திருவள்ளூர் தொகுதி எம்.பி சசி காந்த் செந்தில் இன்று (செப்டம்பர் 1) 4வது நாளாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்கீடு செய்யாமல் மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. மேலும் மும்மொழி கொள்கை அடங்கிய புதிய தேசிய கல்வி கொள்கையை தமிழகம் ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கான கல்வி நிதி விடுவிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தி திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். இந்நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த போதும் தொடர்ச்சியாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இன்று நான்காவது நாளாக சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை நேரில் சந்தித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அமைச்சர் நாசர், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, திருநாவுக்கரசு, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ் அழகிரி, சிபிஎம் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ பொதுச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் சசிகாந்த் செந்திலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராகுல் காந்தி பேசியதாகவும், உங்களது போராட்டம் மிக மிக முக்கிய பிரச்சினை தொடர்புடையது. உங்களது நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றும், பாஜகவிற்கு எதிராக இன்னும் நிறைய போராட வேண்டி உள்ளது. எனவே உடல் நலனையை கருத்தில் கொண்டு மருத்துவர்களின் அறிவுரையை பின்பற்ற வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களும் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளனர்.
