�
தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார், பிரதமர் மோடியை நேற்று (ஜூலை 17) சந்தித்து சுமார் ஒருமணி நேரம் வரை பேசியிருக்கிறார். இது தேசிய அரசியல் வட்டாரங்களில் புதிய சூட்டைக் கிளப்பியுள்ளது.
சமீப வாரங்களில் தேர்தல் உத்தி நிபுணரான பிரசாந்த் கிஷோரை இருமுறை சந்தித்துப் பேசிய சரத்பவார், நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்திருப்பதுதான் அரசியல் முக்கியத்துவத்துக்குக் காரணம்… கடந்த ஜூலை 7ஆம் தேதி நடந்த ஒன்றிய அமைச்சரவை மாற்றத்தில் கூட்டுறவு மற்றும் முன்னேற்ற அமைச்சகம் என்ற ஒரு புதிய துறை உருவாக்கப்பட்டு, அது உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இது எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் 21,000 கூட்டுறவு சங்கங்கள், 31 மாவட்டக் கூட்டுறவு வங்கிகள் இருக்கின்றன. ஏற்கனவே கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்பது குறித்து சரத்பவார், பிரதமர் மோடிக்கு கவலை தெரிவித்து கடிதமும் எழுதியுள்ளார்.
மாநில அரசுகளின் வசம் இருக்கும் கூட்டுறவுத்துறையை ஒன்றிய அரசு கைப்பற்றுவது கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதல் என்று ஏற்கனவே பல தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் சரத்பவார் நேற்று பிரதமரைச் சந்தித்ததில் இந்த விஷயமும் பேசப்பட்டிருக்கிறது. இதைத் தாண்டிய அரசியலும் பேசப்பட்டிருக்கலாமா என்றும் தேசிய அளவில் விவாதங்கள் எழுந்துள்ளன.
**-வேந்தன்**
�,