”சாம்சங் ஊழியர்களின் தொழிற்சங்க விவகாரத்தில் நீதிமன்றம் என்ன உத்தரவு விதித்தாலும், அதனை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது” என அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (அக்டோபர் 10) தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைத்தல், ஊதிய உயர்வு உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒருமாதமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டக்குழு நிர்வாகிகள் 10 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போராட்ட பந்தலையும் வருவாய் துறை அதிகாரிகள் இரவோடு இரவாக அகற்றினர்.
எனினும் இன்று காலையும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அவர்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக கைது செய்து வேனில் ஏற்றிய போலீசார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
இதற்கிடையே சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சாம்சங் நிறுவனம் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள்!
அப்போது அவர், “முதலமைச்சர் ஸ்டாலின் சாம்சங் தொழிலாளர்களின் விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவர் அறிவுறுத்தியதன் பேரில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்த விவகாரத்தில் தொழிலாளர் நலனை நாம் முழுமையாக காக்க வேண்டும். அதேநேரத்தில் மாநிலத்தில் உள்ள படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் கருத்தில் கொண்டு மாநில அரசு இந்த பிரச்சனையை ஆரம்பத்தில் இருந்து அணுகி வருகிறது.
தமிழக அரசின் சார்பில் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதில் குறிப்பிட்டு சொல்லும்படியாக, தற்போது வழங்கப்பட்டு வரும் மாத ஊதியத்துடன் அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து ரூ.5000 கூடுதலாக வழங்கப்படும். பணிக்காலத்தில் தொழிலாளி ஒருவர் இறக்க நேரிட்டால், அந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு சிறப்பு உடனடி நிவாரணமாக ரூ. 1 லட்சம் வழங்கப்படும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குளிரூட்டப்பட்ட பேருந்து வசதிகள் உருவாக்கி தரப்படும். தற்போது வழங்கப்பட்டு வரும் விடுமுறையுடன் குடும்ப நிகழ்வுகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் நிறைவேற்ற ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
போராட்டத்தை கைவிட வேண்டும்!
இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சாங் சிஐடியூ அமைப்பு, தொழிற்சங்கம் பதிவு குறித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் நடந்து வரும் நிலையில், இதுகுறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், தொழிலாளர் நலத்துறை நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளும். இது சிஐடியூ அமைப்பிற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, சிஐடியு அமைப்பு இந்த போராட்டத்தை கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.
வீடு புகுந்து கைது செய்தனர் என்பது தவறானது!
மேலும் அவர், “வீடு புகுந்தெல்லாம் யாரும் கைது செய்யப்படவில்லை. அங்கு விபத்து நடந்த இடத்தில் காப்பாற்ற சென்ற போலீசாருடன் சிறு மோதல் போக்கு ஏற்பட்டது. அதில் ஈடுபட்டவர்களை மட்டும் தான் போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். வீடு புகுந்து கைது செய்தனர் என்று கூறுவது தவறானது.
பொதுவாக அனுமதியின்றி அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தினால் என்ன செய்வார்களோ அதை தான் காஞ்சிபுரம் காவல்துறை செய்துள்ளனர். இதில் எந்தவித அடக்குமுறையும் காவல்துறை செய்யவில்லை.
அந்த பகுதியில் உள்ள பல தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொழிற்சங்கங்கள் பதிவு செய்வதற்கு, தொழிலாளர் நலத்துறை ஒன்றும் எதிரானது அல்ல. பல தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போராடும் சாம்சங் தொழிலாளர்கள் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர அரசு தயாராக உள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு!
உண்மையில் சிஐடியூ அமைப்பினர் சங்கத்தை பதிவு செய்வதற்காக தொழிலாளர் நலத்துறையிடம் விண்ணப்பித்தனர். அதற்கு சாம்சங் நிறுவனம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு விளக்கம் கேட்டு சிஐடியு அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கிடையே கடந்த 30ஆம் தேதி சிஐடியு அமைப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தற்போது நீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதனை தொழிலாளர் நலத்துறை நிறைவேற்றும்.
தமிழ்நாட்டில் முதலமைச்சரின் நடவடிக்கையால் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் நிலவுகிறது. சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை முதலமைச்சர் அரசியலாக பார்க்கவில்லை. தொழிற்சங்க விவகாரத்தில் நீதிமன்றம் என்ன உத்தரவு விதித்தாலும், அதனை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது.” என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிக் பாஸ் – 8: டஃப் கொடுக்கும் ஆண்கள்… குழப்பத்தில் தவிக்கும் பெண்கள் அணி!