மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் சசிகலா எப்போது விடுதலை ஆவார் என்பது ஒருபக்கம் என்றால்… அவருக்கு நீதிமன்றம் விதித்த 10 கோடி ரூபாய் அபராதத்தை எவ்வாறு செலுத்தப் போகிறார் என்பதும் ஒரு கேள்வியாக அரசியல் மற்றும் சட்ட வட்டாரத்தில் நிலவிக் கொண்டிருக்கின்றது.
சசிகலாவின் தண்டனை காலம் அவரது அபராதம் செலுத்தும் தொகையைப் பொறுத்து வேறுபடும் என்பது தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வில்லை என்றால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை நீட்டிக்கப்படும். ஏற்கனவே சசிகலா உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வரும் நிலையில் அக்டோபர் மாதத்திலேயே அபராத தொகையை செலுத்தி அதன் அடிப்படையில் அவரை விரைவில் வெளியே அழைத்துவர டிடிவி தினகரன் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த வாரம் டெல்லி சென்ற டிடிவி தினகரன் சசிகலாவின் உடல்நிலையை அடிப்படையாக வைத்து அவரை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதேநேரம் சசிகலாவை ஜனவரி மாதத்துக்கு முன்பு விடுதலை செய்ய வாய்ப்பில்லை என்றும் சில தகவல்கள் உறுதிப்படுத்தப்படாமல் வருகின்றன.
இதற்கிடையில் அபராதம் செலுத்தப்படும் தொகைக்கான வருமான கணக்கையும் நீதிமன்றத்திற்கு காட்ட வேண்டும் என்பதால் இதில் சட்ட ரீதியாக மிக கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. எனவே அமமுக நிர்வாகிகளிடம் அல்லது தொண்டர்களிடம் வசூல் செய்து இந்த நிதியை திரட்டுவது என்ற ஒரு ஆலோசனையும் டிடிவி தினகரன் வட்டாரத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
அதேநேரம் அபராதத்தை கட்டுவதற்காக சசிகலா வேறு ஒரு உத்தியை யோசித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. தன்னை சந்தித்த திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்திடம் சசிகலா ஒரு புது யோசனையை கூறியிருக்கிறார் என்று தகவல்கள் வருகின்றன.
நடராஜன் தன் தந்தை பெயரில் வைத்திருக்கும் குடும்ப அறக்கட்டளையில் இருந்து அபராத தொகையை செலுத்த முடியுமா என்றும் அதற்கான சட்ட வாய்ப்புகள் உள்ளனவா என்றும் சசிகலா கேட்டுக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
நடராசன் தன் தந்தை மருதப்பா பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளை மூலமாக தான் தஞ்சாவூரில் வருடா வருடம் பொங்கல் விழாவை பிரமாண்டமாக நடத்தி வந்தார் நடராஜன். அறக்கட்டளை மூலமாக மேலும் பல உதவிகளையும் செய்து வந்தார். இப்போது இந்த அறக்கட்டளையின் நிர்வாகிகளாக நடராஜன் சகோதரர்கள் குடும்பத்தினர் இருந்து வருகிறார்கள்.
இப்போது இந்த அறக்கட்டளையில் இருந்து பணத்தை கடனாகப் பெற்று அல்லது உதவியாகப் பெற்று அதன் அடிப்படையில் அபராதத் தொகையை செலுத்தலாமா என்ற ஆலோசனை மன்னார்குடி வட்டாரத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
சசிகலா ஏற்கனவே பரோலில் வந்த போது குடும்பத்துக்குள் நடந்த பல்வேறு பிரச்சனைகளால் தான் தனது பரோல் காலம் முடியும் முன்பே மீண்டும் சிறைக்கு திரும்பிவிட்டார்.
இப்போதும் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் வராமல் இருப்பதற்காக தனது கணவரின் அறக்கட்டளையில் இருந்து பணத்தை எடுக்க முடியுமா என்று யோசனை கேட்டிருக்கிறார் சசிகலா என்கிறார்கள் மன்னார்குடி வட்டாரத்தில்”, என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ்அப்.