விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனமா’ என்று விசிக எம்.பி.ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் இன்று (செப்டம்பர் 5) வெளியான படம் தி கோட். கேரளாவில் காலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு சென்று விஜய் ரசிகர்கள் படம் பார்த்துள்ளனர்.
தமிழகத்தில் காலை 9 மணிக்கு படம் வெளியானது. நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் மதுரவாயல் ஏஜிஎஸ் திரையரங்கில் ஒன்றாக படம் பார்த்தனர்.
மதுரையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கோட் படத்தை பார்த்தார். இயக்குநர் வெங்கட் பிரபு கமலா தியேட்டரில் படம் பார்த்தார்.
இந்த நிலையில் விசிக எம்.பி ரவிக்குமார் கோட் படம் குறித்து வெளியிட்ட பதிவு விவாத பொருளாகியுள்ளது.
அதில் அவர், “The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா?
‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்!
‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா?
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157)” என்று கூறியுள்ளார்.
விசிக எம்.பியின் பதிவுக்கு விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சனாதனம் என்றால் என்னவென்று விசிக எம்.பி.ரவிக்குமாருக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலில் எங்களிடம் தான் சனாதனத்தை பார்த்தார்கள் என்றால் இப்போது விஜய்யிடமும் பார்க்கிறார்கள். சனாதனம் என்றால் என்னவென்று ரவிக்குமாருக்கு தெரியவில்லை என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுதான் என்னுடைய கருத்து ” என கூறினார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தி கோட் படம் பெயருக்கு ஏற்றார் போல வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்து கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா