yசசிகலா வழக்கு: கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்!

Published On:

| By admin

அதிமுக பொதுச்செயலாளர் நான்தான் என்று உரிமை கோரி சசிகலா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் நீதிபதி விடுமுறையில் சென்றதால் தீர்ப்பு தேதி வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 2016ஆம் ஆண்டு இறுதியில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற பின்னர் நடந்த அரசியல் மாற்றங்களால் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் இணைந்தனர்.

இதையடுத்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கூடியது. இதில் பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளராக இருந்த டிடிவி தினகரனும் பதவிகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சூழலில் 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். அதில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவி சட்ட விரோதம் என்று உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்குமாறு சென்னை உரிமையில் நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோர வாய்ப்பு இல்லை. கட்சியின் சின்னம் தங்களிடம் இருப்பதைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தீர்ப்பை எதிர்நோக்கி சசிகலா தரப்பினரும் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பினரும் காத்திருந்தனர்.

4ஆவது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பு வழங்க இருந்தார். ஆனால் இன்று அவர் விடுமுறையில் சென்றதால் தீர்ப்பு வேறு தேதிக்கு மாற்றப்பட்டது.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share