சென்னை மாநகர 109வது காவல் ஆணையராக காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இன்று பதவியேற்க உள்ளார்.
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இன்றுடன் (ஜூன் 30) பணி ஓய்வு பெறுகிறார். சென்னை பெருநகர காவல் துறை ஆணையராக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால், தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை, சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக நியமனம் செய்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா நேற்று உத்தரவிட்டார்.
டெல்லியை சேர்ந்த சந்தீப் ராய் ரத்தோர், கடந்த 1992-ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று தமிழக காவல்துறையில் உதவி காவல் கண்காணிப்பாளராக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பணியைத் தொடங்கினார்.
எம்ஏ, எம்பில் பட்டப்படிப்பை முடித்திருந்த ரத்தோர், பேரிடர் மேலாண்மையில் பிஎச்டி முடித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். தேசிய பேரிடர் மேலாண்மை படையில் பணியாற்றிய அனுபவமும் பெற்றவர்.
1998 ஆம் ஆண்டு கோவை மாநகர காவல் துணை ஆணையாளராக பணியாற்றினார். அப்போது நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்தவர் சந்தீப் ராய் ரத்தோர்.
திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர், சென்னை காவல்துறையின் போக்குவரத்து இணை ஆணையர், மத்திய மண்டல இணை ஆணையர், திருச்சி சரக டிஐஜி, மதுரை சரக டிஐஜி,
மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி, தமிழக கடலோர பாதுகாப்பு குழும ஐஜி, சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய ஏடிஜிபி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை பெருநகர காவல்துறையை பிரித்து ஆவடி மாநகர காவல் துறை உருவாக்கப்பட்டது. அப்போது ஆவடியின் முதல் காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். பின்னர் காவலர் பயிற்சி கல்லூர் டிஜிபியாக பணி உயர்வு பெற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தன்னுடைய சிறப்பான பணிகளுக்காக 2008 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் குடியரசுத் தலைவர் பதக்கங்களை பெற்றுள்ளார்.
2000 ஆம் ஆண்டில் சென்னையில் போக்குவரத்து துணை ஆணையாளராக இருந்த போது, தற்போது பயன்பாட்டில் உள்ள எல்.இ.டி. சிக்னல்களை சந்தீப் ராய் ரத்தோர் அறிமுகம் செய்தார். 2001 – 2002 ஆம் ஆண்டுகளில் உலக அமைதிக்கான சிறப்புக் காவல் படையில் பங்கேற்று தனது சிறப்பான பணிக்காக பதக்கம் வென்றவர்.
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஓய்வு பெறுவதால், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதனால் சென்னையின் அடுத்த மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் புதிய டிஜிபியாக இன்று சங்கர் ஜிவாலும் சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோரும் பதவியேற்க உள்ளனர்.
மோனிஷா
அலர்ஜிக்கு நாய்க்கடி ஊசி…செவிலியர் சஸ்பெண்ட்: நடந்தது என்ன?
போலி ரசீது ரூ.3.22 கோடி சுருட்டிய கான்ஸ்டபிள்கள்!

