ADVERTISEMENT

பாடப்புத்தகத்தில் சனாதனம் : அமைச்சர்களை பிளஸ் 2-வில் சேரச் சொன்ன அண்ணாமலை

Published On:

| By Kavi

தமிழ்நாடு அரசு பாடப்புத்தகத்தில் சனாதனம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை விமர்சித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றிப் பேசிய பேச்சு இன்றளவும் பேசு பொருளாக இருக்கிறது. உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர் பேசும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறி அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் பாஜகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இந்தச்சூழலில் பாஜகவினருக்கு பதிலளிக்கும் வகையில் கொசுவர்த்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு விமர்சித்திருந்தார் உதயநிதி.

இந்த பதிவை ரீட்விட் செய்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீ விளையாடு நண்பா’ என்று பதிவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் அவர் பதவி வகிக்கும் பள்ளிக்கல்வித் துறையின் 12ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் சனாதனத்தை “அழிவில்லாத நிலையான அறம்” என்று குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

12ஆம் வகுப்புக்கான ‘ அறவியலும் இந்தியப் பண்பாடும்’ என்ற பாடத்தில் இந்தியப் பண்பாடும் சமயங்களும்’ என்ற அலகு இடம் பெற்றிருக்கிறது. அதில், “இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ‘சனாதன தருமம்’ என்றால் அழிவில்லாத நிலையான அறம் எனப்படும். இது வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால் ‘வேதசமயம்’ என்றும், வேதநெறிகளையும் சாத்திரங்களையும் மையமாகக் கொண்டுள்ளதால் வைதீக சமயம் எனவும் அழைக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதிக்குக் கூறிய கருத்துக்கு மாறாக இவை உள்ளன.

ADVERTISEMENT

பாடப்புத்தகத்தில் சனாதனம் குறித்து இடம் பெற்றுள்ள அந்த பக்கத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, “உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியதற்கு, அனைத்துத் தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதன் பிறகு இந்து மதமும் சனாதன தர்மமும் வேறு என்று கூறினர்.

சனாதன தர்மமும் இந்து மதமும் ஒன்றே என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்பு பாடப்புத்தகம் கூறுகிறது. சனாதன தர்மமே நித்திய தர்மம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பி.கே.சேகர் பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் அறிவொளி பெற 12ஆம் வகுப்பில் சேருமாறு அறிவுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரியா

டெங்கு காய்ச்சல்: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் எச்சரிக்கை!

“நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும்” – ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share