சாம்சங் பிரச்சினை: “போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” – சிஐடியு-க்கு தொமுச வேண்டுகோள்!

Published On:

| By Minnambalam Login1

samsung issue lpf citu

சாம்சங் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவாக  முடிவுகாண வேண்டும் என சி.ஐ.டி.யு.க்கு தொ.மு.ச பேரவை  இன்று (அக்டோபர் 13) வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொ.மு.ச பேரவை வெளியிட்ட அறிக்கையில் ” திமுக ஆட்சியில் இல்லாதபோதும் கூட இடதுசாரிகளை ஆதரித்த ஓர் இயக்கம். நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சியில் போட்டியிட்ட அனந்த நம்பியாருக்கு, திமுகவை தோற்றுவித்த அண்ணா கழகத் தோழர்களின் கருத்தை நிராகரித்து அவரை ஆதரித்த வரலாறு உண்டு.

அதேபோல் போக்குவரத்துக் கழகத்தில் உயர்நீதிமன்ற ஆணைப்படி ஒரே சங்கமாக இருக்க வேண்டுமென்ற தீர்ப்பின்படி 2010-ல் நடைபெற்ற தேர்தலில் தொ.மு.ச. 57% சதவிகித வாக்குகளைப் பெற்று முதன்மைச் சங்கமாகத் தேர்வு செய்யப்பட்டது. அப்போது சி.ஐ.டியு, 14% வாக்குகள் மட்டுமே பெற்றது.

ஆனால் இச்செய்தியை கேள்விப்பட்ட கலைஞர் வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது சி.ஐ.டி.யு. தோல்வி குறித்து தன் வருத்தத்தை தெரிவித்திருந்தார். இந்தச் சூழ்நிலையில் சென்னை மற்றும் சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிற்சாலைகளில் நடைபெற்ற போராட்டங்களில் இடதுசாரிகளை அழைத்துப் பேசி ஓர் இணக்கமான முடிவுகளை மேற்கொண்டது திமுக அரசு.

ஏன்? கடந்த 2006-2011 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் கூட ஹூண்டாய் நிறுவனத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க. அரசு சுமூகமாக பேசி போராட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது. அந்தப் பிரச்சினையில் மறைந்த பேரவைத் தலைவர் குப்புசாமியும் நானும் அப்போது தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த தா.மோ.அன்பரசனும் எவ்வளவு முயற்சியில் ஈடுபட்டோம் என்பதை தொழிற்சங்க இயக்கங்கள் மறந்திருக்க முடியாது.

2001-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்களான போக்குவரத்து, மின்வாரியம் மற்றும் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் போனஸ் அறிவிப்பு அநீதியைக் கண்டித்து தன்னெழுச்சியாக 17 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நாம் அனைவரும் கூடி எடுத்த முடிவின் அடிப்படையில் நிபந்தனை ஏதுமின்றி வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றோம்.

அதன் விளைவாக பல தொழிலாளர்கள் பல்வேறு அடக்குமுறை, பணி நீக்கம், ஊதிய இழப்பு போன்றவற்றை எதிர்கொண்டோம். அப்போது நான் தந்த வாக்குறுதி அடிப்படையில் 2006-ஆம் ஆண்டு தி.மு.அரசு அமைந்தபோது பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணிக்கு எடுப்பது, வேலைநிறுத்த நாட்களை பணி நாளாகக் கருதி ஊதியம் வழங்குவது, தண்டனைகளை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை தி.மு.க அரசு செய்து தந்துள்ளது என்பது கடந்த கால வரலாறு.

samsung issue lpf citu

சர்வதேச தொழிலாளர் அமைப்பு கொண்டு வந்த தீர்மானம் 1949 முதல் சங்கம் அமைக்கும் உரிமை 87, கூட்டுபேரம் எண்.98 ஆகிய தீர்மானங்கள் இந்தியா உட்பட ஏன் சீனாவில் கூட ஏற்றுக் கொள்ளப்படாமல் இருப்பது அனைவரும் அறிந்த உண்மை.

