சமுத்திரக்கனியின் ஆக்கிரமிப்பு!
தமிழில் ‘உன்னைச் சரணடைந்தேன்’, ‘நெறஞ்ச மனசு’ என்று இரு வித்தியாசமான முயற்சிகளைத் தந்த இயக்குனர் சமுத்திரக்கனி ‘சுப்பிரமணியபுரம்’ மூலம் பிஸியான நடிகர் ஆனதும், ‘நாடோடிகள்’ வழியாக வித்தியாசமான கமர்ஷியல் படங்களைத் தருகிற இயக்குனர் ஆனதும் நாம் அறிந்ததே. இதனைத் தொடர்ந்து தமிழில் நாயகனாக, வில்லனாக, நகைச்சுவை மற்றும் குணசித்திர பாத்திரங்களை ஏற்று முக்கியமான நடிகரானார். ’அலா வைகுண்டபுரம்லோ’ படத்திற்குப் பிறகு தொடர்ச்சியாகத் தெலுங்குத் திரையுலகில் அதிகமாக வலம் வருகிறார். samuthirakani ramam ragavam review
அந்த வரிசையில், அவர் கதை நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘ராமம் ராகவம்’.
தெலுங்கு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்துவரும் தன்ராஜ் கொரனேனி இதனை எழுதி இயக்கியிருக்கிறார். அவர் இதில் பிரதான பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
தெலுங்கில் உருவான இப்படத்தின் சில காட்சிகள் தமிழில் உருவாக்கப்பட்டிருப்பதாகச் சொல்கின்றன சில தகவல்கள்.
’தந்தை – மகன் பாசத்தை மையமாகக் கொண்டது’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது ‘ராமம் ராகவம்’ ட்ரெய்லர்.
இப்படத்தின் காட்சியாக்கம் அதனை வலுப்படுத்தும் விதமாக உள்ளதா?

உயிராக நினைக்கும் பாசம்! samuthirakani ramam ragavam review
பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார் தசரத ராமன் (சமுத்திரக்கனி). அவரது மனைவி கமலா (பிரமோதினி). இவர்களது ஒரே மகன் ராகவன் (தன்ராஜ்).
நேர்மையாக வாழ்வது நொடியளவு கூடப் பிசகிடக் கூடாது என்றெண்ணுபவர் தசரதராமன். ஆனால் சூதாட்டத்தில் ஈடுபடுவது, பொய் சொல்லித் திருமண வரன் பார்ப்பது, கடன் வாங்கிச் செலவழிப்பது என்றிருக்கிறார் ராகவன். மது, சிகரெட் என்று எல்லா கெட்ட வழக்கங்களும் அவரிடம் உண்டு.
மகன் நல்லபடியாக வாழ வேண்டும் என்று பெரும்பிரயத்தனப்படுகிறார் தசரதராமன். நண்பன் உடன் சேர்ந்து ஒரு கடை தொடங்குகிறேன் என்று சொல்லி அவரிடம் வாங்கிச் செல்லும் 5 லட்சம் ரூபாய் பணத்தை ‘பெட்டிங்’கில் தொலைக்கிறார் ராகவன்.
ஏற்கனவே மகன் மீது கோபத்தில் இருக்கும் ராமனுக்கு, அச்செயல் இன்னும் எரிச்சலை ஊட்டுகிறது.
அதனைத் தொடர்ந்து, ’உழைப்பின் அருமை’ தெரிய வேண்டும் என்று ஒரு பெட்ரோல் பங்கில் வேலைக்குச் சேர்த்து விடுகிறார். அங்கும் குறுக்கு வழியில் முன்னேற யோசித்து, ஒரு காரியத்தைச் செய்கிறார். அது கண்டுபிடிக்கப்படும்போது பெரும் சிக்கலுக்கு ஆளாகிறார். அதிலிருந்து தப்பிக்க, பெரும் தொகையைக் கடன் வாங்குகிறார்.
அந்த பணத்தைத் திருப்பித் தர முடியாமல், தந்தையின் அலுவல் பணி ஒன்றில் மூக்கை நுழைக்கிறார். அதனை அறிந்ததும் தசரத ராமன் கொதித்துப் போகிறார்.
‘இதுநாள்வரை வீட்டை ஏமாற்றியவன், இன்று ஊரை ஏமாற்றப் பார்க்கிறானே’ என்று வருத்தப்படுபவர் காவல் துறையில் புகார் தெரிவிக்கிறார். போலீசார் தன்னைக் கைது செய்த அந்த நொடியில், தந்தை ராமன் மீது கொலை வெறி கொள்கிறார் ராகவன். அவரைக் கொல்வது என்று முடிவெடுக்கிறார்.
அந்த ஆத்திரம் தற்காலிகமானதா, இல்லையா என்று சொல்கிறது இப்படத்தின் இரண்டாம் பாதி.
