ஜெயலலிதா தோழியான சசிகலா அதிமுக தொண்டர்களையும் மக்களையும் சந்திக்க கொங்கு மண்டலமான ஈரோடு மற்றும் திருப்பூருக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து 2021 ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையான சசிகலா பெங்களூர் ரிசார்ட்டில் ஓய்வு எடுத்துவிட்டு அதிமுக கொடி பறந்த காரில் தமிழகம் வந்தார். அதிமுக கொடியை பயன்படுத்தியதற்காக அக்கட்சியினர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
விடுதலையாகி இரண்டரை வருடம் கடந்த நிலையில் அவ்வப்போது ஆன்மீக பயணம் சென்றுவந்த சசிகலா… தற்போது திடீரென கொங்கு மண்டலத்தில் மக்களையும் அதிமுக தொண்டர்களையும் சந்திக்க சென்றுள்ளார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்று (ஜூலை 22) கோவை விமானம் நிலையத்திற்கு மாலை 3.17 மணிக்கு வந்தடைந்தார். 60 வாகனங்களில் வந்த 200-க்கும் மேற்பட்டோர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது, ஜெயலலிதா பயன்படுத்திய காரில் சசிகலா பயணித்தார்.
மாலை 4.40 மணிக்கு பெருந்துறை பைபாஸ் சாலையில் சுமார் 150 பேர் வரவேற்பு கொடுத்தனர். அப்போது “அம்மா… கட்சியை கையில் எடுங்கள்” என கோஷமிட்டனர். சசிகலா அவர்களைப் பார்த்து கை அசைத்தும் கும்பிட்டும் நகர்ந்தார்.
பவானி செல்லும் வழியில் சித்தோடையில் தனது பிரச்சார வாகனமான டெம்போ ட்ராவலருக்கு மாறினார். மாலை 5.15 மணியளவில் பவானி கூட்டு ரோடு பாயின்ட்டில் 45 நிமிடங்கள் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது பேசிய சசிகலா, “பெண்கள் முன்னேற்றத்துக்கு அம்மா (ஜெயலலிதா) கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக ஆட்சியில் நிறுத்திவிட்டனர்.
குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் என்றார்கள் அதில் பல தடைகள் போட்டுள்ளனர், அனைத்து குடும்ப தலைவிக்கும் ரூபாய் ஆயிரம் கிடைக்கவேண்டும். திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை, அம்மா இருந்த போது அதிமுக நிர்வாகிகள் ஒருவர் கூட காவல் நிலையத்திற்கு சென்றதில்லை. ஆனால் திமுக ஆட்சியில் கிளை செயலாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர் அனைவரும் காவல் நிலையத்திற்கு சென்று கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்.
குற்ற செயல்களை தடுக்க வேண்டும் என்றால் திமுக நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு சென்று கட்டப் பஞ்சாயத்து செய்யக்கூடாது.
இந்த ஆட்சியில் நில ஆக்கிரமிப்பு அதிகரித்துவிட்டது, அம்மா ஆட்சி நடத்திய போது சட்டவிரோதமாக குவாரி நடத்துபவர் மீதும் கேசு போடுவோம். இந்த ஆட்சியில் சட்டவிரோதமாக குவாரி நடத்துபவர் மீது வழக்கு போடாமல் அப்பாவி லாரி ஓட்டுநர் மீது வழக்கு போடுகிறார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய சசிகலா “அகங்காரம் ஆணவம் இல்லாமல் அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு ஒன்றாக நிற்போம், ஒற்றுமையாக சேர்ந்து நின்றால் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார்.
கொங்கு மண்டலத்திற்கு சென்றுள்ள சசிகலாவின் திடீர் விசிட் பற்றி அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம், “உண்மையிலேயே இது திடீரென முடிவு செய்யப்பட்டதுதான். ஐந்து நாட்களுக்கு முன்பு முன்னாள் கொறடா நரசிம்மன், பூவை கந்தன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன், திண்டிவனம் முகமது ஷெரீப் போன்றவர்களை சசிகலா தொடர்புகொண்டு, ஈரோடு திருப்பூரில் உள்ள சிலரின் தொடர்பு எண்களைக் கொடுத்து அனைவரையும் ஈரோடுக்கு போக சொன்னார்.

மக்களைத் திரட்டுவது, எந்தந்தப் பாயின்ட்டில் பேசுவது என ஏற்பாடுகள் செய்ய சொன்னார். அதுபோலவே நரசிம்மன், ஆனந்தன், பூவை கந்தன், முகமது ஷெரீப், எடப்பாடி சுரேஷ், மஸ்தான், வேலூர் முன்னாள் மாவட்ட செயலாளர் வாசு போன்றவர்கள் கடந்த மூன்று நாட்களாக ஈரோடு பகுதியில் தங்கி கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்தனர்.
சசிகலா வரும் வழி நெடுக அதிமுக தோரணம் மற்றும் கொடிகளை கட்டுவதற்கான பணிகளை கவுண்டம்பாடி செங்கோட்டையன் மற்றும் பவானி அதானி பழனிசாமி இருவரும் மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் பவானி ஜங்ஷன், கவுண்டம்பாடி, கோபிசெட்டிபாளையம், கூட்டு ரோடு உட்பட ஐந்து இடங்களில் நேற்று பேசினார். இன்று திருப்பூரில் ஐந்து பாயின்ட்டில் பேசுகிறார் பின்னர் முக்கிய பிரமுகர்களை சந்தித்துவிட்டு நாளை ஜூலை 24 ஆம் தேதி சென்னைக்கு புறப்படுகிறார். தமிழகம் முழுவதும் சசிகலாவின் சுற்றுப்பயணம் தொடரும்” என்றனர்.
-வணங்காமுடி
கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோவில் மிரட்டும் சூர்யா
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் கொலை: 5 பேர் கைது!