இருப்பினும் தமிழ்நாட்டில் சங்கங்களைப் பதிவு செய்வதில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பதிவு செய்து கொடுப்பதும் பேச்சுவார்த்தைக்கு வராத நிர்வாகத்தை அழைத்து பேசுவதும் இதனால் பலன் அடைந்தது அதிகமாக சி.ஐ.டி.யு. சங்கம்தான் என்பதை மறந்து இந்த சாம்சங் பிரச்சினையை மிகவும் பெரிதுபடுத்தி அதனை முடிவுக்குக் கொண்டுவர இயலாத நிலை ஏற்படுவதை எங்கள் தொ.மு.ச. நிர்வாகிகள் தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்நிலையில் இந்தப் போராட்டம் சம்மந்தமாக நீங்கள் கொடுத்த அறிக்கையின்படி நாங்கள் அறிந்து கொள்வது சங்கத்தை பதிவு செய்ய தொழிலாளர் துறையில் கொடுத்து இருப்பதாகவும், அது காலதாமதமாகி உள்ளது.

அதனால் தாங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றதாகவும் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கினைத் தொடர்ந்து ஒரு தேக்க நிலையை உருவாக்கி தொழிலாளர் துறை பதிவு எண் வழங்கவில்லை என்று அரசின் மீது குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

அனைத்து அமைச்சர்களும் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தீர்ப்பு வந்தவுடன் பதிவு எண் வழங்குவதில் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இது சாம்சங்குக்கு மட்டும் புதிதல்ல. State Bank of India-ல் உள்ளவர்கள் தங்கள் சங்கத்தை பதிவு செய்தபோது SBI நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கின் இறுதியில் பதிவு எண் வழங்கலாம் என தீர்ப்பு கிடைத்த பின் அச்சங்கத்திற்கு பதிவு எண் வழங்கப்பட்டது என்பதை தாங்கள் அறிவீர்கள்.

ஒரு சங்கத்தை அங்கீகரிக்க வேண்டுமென்றால் ஒரு சங்கம் பதிவு செய்து ஒரு ஆண்டு காலம் முடிந்தவுடன் அங்கீகாரம் கோரலாம். அப்படி நிர்வாகம் State Implementation of Evaluation கமிட்டிக்கு விண்ணப்பித்து தங்களுடைய உறுப்பினர்களை நிரூபித்து அதன்படி அதிக உறுப்பினர்களை பெற்றிருந்தால் அரசு அச்சங்கத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கலாம்.

ஆனால், இந்தியாவிலும் சரி. தமிழ்நாட்டிலும் சரி எந்தவொரு சங்கத்தையும் அங்கீகரிப்பதற்கான ஒரு சட்டம் தற்பொழுது இல்லை. அதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டு வருகின்றோம். சட்டம் இல்லாதபோது சட்டப்படி அரசு நடக்கவில்லை என்று நீங்கள் குறை கூறுவதில் என்ன நியாயம் உள்ளது?

இந்தப் பிரச்சினை குறித்து தமிழ்நாட்டு முதலமைச்சர் உங்களுடன் பேச வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஜூலை 7 ஆம் தேதி நான் டெல்லியில் இருந்து புறப்பட்டு வந்து உங்களோடு பேசி உங்கள் கோரிக்கைகளை தொழிலாளர் நல அமைச்சர் முன்பாக விவரித்து அதன் மீது தீர்வு காண்பதற்கு முயற்சிகள் தொடர்ந்து எடுத்து வருவதை மறந்திருக்கமாட்டீர்கள்.

அதன் பிறகு தொழிலாளர் துறையில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் நிர்வாகம் ஒத்துக் கொள்ளவில்லை என்று நீங்கள் எடுத்துக் கூறிய பிறகு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் கூறியது அரசு மேற்கொண்ட முயற்சி தொழிலாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு இல்லையா?

