ADVERTISEMENT

ஜோரா இருக்கா சாரா? – விமர்சனம்

Published On:

| By Minnambalam Desk

மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்தின் முதன்மைப் பொறியாளர் சாராவுக்கும் (சாக்ஷி அகர்வால்) அங்கேயே பணியாற்றும் இன்னொரு பொறியாளருக்கும் (விஜய் விஷ்வா) காதல். காதலுக்கு சாராவின் பெற்றோர்கள் ஒத்துக் கொண்டிருக்கும் நிலையில், கட்டிடங்களுக்கு கலப்பட மணல் அனுப்பி ஏமாற்றும் வெட்டுக்கிளி (மிரட்டல் செல்வா) என்பவனுக்கும் சாராவுக்கும் பகை.

அந்த பெரிய கட்டுமான நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருக்கும் நபர் (ரோபோ சங்கர்) காசுக்காக எதையும் செய்பவன். அவனுக்கு நண்பனாக என்ன வேலை செய்கிறான் என்பதே தெரியாமல், அங்கே சுற்றிக் கொண்டு வாய்க்கு வந்ததை எல்லாம் காமெடி என்று பேசிக் கொண்டு இருப்பவன் ஒருவன் (யோகிபாபு).

ADVERTISEMENT

இவர்களில் எல்லோரின் கேலி கொண்டலுக்கும் ஆளாகி யாராலும் மதிக்கப்படாத கோமாளி போன்ற ஒரு நபர் (செல்லக் குட்டி).

சாராவுக்கு வரும் கெட்ட கனவு, பத்திரிகை தெருவில் விழுவது இதனால் எல்லாம் கல்யாணத்தில் தடங்கல் என்று எண்ணுகிறார்கள் சாராவின் குடும்பத்தினர். (ஸ்ஸ்ஸ்ஸ் சப்பா….!)

ADVERTISEMENT

சித்தர் ஒருவரைப் பார்க்க அவர் உயிராபத்து ஏற்படும் என்கிறார்.

”இருபத்து நான்கு மணி நேரத்தில் உன்னை கடத்தி என்ன பண்றேன் பாரு” என்று வெட்டுக்கிளி சவால் விட, “பார்ப்போம்டா…” என்று சாரா எதிர் சவால் விட,

ADVERTISEMENT

வாட்ச் மேன், வாய்க்கு வந்ததை பேசும் நபர், இவர்கள் அனைவரும் வெட்டுக்கிளிக்கு உதவியாக சாரவைக் கடத்த முயல்கிறார்கள். இது கோமாளிக்குத் தெரிந்தால் பிரச்னை என்று அவனுக்கு மட்டும் தெரியாமல் பிளான் செய்கிறார்கள். ஆனால்…

கடத்தியது யார்? என்ன ஆனது? கல்யாணம் என்ன ஆனது? யாருடைய உயிர் சேதம் ஆனது என்பதே,

ஸ்ரீ பட்டவன் தயாரிப்பில், சாக்ஷி அகர்வால், விஜய் விஷ்வா,ரோபோ சங்கர், யோகி பாபு, தங்கதுரை , அம்பிகா, மிரட்டல் செல்வா இவர்களுடன் செல்லக்குட்டி என்பவர் முக்கிய வேடத்தில் நடித்து இயக்கி இருக்கும் சாரா படம்.

சாராவும் அவளது குடும்பமும் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோவிலுக்குப் போக, அங்கே பூஜை செய்யும் போது, கோவில் பூசாரி ஒருவரின் முகம் வெட்டுக்கிளி முகமாக மாறி, சாராவின் அப்பா, அம்மா, தாத்தா ஆகியோரைக் குத்திக் கொல்லும் காட்சி……………. உண்மையிலேயே அபாரம் .எடுக்கப்பட்ட விதம் பிரம்மாதம்.

என்னடா இது கருப்பசாமி கொலை செய்வது போலக் காட்டுகிறார்களே.. எப்படி இது சரி வரும்? எப்படி இதை நியாயம் செய்யப் போகிறார்கள். ஆகா.. ஒரு அட்டகாசமான பக்தி பிளஸ் அமானுஷ்ய படம் பார்க்கப் போகிறோம் என்று நிமிர்ந்து உட்கார்ந்தால்..