குழந்தை பிறந்த கணம் முதல் ஒவ்வொரு நாளும் மகனை உயிரென நினைக்கும் தந்தையாக இருக்கிறார் தசரதராமன். ஆனால், அவருக்கு நேரெதிரான குணாதிசயங்களுடன் இருக்கும் ராகவன் அதனைப் புரிந்துகொண்டாரா என்பதுதான் இக்கதையின் அடிப்படை. அப்பாத்திரங்களுக்கு இடையேயான முரணைச் சரிவரக் கடத்தியிருக்கிறது ‘ராமம் ராகவம்’.
தெலுங்கில் இந்தக் கதை கோனசீமா மாவட்டத்தில் நிகழ்வதாகச் சொல்லப்படுகிறது; தமிழில் அது கடலூர் மாவட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கு மையப் பாத்திரத்தின் பெயர் ‘தசரதராமம்’ என்றால் இங்கு ‘தசரதராமன்’. அது போன்ற சில வித்தியாசங்களே தெலுங்கு, தமிழ் பதிப்பில் இருக்கின்றன.
பதிவாளர் அலுவலகம் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மற்றும் சமுத்திரக்கனி இடம்பெறாத காட்சிகளில் தமிழ் ‘டப்பிங்’ நன்றாகத் தெரிகிறது. இதர காட்சிகள் தமிழிலேயே படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன.

வியாபித்திருக்கும் சமுத்திரக்கனி! samuthirakani ramam ragavam review
முழுப்படத்தையும் சமுத்திரக்கனி தோளில் தாங்கியிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையல்ல. அந்த அளவுக்கு ஒவ்வொரு பிரேமிலும் வியாபித்திருக்கிறார்.
முகத்தில் தென்படும் தளர்வும் சுருக்கமும் அவரது முதுமையைக் காட்டிவிடுகிறது. கதாபாத்திர வடிவமைப்போடு அது பொருந்துகிறது என்றாலும், அதனை அவர் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் சொல்லியாக வேண்டியிருக்கிறது.
தன்ராஜ் கொரனேனி இதில் ராகவனாக வருகிறார். அவரே இதன் இயக்குனர்.
திருட்டு முழி, தந்திரத்தை வெளிப்படுத்துகிற உடல்மொழியோடு கொஞ்சம் அயர்ச்சியும் சோர்வும் அவரது நடிப்பில் தென்படுகிறது.
கூடவே, சமுத்திரக்கனியின் மகன் என்பதை நியாயப்படுத்தும் வகையில் சில ‘கிம்மிக்ஸ்’களை திரைக்கதையில் புகுத்தியிருக்கலாம். அதைச் செய்யாத காரணத்தால், ‘இவங்க என் அப்பா அம்மா இல்ல’ என்பது போன்றே திரையில் தெரிகிறார். அப்பாத்திரத்தில் வேறு யாராவது நடித்திருந்தால், ஒரு இயக்குனராக அதனை அவர் சரிப்படுத்தியிருப்பார் என்றெண்ணத் தோன்றுகிறது.
மற்றபடி, வில்லத்தனத்தை வெளிப்படுத்துகிற காட்சிகளில் கதாபாத்திரமாகவே தெரிகிறார்.
இதில் கமலா எனும் பாத்திரத்தில் பிரமோதினி நடித்திருக்கிறார். அவரது குரலும் நடிப்பும் அப்பாத்திரத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது. விளம்பரங்கள், தெலுங்கு படங்களில் தலைகாட்டும் அவர் இனி தமிழிலும் நடிக்க வேண்டும்.
இவர்களோடு லாரி ஓட்டுநராக வரும் ஹரிஷ் உத்தமன், அஞ்சியாக வரும் சத்யா, பதிவாளர் அலுவலத்தில் பணியாற்றுபவராக வரும் பிருத்விராஜ், கந்துவட்டிக்காரராக வரும் சுனில், ஸ்ரீனிவாஸ் ரெட்டி உள்ளிட்ட சிலர் இதில் தலைகாட்டியுள்ளனர். அவர்களது இருப்பு அளவாக, சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
நாயகியாக மோக்ஷா வந்து போயிருக்கிறார். அறிமுகக்காட்சியில் அவர் கவர்ச்சியாகக் காட்டப்பட்டிருந்தாலும், பிறகு கண்ணியத்துடன் திரையில் வந்து போயிருக்கிறார். ஆனால், இக்கதையில் அவரது பாத்திரத்தின் பங்களிப்பு பெரிதாக இல்லை.
இது போகச் சில தெலுங்கு நடிகர்கள் இதில் நடித்திருப்பதாகச் சொல்கின்றன விக்கிபீடியா தகவல்கள். ஒருவேளை அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் ‘கட்’ ஆகியிருக்கக்கூடும்; இரண்டு மணி நேரம் மட்டுமே படம் திரையில் ஓடுவதில் இருந்து அவ்வாறு எண்ண வேண்டியிருக்கிறது.
