அயோத்தி: முடிவுக்கு வந்த கதை திருட்டு பிரச்சினை!

Published On:

| By Kavi

சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் சுமாரான வசூலை பெற்று இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

நேற்றைய (10.03.2023) தினம் வழக்கம்போல் அகிலன், கொன்றால் பாவமில்லை, மெமெரிஸ், பியூட்டி, இரும்பன், மான் வேட்டை என ஆறு படங்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

அகிலன் தவிர வேறு எந்தப் படத்திற்கும் ஓபனிங் வசூல் இல்லை. அதனால் பார்வையாளர்கள் கவனம் அயோத்தி படத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

இதற்கு காரணம் எந்தவித விளம்பரங்களும் இல்லாமல் மார்ச் 3 அன்று வெளியான அயோத்தி ஊடகங்களால் உயர்த்திப் பிடிக்கப்பட்டது. படம் வெளியான மறுநாள் அயோத்தி படத்தின் கதை திருடப்பட்டது என்று எழுத்தாளர் மாதவராஜ் தனது முகநூல் பக்கத்தில் எழுத, அயோத்தி படத்திற்கான புரமோஷன் கட்டணமின்றி செய்திகளாக விஸ்வரூபம் எடுத்தது.

ADVERTISEMENT

குற்றசாட்டுக்கு உள்ளான அயோத்தி படத்தின் கதையாசிரியரும், சாகித்ய அகடமி விருது பெற்றவருமான எஸ்.ராமகிருஷ்ணன் எந்த பதிலும் சொல்லாமல் மெளனம் காத்தார். அதேசமயம் கதை திருடப்பட்டதற்கான ஆதாரங்களை தொடர்ச்சியாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு வந்தார் மாதவராஜ்.

 இது சம்பந்தமாக படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் தரப்பில் எந்த பதிலும் கூறவில்லை. இதற்கிடையில் மாதவராஜ் நேற்றையதினம் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

ADVERTISEMENT

அதில், “நேற்று(9.03.2023) அயோத்தி படத்தின் இயக்குனர் தரப்பிலிருந்து என்னுடன் நேரில் பேச விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. 

இன்று (10.03.2023)சென்னையில், சாஸ்திரி பவனில் , டெபுடி லேபர் கமிஷனர் முன்பு எனது கிராஜுவிட்டி வழக்கு குறித்த ஹியரிங் இருப்பதால், நான் சென்னைக்கு வர இருப்பதாக தெரிவித்தேன்.

இன்று காலை என்னை படக்குழுவின் சார்பில் தொடர்பு கொண்டனர். படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன், இயக்குனர் மந்திரமூர்த்தி, துணை இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோருடன் சந்திப்பு நடந்தது. என்னுடன் வழக்கு சம்பந்தமாக வந்திருந்த –  எங்கள் வங்கியில் பணிபுரிந்த – தொழிற்சங்கப் பொறுப்புகளில் இருந்த – தோழர் விஸ்வநாதன்   இருந்தார்.

நடந்த விஷயங்களை இரு தரப்பிலும் பகிர்ந்து கொண்டோம். தயாரிப்பாளர் மிகுந்த புரிதலோடு பேசியது சந்திப்பை அர்த்தமுள்ளதாகவும், இணக்கமானதாகவும் ஆக்கியது. இந்தப் படம் முக்கியமான, அவசியமான படம் என்று எனது பாராட்டுக்களைத் தெரிவித்தேன்.

இந்தப் படத்திற்காக கடும் உழைப்பை செலுத்தியதை, களப்பணி ஆற்றியதை இயக்குனர் மந்திரமூர்த்தி விவரித்தார். 

இயக்குனர் மந்திரமூர்த்தியிடம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கொடுத்த கதை, நான் 2011ல் தீராத பக்கங்களிலும், Bank Workers Unity பத்திரிக்கையிலும் எழுதிய பதிவிலிருந்து எடுத்து எழுதப்பட்ட கதை என்பதும் தெரிய வந்தது.

அயோத்தி படம்  ஓடிடி தளத்தில் வெளியாகும்போது, நிஜத்தில்  பாதிக்கப்பட்ட வட இந்தியக் குடும்பத்திற்கு உதவிய பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம், தோழர்கள் சாமுவேல் ஜோதிக்குமார், சுரேஷ் பாபு ஆகிய இருவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

அதற்கான ஏற்பாடுகளை செய்து  அவர்களுக்கான அங்கீகாரத்தை அளிப்பதாக நம்பிக்கையளிக்கப்பட்டது. 

தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும், இயக்குனர் மந்திரமூர்த்திக்கும் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இராமானுஜம்

கடலூரில் பாமக பந்த் – முறியடித்த போலீஸ்: கள நிலவரம் இதோ…

விமர்சனம் : அகிலன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share