தமிழ்நாடு அரசின் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக யூடியூபர் சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் விரைவில் உத்தரவிடுமோ? என்பதுதான் தமிழக அரசு உயர் அதிகாரிகளின் அச்சம் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக்க தமிழக அரசு அறிவித்த திட்டம் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டம். அதேபோல தூய்மைப் பணியாளர்களுக்கு 50% மானியத்துடன் நவீன கழிவுநீர் அகற்றும் உபகரணங்கள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டங்களை செயல்படுத்துவதில் முறைகேடு நடைபெற்றுள்ளது; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு இதில் தொடர்பிருக்கிறது; ஆகையால் சிபிஐ விசாரனை நடத்த உத்தரவிட வேண்டும் என்று யூடியூபர் சவுக்கு சங்கர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின், கோடைகால விடுமுறை பெஞ்ச் நீதிபதிகளான ஜிஆர் சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில், இத்திட்டங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் உயர்நீதிமன்றத்தில் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிரடியான உத்தரவைப் பிறப்பித்தனர் நீதிபதிகள்.
இந்த வழக்கை உடனே விசாரித்து ஆவணங்களையும் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுதான் தமிழ்நாடு அரசு அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்கின்றன கோட்டை வட்டாரங்கள். இவ்வளவு விரைவாக ஒரு வழக்கை விசாரித்து உத்தரவைப் பிறப்பிக்கும் உயர்நீதிமன்றம், அடுத்ததாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடத்தான் போகிறது என்பதாலேயே அரசு அதிகாரிகள் அச்சத்தில் இருக்கின்றனர் என்கின்றன கோட்டை தகவல்கள்.