அமைச்சர்கள் குழுவிடம் நீங்கள் தொழிற்சங்கப் பதிவு பிரச்சினை நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு அந்த கோரிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டீர்கள். ஆனால் உங்கள் கோரிக்கை பட்டியலை தந்து இதன்படி நிர்வாகம் எங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென்று கேட்கப்படவில்லையா?

ஆனால் சாம்சங் நிர்வாகம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் ஊதிய உயர்வு வழங்கி வருகின்றது. அதன்படி 1.4.2025-க்குப் பிறகுதான் புதிய ஊதிய உயர்வு வழங்க முடியும் என்று நிர்வாகம் கூறிவிட்டது.

இந்நிலையில் அமைச்சர்கள் சாம்சங் நிர்வாகத்தை நிர்பந்தித்து இடைக்கால நிவாரணமாக ரூ.5000/- மற்றும் நீங்கள் வைத்த கோரிக்கைகள் சிலவற்றையும், வைக்காத சில கோரிக்கைகளையும் நிர்வாகம் ஏற்றுக் கொண்டுவிட்டதாக உங்களிடம் தெரிவித்தது தொழிலாளர் ஆதரவு நிலையில்லையா?

இவை அனைத்தையும் மறைத்து புதிய கோணத்தில் அரசை நிர்வாக ஆதரவு நிலை எடுப்பது போல் சித்தரித்து போராட்டத்தை பெரிதுபடுத்தி, இப்போது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் பல சிக்கல்கள் மேலும் மேலும் உருவாகி வருகிறது.

இதனால் சகோதர அமைப்புகளாக உள்ளவர்கள் எவ்வாறு நல்ல முடிவு எடுக்க முடியும் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒன்றை நாங்கள் நினைவுபடுத்த விரும்புகின்றோம். நாங்களும் சங்கம் அமைத்து ஒசூரிலும் அம்பத்தூரிலும் பல தொழிற்சாலைகளில் போராடி வேலையிழந்து தொழிலாளர்கள் தவிப்பதும், அதற்கு தீர்வுகாண நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலாமல் இருப்பதையும் அனைவரும் அறிவார்கள்.

பல நிர்வாகங்கள் பெரும்பான்மை தொழிலாளர்களை ஏற்றுக் கொள்ளாமல் ஒரு குறிப்பிட்ட தொழிலாளர்களை வைத்து ஒப்பந்தம் போட்டிருப்பது தமிழ்நாட்டிற்கு ஒன்றும் புதியது அல்ல.

சாம்சங்கில் மட்டும் நடப்பதாக சித்தரித்து பெரிதுபடுத்துவது சரியல்ல. தமிழ்நாடு முதலமைச்சர் எல்லா முயற்சிகளும் மேற்கொண்டு வரும் சூழலில் அவரை தரம்தாழ்ந்து பேசுவதும், அவரை விமர்சிப்பதும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சரியாக இருக்குமா என்பதை நீங்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு பிரச்சினையில் இளைஞர்கள், தொழிற்சங்கம் அனுபவம் இல்லாதவர் கள் உணர்ச்சி வசப்பட்டு போராட்டத்தில் இறங்கி விடுவது என்பது ஒன்றும் புதியது அல்ல. ஆனால் அனுபவம்மிக்க தொழிற்சங்கத் தலைவர்கள் அவர்களி டம் இதனை எடுத்துக்கூறி இந்தப் போராட்டத்தை தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

அரசு எல்லா நிலைகளிலும் தங்களுடைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு உறுதுணையாக தொ.மு.ச. பேரவையும் செயல்பட்டு வருகிறது. அந்த சூழலில் தாங்கள் பிரச்சினையை மேலும் பெரிதுபடுத்தாமல் ஓர் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தங்கள் அனுபவத்தை கொண்டு முடிவுக்கு வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? – வானிலை மையம் அப்டேட்!

விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ : விமர்சனம்!

சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை… அரசின் நடவடிக்கைகள் என்ன?: உதயநிதி விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share