மு.இராமனாதன்
“உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா?” – இப்படி ஒரு கேள்வியை எழுப்பியவர் கவிஞர் கண்ணதாசன்.
அவரே பதிலும் சொல்கிறார்: “எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ.சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவில் இருபது சதவிகிதம் திரு. சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே.” கண்ணதாசன் சொன்னது உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை என்பது சாமிநாத சர்மாவின் நூலை வாசிக்கிற யாராலும் உணர முடியும்.
வெ. சாமிநாத சர்மா (1895-1978) எழுதிய நூல்கள் சுமார் 80. படைப்பிலக்கியத்துக்கும் கணிசமாகப் பங்களித்திருக்கிறார். எனினும் இவர் நினைவுகூரப்படுவது நாட்டு வரலாறுகளுக்கும், வாழ்க்கை வரலாறுகளுக்கும், அரசியல் ஆய்வுக் கட்டுரைகளுக்காகவும்தான்.
சாமிநாத சர்மா 1932-42 கால கட்டத்தில் பர்மாவில் வசித்தார். ஜோதி எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். அந்நாளில் பர்மாவில் வசித்தவர் செ.முஹம்மது யூனூஸ். ‘எனது பர்மா குறிப்புகள்’ (காலச்சுவடு, 2009) எனும் நூலில் யூனூஸ் சொல்கிறார்:
“ஜோதி இதழில் பெரும்பகுதி வரலாற்றுக் கட்டுரைகளாக இருக்கும். சிறப்புமிக்க தலைவர்களுடைய வரலாறு, நாட்டு வரலாறு என்றிருக்கும். ‘ஜோதி’யிலிருந்து மாதம் ஒன்றோ இரண்டோ நூல்களும் வெளிவரும். தாமஸ் ஆல்வா எடிசன், ஐசக் நியூட்டன் போன்ற விஞ்ஞானிகள், ஹிட்லர், முஸோலினி போன்ற சர்வாதிகாரிகள், இங்கர்சால், பிளாட்டோ போன்ற அறிஞர்களின் வரலாறு இருக்கும். இன்னும் மாஜினி, ஸன் யாட் ஸன், காந்தியடிகள், திலகர் போன்ற தலைவர்களின் வரலாற்றையும் எளிய தமிழில் தந்துவிடுவார்.”
அப்படி சாமிநாத சர்மா எளிய தமிழில் தந்த நூல்களுள் “சீனாவின் வரலாறு” முக்கியமானது. தமிழகமும் சீனமும் முன்பொரு காலத்தில் நெருக்கமாக இருந்தவை. கடாரம் கொண்ட ராஜேந்திர சோழன், வங்கக் கடலையும் தென் சீனக் கடலையும் தாண்டி சீனாவுடன் வணிகம் நடத்தியிருக்கிறான். சீனத் துறவியான போதி தர்மரின் பூர்வாசிரமக் கதைகளில் அவர் ஒரு பல்லவ இளவரசர் என்கிற கதைதான் பிரபலமானது. ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளில் சீனப் பயணிகள் காஞ்சிக்கு வந்திருக்கிறார்கள். உலகம் முழுதும் சுற்றிய பயணி ஹூவான் சுவாங் பல்லவப் பேரரசைப் பற்றி எழுதிய குறிப்புகள் பிரபலமானவை. 2019இல் சீனத் தலைவர் ஷி ஜின்பிங் இந்தியா வந்தபோது அவரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சந்திப்பதற்கான களமாக மாமல்லபுரம்தான் தெரிவு செய்யப்பட்டது.
எனினும் பழங்காலத் தொடர்புகளோ, பண்பாட்டு ஒற்றுமைகளோ தமிழர்களுக்குச் சீன வரலாற்றின் மீது ஆர்வத்தைக் கிளர்த்தவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். முதலாவது, பொதுவாக வரலாற்றின் மேல் நம்மவர்களுக்கு இருக்கும் அக்கறையின்மை. இரண்டாவது, சீனாவின் மேல் இருக்கும் ஒவ்வாமை. எல்லைப் பிரச்சினைகள், 1962ஆம் ஆண்டு போர் உருவாக்கிய கசப்பான அனுபவங்கள், 2020இல் சீனத் துருப்புகள் எல்லை தாண்டி, இந்திய ராணுவ வீரர்களைக் கொன்ற நிகழ்வு என்று இது தொடர்கிறது. எவ்வாறாயினும் சீனா நமது அண்டை நாடு. நமது அண்டை நாட்டை நாம் இடம் மாற்ற முடியாது. மேலும் சீனா இன்று பெரும் சக்தியாக உருவெடுத்திருக்கிறது.
