பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ.18.50 கோடிக்கு வாங்கப்பட்ட சாம் கர்ரன் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் இன்று (டிசம்பர் 23) நடைபெற்று வருகிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரன் ஐபிஎல் ஏல வரலாற்றில் மகத்தான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ரூ. 2 கோடி என்று அடிப்படை விலையாக அறிவிக்கப்பட்ட அவரை எடுக்க சென்னை, மும்பை, ராஜஸ்தான், பெங்களூர், லக்னோ, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் கடுமையாக போராடின.
இதனால் அவரின் ஏலத் தொகை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.50 கோடிக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை 24 வயதான சாம் கர்ரன் படைத்துள்ளார்.
முன்னதாக 2021ம் ஆண்டு கிறிஸ் மோரிஸை ஐபிஎல் ஏலத்தில் ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியதே அதிகபட்ச சாதனையாக இருந்தது.
24 வயதான ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் இதற்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார். 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர், பஞ்சாப் அணியால் ரூ 7.2 கோடிக்கு வாங்கப்பட்டார், ஆனால் ஒரு சீசனுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை 2020ம் ஆண்டு ரூ 5.5 கோடிக்கு வாங்கியது.
இதுவரை 32 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சாம் கர்ரன் 149.77 ஸ்ட்ரைக் ரேட்டில் 337 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
அதே வேளையில் சாம் கர்ரனுடன் ஆஸ்திரேலியாவின் கேமரூன் க்ரீன் மற்றும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் இந்த ஐபிஎல் ஏல வரலாற்றில் சாதனை படைத்துள்ளனர்.
கேமரூன் க்ரீனை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும், பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வாங்கியுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
2 வீரர்களுக்காக பெரும் தொகையை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
“சென்னையில இல்ல சார்” – பெங்களூரு போலீசிடம் குறை சொன்னவருக்கு பதிலடி!