புது ஃப்ளேவரில் சந்தானம் நடிக்கும் ‘பிஸ்கோத்’!

Published On:

| By Balaji

சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவில் காமெடியனாக மாறி, தற்போது முன்னணி கதாநாயகனாக வளர்ந்தவர் நடிகர் சந்தானம். அவர் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சரியான திட்டமிடலும் திறமையும் இருந்தால் எந்த உயரத்தையும் எட்டிப்பிடிக்க முடியும் என்பதற்கான உதாரணமாகவே வாழ்ந்து வருகிறார் சந்தானம். டிவி சானல்களில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகள் மூலம் கவனம் ஈர்த்த அவர் பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2004-ஆம் ஆண்டு வெளிவந்த மன்மதன் மற்றும் 2005-ஆம் ஆண்டு வெளிவந்த சச்சின் ஆகிய திரைப்படங்கள் மூலமாக தனக்கான தனிப் பாதையை அமைத்துக் கொண்டார்.

நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் தரும் வேடங்களில் தொடர்ந்து நடித்துவந்த சந்தானம், ‘அறை எண் 305-இல் கடவுள்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து காமெடியனாகவும், செகண்ட் ஹீரோவாகவும் வலம்வந்த சந்தானம், தில்லுக்குத் துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஏ1 போன்ற திரைப்படங்களில் நடித்து முழு நேர கதாநாயகனாகவே மாறினார்.

ஒரே நாளில் தான் நடித்த இரு திரைப்படங்களை ரிலீஸ் செய்யத் திட்டமிடும் அளவிற்கு தமிழ் சினிமாவில் அவர் வளர்ந்தார். சந்தானம் கதாநாயகனாக நடித்த டகால்டி திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அவர் ஹீரோவாக நடித்துள்ள, ‘சர்வர் சுந்தரம்’, ‘டிக்கிலோனா’ போன்ற படங்கள் திரைக்கு வர காத்திருக்கும் நிலையில் சந்தானம் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்.கண்ணன் இயக்கவுள்ள இந்தத் திரைப்படத்துக்கு ‘பிஸ்கோத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தரன் இசையமைக்கும் இந்தப்படத்தில் ஏ 1 படத்தில் நடித்த தாரா அலிஷா பெரி கதாநாயகியாக நடிக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சந்தானம் ‘புதிய ஃப்ளேவரை சுவைக்க காத்திருங்கள்’ என்று கூறியுள்ளார்.

இது திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share