இந்தக் காரணங்கள் பற்றியே சீனாவைப் பற்றி நாம் கூடுதலாக அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு வரலாறுதான் முதற்படி. அதைத்தான் சாமிநாத சர்மா செய்தார்.
ஏடறிந்த வரலாற்றுக்கு முந்தைய தொன்மங்களிலிருந்தே இந்த நூல் ஆரம்பமாகிவிடுகிறது. கிறிஸ்துவுக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது பரம்பரை பேரரசுகளின் காலம். அவற்றின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பொற்காலங்களையும் இருண்ட காலங்களையும் காய்தல் உவத்தல் இன்றி சொல்லிச் செல்கிறது இந்த நூல். அந்நிய வல்லரசுகளின் ஆக்கிரமிப்பையும் அவர்தம் சமச்சீரற்ற வணிக ஒப்பந்தங்களையும் அபினின் பேரால் நடந்த போர்களையும் சொல்லி, அழித்தும் அழிபடாத தேசமாக விளங்கியது சீனா என்கிறார் சாமிநாத சர்மா. 1912இல் முடியாட்சிகளின் முடிவில் குடியரசின் ஆட்சி தொடங்கியது. 1921இல் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. 1937இல் தொடங்கிய ஜப்பானிய ஆக்கிரமிப்பு, 1945இல் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் முடிவில் 1949இல் மக்கள் சீனக் குடியரசை நிறுவினார் மா சே துங். அத்துடன் இந்த நூலும் நிறைவு பெறுகிறது.
இந்த நூல் ஆண்டுகளின் எண்களையும் அரசியலர்களின் பெயர்களையும் அடுக்கிச் செல்லும் தகவல் வங்கி அல்ல. ஒரு நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ள அதன் மண்ணை, மக்களை அறிந்திருக்க வேண்டும் என்பதில் ஆசிரியருக்கு எந்த ஐயமும் இல்லை. ஆதலால் நாட்டின் நிலவியலை, அதன் பரப்பை, மனிதவளத்தை, நீர்நிலைகளை, வேளாண்மை சார்ந்த கலாச்சாரத்தை, கோயில்கள், அரண்மனைகள் முதலான பாரம்பரியச் சின்னங்களை விளக்கிச் செல்கிறார். சீன மொழி சித்திர எழுத்துகளிலானது. ஒவ்வொரு எழுத்தும் ஒரு சொல். இது மொழி குறித்த நம் புரிதலைப் புரட்டிப் போடக் கூடியது. எனில், ஒரு தேசத்தின் வரலாற்றைப் படிப்பதற்கு இந்தப் புரிதல் அவசியமானது. சீனாவின் மண்ணில் கிளைத்த மதங்களையும், அயலில் இருந்து வந்த மதங்களையும் அவை மக்களிடம் செலுத்திய செல்வாக்கையும் விளக்குகிறார். சீனர்கள் குடும்ப அமைப்புக்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள். நீத்தார் வழிபாடும் மரணச் சடங்குகளும் அவர்தம் பண்பாட்டு விழுமியங்களில் முக்கியமானது. சீனர்களின் மணவிழாச் சடங்குகளும் வழிபாட்டு முறைகளும் அவரது விவரிப்பில் இடம் பெறுகின்றன. சீனர்களின் தத்துவ நெறிகளையும் இலக்கியச் செழுமையையும் விரிவாகப் பேசுகிறார். காகிதம், பீங்கான், வெடி மருந்து, தேநீர் முதலான சீனர்களின் கண்டுபிடிப்புகளும் அவரது விவரணையில் இடம் பெறுகின்றன. இந்தப் பின்புலத்தில் சீனர்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் வாசகனால் நெருங்கிப் புரிந்துகொள்ள முடிகிறது.
சாமிநாத சர்மா தனக்கெனத் தெரிந்து கொண்ட சொல்முறையும் பேசப்பட வேண்டியது. இது பாடப்புத்தகத்தின் தட்டையான தொனி அன்று. அதே வேளையில் ஒரு வரலாற்றுப் பாத்திரத்தை தனது ‘நோக்கு நிலைக்கு இழுத்துக் கொண்டு வருவதில்’ அவருக்கு உடன்பாடில்லை. அந்தப் பாத்திரத்தை ‘அவரது நோக்குநிலையில் இருத்தி வைத்துக் காண்பதி’லேயே அவர் விருப்பு உடையவராக இருக்கிறார். அதே வேளையில் அவர் கரையோரம் நின்று கதை சொல்வதில்லை. மாறாகப் பாத்திரங்களுக்குள்ளும் சம்பவத்துக்குள்ளும் ஆழ்ந்து போகிறார். அப்படி உணர்ச்சியுடன் சொல்வதுதான் தனது பாணி என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.
