”சம்பளம் உயர்த்த மாட்டேன்” : சசிகுமார் சொன்னதன் பின்னணி என்ன?

Published On:

| By uthay Padagalingam

sasikumar confirmed that he shouldnot hike salary

ஒரு திரைப்படம் வெற்றியடைந்துவிட்டால் உடனடியாகத் திரையுலகில் எழுகிற ஒரு கேள்வி, ‘அடுத்த படத்துல ஹீரோ எவ்ளோ சம்பளம் வாங்குவார்’ என்பதே. கடந்த சில ஆண்டுகளில் வெற்றி பெற்ற திரைப்படங்கள், அதில் நடித்த நாயகர்கள் நாயகிகள் அடுத்தடுத்த படங்களில் பெற்ற சம்பளம் குறித்த தகவல்களை அலசினால், அந்த கேள்வியின் முக்கியத்துவம் புரிந்துவிடும். அதனாலேயே, ‘அந்த ஹீரோ அவ்ளோ சம்பளம் கேட்கறார், இவர் இவ்ளோ கேட்கறார்’ என்று சமூகவலைதளங்களில் வெளியாகிற செய்திகள் சட்டென்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. sasikumar confirmed that he shouldnot hike salary

அப்படியொரு சூழலில், ‘அடுத்த படத்தில் நிச்சயமாக என் சம்பளத்தை உயர்த்த மாட்டேன்’ என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் நடிகரும் இயக்குனருமான சசிகுமார். ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கிற விழாவில்தான் இதனை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். அதேநேரத்தில், இப்படத்திற்காகத் தான் பெற்ற சம்பளம் என்னவென்று அவர் பகிரவில்லை.

ADVERTISEMENT

‘சுப்பிரமணியபுரம்’ இயக்கித் தயாரித்த சசிகுமார், அதில் ஜெய்யோடு சேர்ந்து இன்னொரு நாயகனாகவும் திரையில் முகம் காட்டினார். அடுத்து வந்த ‘நாடோடிகள்’ அவரை ஒரு வெற்றிகரமான நடிகர் ஆக்கியது. தொடர்ந்து வெளியான ‘போராளி’, ‘சுந்தரபாண்டியன்’, ‘குட்டிப்புலி’ ஆகியன அவரை நட்சத்திரமாக மாற்றியது. ஆனால், அதற்கடுத்து வெளியான அவரது திரைப்படங்கள் எதுவும் முந்தைய வெற்றிகளைத் தொடவில்லை.

அந்த நிலைமையை லேசாகப் புரட்டிப் போட்டது ‘அயோத்தி’. அப்படம் சுமாரான வசூலைப் பெற்றாலும், விமர்சனரீதியாகப் பெருங்கவனிப்பை ஈட்டியது. அதனையடுத்து வந்த கருடன், நந்தன் படங்களில் சசிகுமாரின் நடிப்பு ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டன.

ADVERTISEMENT

இந்த நிலையிலேயே, அபிஷன் ஜீவிந் இயக்கிய ‘டூரிஸ்ட் பேமிலி’யின் இமாலய வெற்றியால் திரையுலகில் தான் விட்ட இடத்தை மீண்டும் பிடித்திருக்கிறார் சசிகுமார். சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, சௌந்தர்யா சரவணன், யோகலட்சுமி, ராம்குமார் பிரசன்னா எனப் பலர் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது அப்படம்.

தமிழ்நாட்டில் மட்டும் நேற்று வரை ‘டூரிஸ்ட் பேமிலி’ சுமார் 40 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதுவும் முதலிரண்டு வாரங்களை விட மூன்றாவது வார சனி, ஞாயிறுகளில் இரட்டிப்பாக வசூலித்திருப்பதைச் சாதனையாகக் கூறுகின்றனர் திரையுலகினர்.

ADVERTISEMENT

ஆதலால், இந்த நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு ரசிகர்களும் வரவேற்பு தந்திருக்கின்றனர்.

அந்த மேடையில்தான், ’இந்தப் படம் வெற்றி அடைந்ததால் சம்பளத்தை உயர்த்திவிடுவீர்களா’ என்கிற கேள்விக்கு ‘இல்லை’ என்றிருக்கிறார் சசிகுமார்.

‘இது என்னுடைய அல்லது தயாரிப்பு நிறுவனத்தின் வெற்றியாக நினைக்க வேண்டாம். புது இயக்குனர்களுக்கும் தோல்விகளைச் சந்தித்த இயக்குனர்களுக்கும் இப்படம் நம்பிக்கையைத் தந்திருக்கிறது’ என்றிருக்கிறார்.

அதோடு தன் உரையை அவர் நிறுத்தவில்லை.

‘டூரிஸ்ட் பேமிலி முதல் நாளில் இரண்டரை கோடி வசூலித்தது. என்னுடைய இன்னொரு படம் மொத்தமாகவே அவ்வளவுதான் வசூலித்தது’ என்று உண்மையை உடைத்திருக்கிறார். கூடவே சுந்தர பாண்டியன், குட்டிப்புலி வசூலை இப்படம் தாண்டியதாகவும் சொல்லியிருக்கிறார்.

தன்னுடைய பேச்சின்போது, டூரிஸ்ட் பேமிலி போன்று தமிழில் பல குடும்பப் படங்கள் வர வேண்டும் என்றிருக்கிறார் சசிகுமார்.

ஒரு வெற்றி கிடைத்ததுமே அடுத்த படத்தில் ‘ஆக்‌ஷன் ரூட்’டை பிடிக்க எண்ணுகிற நாயகர்கள் சிலர் இருக்க, பகிரங்கமாகத் தன் மனதில் பட்டதைப் பட்டவர்த்தனமாகப் பேசியிருக்கிறார் சசிகுமார்.

இது தொடர வேண்டும். இது போலப் பல நாயகர்களும் வெற்றி பெற்று, இதே மனநிலையோடு திகழ வேண்டும் என்பதே அவா..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share