சமந்தா தயாரிக்கும் ‘சுபம்’… என்ன ஸ்பெஷல்?

Published On:

| By uthay Padagalingam

சமீபகாலத்தில் சமூகவலைதளங்களில் அதிகமாக ‘ட்ரோல்’ செய்யப்பட்ட பிரபலங்களில் ஒருவர், நடிகை சமந்தா. samantha produce shubham movie

சாதாரணப் பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்து, கல்லூரிக் காலத்தில் மாடலிங் உலகுக்குள் நுழைந்து, பின்னர் நடிகையாகிச் சில படங்களில் தலைகாட்டி, மெல்ல அவர் ஒரு நட்சத்திரமாக உருமாறியது நிச்சயம் சாதனையே.

ADVERTISEMENT

தனிப்பட்ட வாழ்வில் நேர்ந்த சங்கடங்களை அடுத்து, மீண்டும் அவர் திரையுலகில் புதுப்புனலெனப் பொங்கிப் பிரவாகமெடுப்பது நமக்குத் தெரிந்த விஷயம் தான்.

அப்படிப்பட்ட சமந்தா, இப்போது படத் தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறார். அவரது நடிக்கிற ‘மா இண்டி பங்காரம்’ எனும் தெலுங்கு படத்தைத் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதோடு, புதுமுகங்கள் அதிகளவில் இடம்பெற்றிருக்கிற ‘சுபம்’ படத்தையும் தயாரிப்பதாகச் சொல்லப்பட்டது. இதுவும் தெலுங்கு படம் தான்.

ADVERTISEMENT

இதோ, இப்போது ‘சுபம்’ முழுமையாகத் தயாராகி ‘ரிலீஸ்’ ஆகிற நிலையை எட்டியிருக்கிறது. வரும் மே 9 அன்று இது தியேட்டர்களில் வெளியாகிறது.

இதன் டீசர் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ADVERTISEMENT

‘டீசர்’ உள்ளடக்கம்!

புதிதாகத் திருமணமான இளம் தம்பதி. அப்பாவியான கணவன் தன்னைப் போலவே கண்களில் அப்பாவித்தனத்தைப் பிரதிபலிக்கிற மனைவியிடம் ‘பந்தா’வாகப் பேச முயற்சிக்கிறார்.

‘அம்மா என்ன பேசிட்டு போறாங்க’ என்று அவர் கேட்க, ‘என் பிள்ளைக்கு ஒண்ணும் தெரியாது. நீதாம்மா அவனைப் பார்த்துக்கணும்னு சொன்னாங்க’ என்கிறார் அப்பெண். பதிலுக்கு, ‘என்னை ரஃப் அண்ட் டஃப்பா வீட்ல யாரும் பார்த்தது இல்ல’ என்று அந்த கணவன் அதற்கு ‘கவுண்டர்’ கொடுத்து சமாளித்துக் கொண்டிருக்கும்போதே, மனைவி டிவியை ‘ஆன்’ செய்து ஒரு சீரியலை பார்க்கத் தொடங்குகிறார்.

இந்த நேரத்துல எதுக்கும்மா சீரியல் என்று அந்த ஆண் கேட்க, அப்பெண் எதுவும் பதிலளிப்பதில்லை. இரண்டு மூன்று முறை கேட்டபிறகும் மௌனமே பதிலாக இருக்க, பொறுமையைக் கைவிட்டு ‘எதுக்கு இந்த சீரியல்’ என்று கணவன் கத்துகிறார். உடனே, அந்த மனைவி தலையைத் திருப்பி முறைத்துப் பார்க்கிறார்.

அதன்பிறகு, அந்த சுற்றுவட்டாரத்திலுள்ள எல்லா பெண்களுமே அந்த சீரியலை பார்த்துவிட்டு இப்படித்தான் ஆத்திரப்பட்டிருக்கின்றனர் என்று தெரிய வருகிறது. பல வீடுகளில் மனைவிமார் பொருட்களைத் தூக்கி அடிக்கின்றனர்.

வீடுகளைத் தாண்டி தெருக்களிலும் உடைந்த நிலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன.

முடிவில், ‘ஆல்பா மேல்’ குறித்த நாயகனின் கேள்விக்கு இரண்டு பேர் பதிலளிக்கின்றனர். அதில் ஆணாதிக்கம் தலை தூக்கி நிற்பதாகக் காட்டுவதோடு டீசர் நிறைவடைகிறது.

காதலின் போது மட்டுமல்லாமல், தினசரி வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் பெண்ணைத் தனக்குச் சமமாக நினையாத ஆண்களின் கதி என்னவென்று சொல்வதாக அமைந்திருக்கிறது ‘சுபம்’ டீசர்.

‘ஹாரர் காமெடி’ வகைமையில் அமைவதாகத் தோற்றமளித்தாலும், இப்படத்தில் ரசிக்கத்தக்க வேறு பல அம்சங்களும் இருக்குமென்ற நம்பிக்கையைத் தருகிறது இது.

புதிய முகங்கள்!

’சுபம்’ படத்தில் எத்தனை சதவிகிதம் புதுமுகங்கள் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதனை இயக்கியிருக்கிற பிரவீன் கண்ட்ரேகுலா, ஏற்கனவே ‘சினிமா பண்டி’ படத்தைத் தந்திருக்கிறார்.

பெண்ணியத்தைப் பேசுகிற வகையில் அமைந்திருந்த ‘பரதா’ எனும் படத்தையும் இயக்கியிருக்கிறார். அனுபமா பரமேஸ்வரன், சங்கீதாவோடு தர்ஷனா ராஜேந்திரன் நடித்த அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையிலேயே ‘சுபம்’ டீசர் வெளியாகிக் கவனம் ஈர்த்திருக்கிறது.

மே 9ஆம் தேதியன்று வெளியாவதாகச் சொல்லப்பட்ட பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீர மல்லு’ படம் தள்ளிப்போவதாக அறிவிப்பு வெளியான நிலையில், ‘சுபம்’ வெளியீடு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் பாடல்களுக்கு கிளிண்டன் செராஜோவும் பின்னணி இசையமைப்பை விவேக் சாகரும் கையாண்டுள்ளனர்.

இதிலுள்ள தொழில்நுட்பக் கலைஞர்களில் பெரும்பாலானோர் புதுமுகங்கள் தாம். உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் தந்து சமந்தா தயாரிக்கும் ‘சுபம்’ வெற்றி பெற்றால், பல புதுமுகங்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகலாம். வேறு சில பிரபலங்களும் இது போன்ற முயற்சிகளில் இறங்கக்கூடும். முதலில் இது போன்ற ‘ஐடியாக்கள்’ பழைய பாதையில் பயணிக்கவிடாமல் படைப்பாளிகளை மடைமாற்றிவிடும்.

அந்த நம்பிக்கையே, ‘சுபம்’ படத்தைத் தயாரித்திருக்கும் சமந்தா மீதான மதிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share