினால் எப்படியிருக்குமோ, அந்த வகையில் இதனைத் தந்திருக்கிறார் இயக்குனர்.

’நீங்க முதல்ல உட்காருங்க, அதுக்கு தான் சேர் இருக்கு’, ‘இவன் என்னைக் கழுவிவிட்ட பிறகு இந்த ரூமைக் கழுவி விடு’ என்பது போன்ற வசனங்கள் மிகச்சாதாரணமாகத் தெரிந்தாலும், அவையிரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிரான மனப்பாங்கை வெளிப்படுத்துபவை. அது போன்ற வசனங்கள் இப்படத்தின் பலமாக விளங்குகின்றன.

ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண், படத்தொகுப்பாளர் நெல்சன் ஆண்டனி, கலை இயக்குனர் சி.உதயகுமார் கூட்டணி ஒன்றிணைந்து இயக்குனர் காட்ட விரும்பிய உலகத்தை ‘மிகை’யின்றிக் காட்ட உதவியிருக்கிறது.

கதை, காட்சிகளின் அடிப்படைத் தன்மையை விட்டு விலகாத அளவுக்கு தொழில்நுட்ப அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது அருமை. அது, மொத்தப்படத்தையும் ‘எளிமைமிக்கதாக’ எண்ண வைக்கிறது.

இசையமைப்பாளர் கிப்ரான் பாடல்களில் பெரிதாக வித்தியாசத்தை உணரவைக்காவிட்டாலும், பின்னணி இசையால் படத்தோடு ஒன்ற வைக்கிறார்.

வழக்கமான நாயக பாத்திரமாக இல்லாமல், படம் முழுக்க ஒடுங்கி நிற்கிறவராகத் தோன்றியிருக்கிறார் சசிகுமார். வழக்கமான தெனாவெட்டு, லந்து, கம்பீரத்தைச் சிறிதும் வெளிப்படுத்தாமல் இதில் வந்து போயிருக்கிறார். முக்கியமாக, ஆக்‌ஷன் காட்சிகளில் கூட அமைதியாக இருக்கிறார்.

நாயகியாக வரும் ஸ்ருதி பெரியசாமி, தன் உடல்மொழியால் ஈர்ப்பை உருவாக்குகிறார். அதேநேரத்தில், அவரது உடலில் ஒட்டியிருக்கும் மேக்கப் அதீதமாக இருப்பதைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

‘நந்தன்’ முழுக்க வியாபித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். கொஞ்சம் ‘ஓவர் ஆக்டிங்’ என்று சொல்லத்தக்க வகையில் இருந்தாலும், அவரது வில்லத்தனம் மிரட்டலாக இருப்பது உண்மை.

நந்தன் ஆக வருகிறார் மிதுன் போஸ். வட்டார வளர்ச்சி அலுவராக சமுத்திரக்கனி இரண்டு காட்சிகளில் சற்றே நீளமான வசனங்களைப் பேசுகிறார்.

ஊராட்சி அலுவலகப் பணியாளராக வரும் ஸ்டாலின், சட்டென்று நம் மனதில் பதிகிறார். இது போக ஊரைச் சார்ந்தவர்களாகச் சுமார் 4 டஜன் பேராவது இதில் வந்து போயிருப்பார்கள்

.

ஜி.எம்.குமார், சித்தன் மோகன், சரவண சக்தி, வி.ஞானவேலு, லட்சுமி பாட்டி உள்ளிட்ட சிலரும் இதிலுண்டு. இயக்குனர் இரா.சரவணன் இப்படத்தின் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருப்பதோடு தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

’ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் இதர மக்களும் ஒன்றாகக் கைகோர்த்துச் செயல்படுகிற சமத்துவ சமூகம்’ என்ற நிலையை நோக்கி நகர முனைவதாக, ஒரு கதையைத் திரையில் சொல்லியிருக்கிறார்.

முன்பாதியில் சசிகுமார் பாத்திரத்தைக் காட்டியிருக்கும் விதம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைத்தனத்தைச் சுமந்த மக்களை நமக்கு நினைவூட்டுகிறது. அதேநேரத்தில், பிற்பாதியில் வன்முறையை அதிகளவில் வெளிப்படுத்துவதாக அமைந்த காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே திரையில் காட்டப்படுகின்றன. அப்போது, ‘எதற்கு இந்த சித்தரிப்பு’ என்ற கேள்வி எழுகிறது.

இப்படத்தின் கிளைமேக்ஸ், ‘கூண்டில் இருந்து விடுபட்ட பறவையின் சிறகடிப்பாகவே’ இருந்திருக்க வேண்டும். ஆனால், அதன் பின்னே வருகிற சில மனிதர்களின் வாழ்வனுபவங்கள் காட்சித் துணுக்குகளாகத் திரையில் ஓடுகின்றன. ‘நந்தன்’ காட்டிய உலகில் இருந்து அவை விலகி நிற்கின்றன.

‘சமூகத்தில் மாற்றம் வருமா, வராதா’ என்ற கேள்விக்குப் பதிலேதும் சொல்லாமல் கைகட்டி நிற்கிற நிலையை நம்முள் ஓவியமாக வரைகின்றன. அது, இன்னும் பல கேள்விகளை உருவாக்குகிறது.

அதற்குப் பதிலாக, அந்த துணுக்குகளைப் படத்தின் தொடக்கத்திலோ, இடையிலோ இடம்பெறுமாறு செய்திருக்கலாம்.

போலவே, இன்னும் சில காட்சிகளைச் சேர்த்திருந்தால் இன்னும் கொஞ்சம் முழுமையான கதையனுபவத்தைப் பெற்றிருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது இரண்டாம் பாதி.

இன்றும் நாம் வாழும் சமூகத்தின் ஏதோ ஒருபகுதியில் சமத்துவமற்ற சூழல் நிலவுவதைப் பதிவு செய்ய முயன்றிருக்கிறது ‘நந்தன்’. அது மட்டுமே போதுமென்பவர்கள் இதனைக் காணலாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Ind Vs Ban டெஸ்ட்: அஸ்வின் சுழலில் சிக்கிய வங்கதேசம்… இந்தியா அபார வெற்றி!

இலங்கை அதிபர் தேர்தல்… மகிந்த ராஜபக்சே மகன் படுதோல்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share