2016-ஆம் ஆண்டே தயாராகி மூன்று வருடங்களுக்குப்பின்னர் வெளிவரவிருக்கும் சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் ‘கம கம’ பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘சர்வர் சுந்தரம்’. கெனன்யா பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘சக்கப்போடு போடு ராஜா’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ போன்ற திரைப்படங்கள் மூலமாக கவனம் ஈர்த்த வைபவி நடித்துள்ளார். மேலும் கிரண், மாயா கிருஷ்ணன், ராதாரவி உள்ளிட்டவர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே ‘சர்வர் சுந்தரம்’ குறித்த அறிவிப்பு வெளியாகி திரைப்படமும் தயாரானது. இரு வருடங்களுக்கு முன்னதாகவே படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. எனினும் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பல்வேறு காரணங்களால் படம் வெளிவரவில்லை. இந்தநிலையில் வரும் ஜனவரி 31-ஆம் தேதி ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பு வெளியானது.
அதனைத் தொடர்ந்து படத்தில் இடம்பெறும் ‘கம கம சமையல்’ என்னும் பாடலில் லிரிக்கல் வீடியோ நேற்று(ஜனவரி 17) வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
நாக்கில் எச்சில் ஊறச்செய்யும் உணவுப்பொருட்கள் அந்த வீடியோ முழுவதும் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதோடு பசியைத் தூண்டும் அந்த வீடியோவைப் பலரும் பகிர்ந்துவருகின்றனர்.
சர்வர் சுந்தரம் திரைப்படம் வெளியாகும் ஜனவரி 31-ஆம் தேதி, சந்தானம் நடித்த டகால்டி திரைப்படமும் வெளியாகிறது. இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.,”
