சிறப்புக் கட்டுரை: சீக்கியர்களுக்கு ஒரு சல்யூட்!

Published On:

| By Balaji

அ.முத்துகிருஷ்ணன்

இந்தியாவில் ஊரடங்கு சில தினங்கள் நீட்டிப்பதாக மோடி தனது இல்லத்தில் இருந்து தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் அறிவித்துக்கொண்டிருந்த நேரம், மோடியின் இல்லத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் மக்கள் பெரும் கூட்டமாக யமுனைக் கரையில் திக்குத்தெரியாமல் தங்களது நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தனர்.

ADVERTISEMENT

நான்கு மணி நேர அறிவிப்புடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்த இவர்கள் அனைவரையும் டெல்லி அரசு ஒரு முகாமில் அடைத்து வைத்தது. அந்த முகாமில் ஒரு தீ விபத்து ஏற்பட்ட பிறகு யாராலும் அந்த தகரக்கொட்டகையில் வசிக்க முடியவில்லை. மெல்ல நடந்து வந்து யமுனை ஆற்றின் இந்த பாலத்துக்குக் கீழே தஞ்சம் அடைந்தார்கள்.

கடைசியாக அவர்கள் மார்ச் 21 அன்று வேலைக்குச் சென்றுள்ளார்கள், அவர்களின் சம்பளப் பாக்கியைக் கூட கொடுக்காமல் அவர்களை சில முதலாளிகள் விரட்டி விட்டதில் இவர்களில் பெரும்பாலானவர்களிடம் இன்று ஒரு நயா பைசா கிடையாது. பணம் வைத்திருந்த சிலருக்குக்கூட விலைக்கு உணவு கிடைக்கவில்லை.

ADVERTISEMENT

சில தினங்கள் உணவில்லாமல் பட்டினியில் இருந்த இவர்களை டெல்லி அரசு முற்றிலும் கைவிட்டது. இந்த நிராதரவான கூட்டத்தைப் பார்த்த சீக்கியர்கள் சிலர் அருகில் இருக்கும் குருத்வாராவில் பேசி ஏற்பாடு செய்து ஒரு நாளில் ஒரு வேளை உணவு வழங்கி வருகிறார்கள்.

சீக்கியர்களின் செயல்பாடுகளை என் பள்ளிப்பருவம் முதலே நெருக்கமாகப் பார்த்து வருபவன் நான் என்கிற ரீதியில் சில விஷயங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

ADVERTISEMENT

புது டெல்லி தேர்தலில் தோல்வியடைந்த வெறியில் டெல்லி காவல்துறையின் முழு ஆசீர்வாதத்துடன் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலையை இந்துத்துவ வெறியர்கள் நடத்தியபோது பல இடங்களில் சீக்கியர்கள் ஓர் அரணாக நின்றனர். நேரடியாகவே அந்த தாக்குதலின்போது சீக்கியர்கள் களத்தில் இறங்கி பல குடும்பங்களைக் காப்பாற்றினார்கள். தங்களின் வழிபாட்டுத்தலமான குருத்வாராக்களை திறந்து அங்கே பல குடும்பங்களை தஞ்சமடையச் செய்தார்கள். தொடர்ந்து உணவு அளித்தது மட்டுமின்றி அவர்களுக்குக் குறைந்தபட்சமான உடைமைகளையும் வழங்கினார்கள்.

இதேபோல் புல்வாமா தாக்குதல்களுக்குப் பிறகு பஞ்சாபிலும் வடமாநிலங்கள் பலவற்றிலும் காஷ்மீர் இஸ்லாமியர்களின் வீடுகள் தாக்கப்பட்ட போதும் காஷ்மீரி மாணவர்கள் தாக்கப்பட்ட போதும் சீக்கியர்கள் களத்தில் நின்று அவர்களைக் காப்பாற்றினார்கள். ஆக்ரோவில் உள்ள விடுதிகளில் இனி காஷ்மீரிகள் தங்க அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகைகள் ஒட்டினார்கள். இப்படி வட இந்தியா முழுவதுமே காஷ்மீரிகளுக்கு எதிரான கலவரங்கள் மூண்டபோது உடன் கல்சா நிறுவனங்கள் வட இந்தியா முழுவதும் உள்ள குருத்வாராக்களில் காஷ்மீரிகள் பாதுகாப்பாக அடைக்கலம் புகலாம் என்று அறிவித்தார்கள்.

பஞ்சாப் மண்ணில் ஒரு காஷ்மீரியையும் யாரும் தாக்க முடியாது என்று சீக்கிய தலைவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். நூற்றுக்கணக்கான காஷ்மீரிகளை ