அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை: சந்தோஷ் நாராயணன் வேதனை!

Published On:

| By christopher

வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவற்றால் ஒவ்வொரு முறையும் வெள்ளம் ஏற்படும் போதும் தங்கள் பகுதி மக்கள் பெரும் துயரத்தை சந்திப்பதாக பிரபல இசையமப்பாளர் சந்தோஷ் நாராயணன் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (டிசம்பர் 6) தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் எங்கள் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குறைந்தது ஒருவாரம் முழங்கால் அளவு தண்ணீர் மற்றும் 100 மணிநேரம் மின்வெட்டு நிலவும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

இந்த ஆண்டு மிக்ஜாம் புயல் ஏற்கனவே வரலாறு காணாத மழையை பொழிந்துள்ளது.வேடிக்கை என்னவென்றால் நான் இருக்கும் கொளப்பாக்கம் பகுதி, ஒரு ஏரியோ அல்லது ‘தாழ்வான’ பகுதியோ அல்ல. சென்னையில் மற்ற எந்தப் பகுதியையும் விட இங்கு ஏராளமான திறந்தவெளி நிலங்களும், குளங்களும் உள்ளன.

வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவை மழை நீர் மற்றும் கழிவுநீர் ஒரே கால்வாயில் செல்வதற்கு வழிவகுத்தது. அதனால் ஒவ்வொரு முறையும் வெள்ளம் ஏற்படும் போதும் ஆறு போல் பெருக்கெடுத்து இந்த பகுதி மக்களை தாக்குகிறது. இந்த நேரத்தில் யாராவது நோயால் பாதிக்கப்படுவதும் அல்லது மருத்துவ எமர்ஜென்சியில் இருப்பவர்கள் மரணிப்பதும் மனவேதனை ஏற்படுத்துகிறது.

மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் நிரந்தரமாக உள்ளன. அவைகளை பயன்படுத்தி மக்களைச் சென்றடைந்து மீட்பு மற்றும் பிற முக்கியமான தேவைகளுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன்.

நான் எங்கு சென்றாலும் மிகவும் நெகிழ்ச்சியும் நேர்மறையும் இருக்கிறது. தீர்வுக்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். எனக்கு நியாயமற்ற எதிர்பார்ப்புகள் இல்லை. ஆனால் இப்போது இருப்பதை விட வேகமாக நிவாரண பணிகள் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தேங்கி நிற்கும் மழைநீர்… நெருங்கும் ஆபத்து: அன்புமணி எச்சரிக்கை!

“நான் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து விலக்கவில்லை”: கங்குலி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share