மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது!

Published On:

| By Pandeeswari Gurusamy

Sanitation workers arrested for protesting in Mdu

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், தனியார் மயமாக்கும் அரசாணையை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூய்மை பணியை தனியாருக்கு தாரைவார்க்கும் அரசாணை 152, 139 ஐ ரத்து செய்ய வேண்டும், அவர்லேண்ட் ஒப்பந்த நிறுவனத்தை ரத்து செய்ய வேண்டும், தீபாவளிக்கு ஒரு மாத போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி வளாகத்தில் நேற்று (ஆகஸ்ட்-18) தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இரவிலும் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்த நிலையில், மாநகராட்சி வளாகத்தில் சமைத்து உண்டு இரவு நேர போராட்டத்தை தொடங்கினர்.

இரவு நேரத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என கூறி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை விலக்கி கொள்ளப்போவதில்லை என தொழிலாளர்கள் உறுதியோடு நின்றனர். இதற்கிடையில் 5 கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து மதுரை மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.

சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்

தூய்மை பணியாளர்கள் கைதுக்கு சு.வெங்கடேசன் எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாநகராட்சி வளாகத்தில் ஜனநாயக வழியில் போராடிய தூய்மை பணியாளர்கள் காவல்துறையினரால் அராஜகமாக கைது செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலம் முழுக்க தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை காவல் துறைதான் கையாளுமென்றால் நகராட்சி துறையும், தொழிலாளர் நலத்துறையும் எதற்கு? மதுரையில் தூய்மைப்பணிகளை தனியாருக்கு கொடுத்த பின்னர் அந்த நிறுவனம் செய்துள்ள சட்ட மீறல், சம்பளக்குறைப்பு, ஒப்பந்த விதி மீறல், தொழிலாளிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகியவை எண்ணற்றவை. ஆனால் அவைகள் மீது எந்த விதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆனால் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளிகள் மீது இரவோடு இரவாக கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக மட்டுமல்லாமல் தொழிலாளர்களுக்கு எதிராக காவல்துறை தொடர்ந்து களம் இறக்கப்படுவது அரசுக்கு அவப்பெயரைத்தான் உருவாக்கும்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share