பெய்ஜிங் அரண்மனைகளை விவரிக்கிறபோது ஒரு கவிஞராக மாறி ‘ எத்தனை நிலா முற்றங்கள்! எத்தனை எத்தனை வாவிகள்! எத்தனை எத்தனை மண்டபங்கள்!’ என்று வர்ணிக்கிறார். ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பை விவரிக்கிறபோது அவரது ஆதரவு யாருடைய பக்கம் இருந்திருக்கும் என்று ஊகிப்பது கடினமன்று. ‘ஜப்பானியர்கள், தாங்கள் ஆக்கிரமித்துக்கொண்ட பிரதேசங்களில் உயிரழிவையும் பொருளழிவையும் உண்டுபண்ணியதுகூட அவ்வளவு கொடுமையில்லை; சீனர்களின் கலைப்பண்பையே, சீனர்களின் நாகரிக வாழ்க்கையையே அழித்துவிட முயற்சி செய்தார்களே… அதுதான் கொடிதினும் கொடியது’ என்று உணர்ச்சி வசப்படுகிறார். ‘ஒரு நூலாசிரியனுக்கு உணர்ச்சி ஓரளவு இன்றியமையாததாகவே இருக்கிறது’ என்பது அவர் கருத்து.
அவருக்குத் தனது வாசகனைக் குறித்துத் தெளிவான சித்திரம் இருந்தது. அரசியல், வரலாறு சார்பான நூல்கள் அதிகம் எழுதியதற்கு அந்தத் ‘துறைகள் பற்றிய நூல்கள் தமிழில் அதிகம் இல்லை’ என்பதும், ‘இந்தக் குறையைத் தம்மால் இயன்றவரை தீர்ப்போம்’ என்கிற அவாவும்தான் காரணம் என்று அக்டோபர் 1971இல் ‘நூலகம்’ எனும் இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர் தெரிவிக்கிறார். தனது வரலாற்று மாந்தர்களைப் போலவே தனது வாசகனின் மீதும் எல்லையற்ற கரிசனம் கொண்டவர் அவர்.
வாசகனின் தோள் மீது கைபோட்டுக் கொண்டு கதை சொல்லும் நண்பனல்ல அவர். வாசகனை மடியில் இருத்திச் செல்லம் கொஞ்சிக்கொண்டு கதை சொல்லும் மாமனுமல்ல அவர். மாறாக அவர் வாசகனை அகலாது அணுகாது தீக்காயும் தொலைவில் நிற்கிறார். ஒரு பள்ளி ஆசிரியரின் தொனி இந்த நூலில் தென்படலாம். ஆனால், அவர் வாசகனுக்கு அச்சமூட்டுவதில்லை. வாசகனை மிகுந்த மதிப்போடும் பிரியத்தோடும் கதை கேட்க வைத்துவிடும் அன்பாசிரியர் அவர்.
இந்த நூல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நிறுவப்பட்ட 1949இல் முடிகிறது. அதற்குப் பிறகான சீனாவின் வரலாறும் மிக முக்கியமானது. அந்த வரலாற்றின் சுருக்கமும் இந்த நூலின் முன்னுரையில் உட்படுத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு வகையில் நூலுக்கு முழுமை தருகிறது.
சீனா பொருளாதாரத்திலும் ராணுவ பலத்திலும் இன்று முன்வரிசையில் நிற்கிறது. யுத்தங்களையும் பஞ்சங்களையும் வறுமையையும் படுகொலைகளையும் சதிகளையும் கடந்துதான் சீனா இந்த நிலையை எட்டியிருக்கிறது. சீனாவின் இந்த நெடிய வரலாற்றின் பெரும் பகுதியைச் சொல்கிறது இந்த நூல். பல ஆண்டுகளாக பதிப்பில் இல்லாதிருந்த இந்த நூலை நல்ல அச்சோடும் அமைப்போடும் கொண்டு வந்திருக்கிறது மலர் புக்ஸ்.

**மு.இராமானாதன்** – எழுத்தாளர், பொறியாளர், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
சீனாவின் வரலாறு
வெ.சாமிநாத சர்மா
முன்னுரை: மு.இராமனாதன்
வெளியீடு: மலர் புக்ஸ்
விலை: ரூ.480/-
விற்பனை: பரிசல் புத்தக நிலையம்
P பிளாக், 235, MGR முதல் தெரு
MMDA காலனி, அரும்பாக்கம்
சென்னை 600 106.
செல்பேசி: 9382853646, 8825767500
வங்கிக் கணக்கு:
Parisal Putthaga Nilayam
Bank of Maharastra
Anna Salai Branch,
Chennai – 6
a/c no 20017942875
IFSCode MAHB0000400