அடுத்த சில நிமிடங்களில் சட்டார்… என்று தலையில் அடித்து உட்கார வைக்கிறார்கள்.

எல்லாராலும் பரிகாசமாக பார்க்கப்படும் ஒருவன் ஒவ்வொரு காட்சியின் ஊடாக மெல்ல மெல்ல நிமிர்ந்து உயரம் தொடுவது என்பது உண்மையிலேயே சிறப்பான உத்தி.

பள்ளித் தோழி பொதுத் தேர்வில் தோற்று விடுவோம் என்று பயப்பட, தேர்வில் தான் எழுதிய விடைத்தாள்களை அவளுக்கு கொடுத்து விட, மாணவி பாஸ் ஆகி, எழுதிக் கொடுத்த நல்லா படிக்கும் மாணவன் தோற்பது என்பது கனமான விஷயம்.

ஆனால் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பது இயக்குனர் செல்லக்குட்டிக்கு தெரியவில்லை.

அவருக்கு தெரிந்த ஒரே விஷயம் நடிக்கும்போது எல்லா காட்சிகளிலும் அவரே பேச வேண்டும்… பேச வேண்டும்… பேசிக்கொண்டே இருக்க வேண்டும். மற்ற யாரும் வாயைத் திறந்து பேசக் கூடாது. மீறி பேசினால் அவர்கள் வசனம் முடிவதற்குள் இவர் அவர்களை கடித்து விடுவார் போல இருக்கிறது.

காதல் சொல்ல வந்த பெண்ணை தோழி என்று சொல்லி அனுப்பி விட்டு, பின்னர் வந்து மல்லுக்கட்டுவது ஏன் என்று புரியவில்லை என்ன வேண்டும் என்று மல்லுக் கட்டும் கேரக்டருக்கே புரியவில்லை,

பள்ளித் தோழனின் அம்மாவை ஒரு முறை பார்த்து வர பள்ளித் தோழிக்கு என்ன கஷ்டம்? தோழனின் அம்மாவை அவனுக்குத் தெரியாமலே பார்த்து விட்டு அவன் அம்மாதான் என்று தெரிந்த பின்னும் தோழி வர முடியாது என்பது ஏன்?

படத்தின் பல காட்சிகளில் அந்த கோமாளி கேரக்டர் சட்டையைக் கிழித்துக் கொண்டு சுவற்றில் முற்றிக் கொண்டு ஆ ஊ என்று கத்திக் கொண்டு அலையுதே …

அதை விட அதிகமாக படம் பார்ப்பவர்கள் முடியைப் பிய்த்துக் கொண்டு அலைய வேண்டி இருக்கிறது.

பள்ளித் தோழன் மனநோயாளியா இல்லை நார்மலா என்பது டைரக்டருக்கே புரியவில்லை.

ரோபோ சங்கரும் யோகிபாபுவும் முன்னூற்றி முப்பதாவது முறையாக ஆபாச வசனங்களையும் பெண்களை கேவலப்படுத்தியு ம் பேசி இருக்கிறார்கள்.

இயக்குனர் செல்லக்குட்டி வாட்டர் மெலன் திவாகரை விட நூறு மடங்கு பெரிய நடிப்பு அர்ர்ர்ர்ர்ர்ர்ரக்கனாக இருக்கிறார். அவர் கத்துகிற கத்தில் , ரம்பா ஊர்வசி மேனகை ஆட்டங்களால் நிஷ்டை கலையாத முனிவர்கள் கூட, ” ஐயோ நிறுத்துய்யா …” என்று நிஷ்டை கலை ந்து எழுந்து விடுவார்கள்.

சரிப்பா.. இதோட படத்தை முடிப்பார்கள் என்று நினைத்தால். வெளியே வந்து, வீடு வந்து சேரும்வரை படம் ஓடிக் கொண்டே இருக்கிறது.

குணா, காதல் கொண்டேன் படங்களை நினைத்து இந்தப் படத்தை ஆரம்பித்து இருக்க வேண்டும்.

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டால்… கூடப் பரவாயில்லை.

நெருப்பிலேயே குதித்தால் என்ன ஆகும்? அதுவாக ஆகி இருக்கிறது படம்.

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share