தொடக்கத்தில் வரும் 45 நிமிடக் காட்சிகளில் சில காட்சிகள் விடுபட்டிருப்பதாகத் தோன்றுவதும், சில இடங்களில் இருக்கிற தொய்வும் தொடர்ச்சியின்மையும் அதற்குக் காரணமாக இருக்கின்றன.
‘விமானம்’ படத்தை இயக்கிய சிவபிரசாத் யனலா இதன் கதையை எழுதியிருக்கிறார். திரைக்கதை வசனம் எழுதி அதற்கு உருவம் தந்திருக்கிறார் தன்ராஜ்.
குறிப்பிட்ட திசை நோக்கி நகரும் கதை என்பதால், அனைத்துக் காட்சிகளிலும் குறிப்பிட்ட அம்சங்களுக்கு முக்கியத்துவம் தந்து, அவற்றை அழுத்திச் சொல்வது அவசியம். அதனைக் கைக்கொண்டிருக்கிறார் தன்ராஜ்.

ஒரு நாயக நடிகர் நடித்திருக்கலாமோ?
படத்தில் சீட்டு விளையாடும் இடத்தில் தன்ராஜ் பாத்திரம் மோசடி செய்ததாகக் கூறி ஒரு சண்டைக்காட்சி வருகிறது. நாயகியை நாயகன் முதன்முறையாகக் காண்கிற காட்சியும் திடீரென்று வந்து போகிறது.
போலவே, நாயகன் நாயகியிடம் காதலைச் சொல்கிற காட்சியும் தெளிவாக வடிவமைக்கப்படவில்லை.
அது போன்ற ‘திடீர்’களைத் தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஒளிப்பதிவாளர் துர்க பிரசாத் கொல்லி, இக்கதையைத் திரையில் சொல்வதில் ‘குறும்படம்’ பார்த்த உணர்வு வந்துவிடக் கூடாது என்பதில் மெனக்கெடலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் மார்த்தாண்ட் வெங்கடேஷ், திரையில் கதை சீராக விரியத் துணை நின்றிருக்கிறார். என்ன, இரண்டாம் பாதியில் தொடர்ந்து நான்கைந்து பாத்திரங்களையே மீண்டும் மீண்டும் பார்க்கிற உணர்வு எழுகிறது. அதனைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.
தௌலூரி நாராயணாவின் கலை வடிவமைப்பு, காட்சிகளுக்கு ஏற்ற பின்னணியை பிரேம்களில் அடுக்கியிருக்கிறது.
இப்படத்தின் இசையை அருண் சிலுவெரு அமைத்திருக்கிறார். பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையானது உணர்ச்சியமயமான காட்சிகளில் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது.
’ராமம் ராகவம்’ படத்தை முழுமையாகச் சமுத்திரக்கனியே ஆக்கிரமித்திருக்கிறார். அப்படியொரு கதையை உள்வாங்கி, அந்த உலகத்தைத் திரையில் படைத்த வகையில் ஒரு இயக்குனராகத் தன்ராஜின் பங்கு பாராட்டுக்குரியது.
தமிழுக்கு வசனங்களை மொழிபெயர்த்தது யார் என்று தெரியவில்லை. ஆனால், எங்கும் துருத்தல்கள் தென்படாமல் நேர்த்தியாக வசனம் அமைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
இப்படத்தின் முடிவு சிலருக்கு உவப்பைத் தராது. அதேநேரத்தில், நல்ல படம் பார்த்த திருப்தியைத் தந்துவிடுகிறார் இயக்குனர்.
இக்கதையில் நிறைய லாஜிக் மீறல்கள் தென்படுகின்றன. சினிமாத்தனத்தோடு சில காட்சிகள் யதார்த்தத்தில் இருந்து முழுமையாக விலகி நிற்கின்றன.
இக்கதையில் தன்ராஜ் ஏற்ற பாத்திரத்தில் ஒரு நாயக நடிகர் நடித்திருக்கலாம் என்றும் சிலர் சொல்லக்கூடும்.
அது போன்ற குறைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டால், இக்கதையில் விடுபட்டுப் போனதாக உணர வைக்கிற சில காட்சிகளைப் படம்பிடித்திருந்தால் அல்லது படத்தொகுப்பின்போது வெட்டப்பட்டவற்றைத் தகுந்த வகையில் சேர்த்திருந்தால், ஒரு முழுமையான ‘பீல்குட் ட்ராமா’ ஆக ‘ராமம் ராகவம்’ திரைக்கதை அமைந்திருக்கும்.
தந்தையைப் புரிந்துகொள்ள குழந்தைகளின் மனவோட்டத்தை வெளிப்படுத்துவதாக, அப்படிப்பட்ட தந்தைகளின் ஆதங்கத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்வதாக, இந்தப் படத்தை நோக்க முடியும். அதனால் இது ‘செண்டிமெண்ட்’டை மையப்படுத்திய படமே. அதனை விரும்புபவர்கள் ‘ராமம் ராகவம்’ படத்தைக் காணலாம்!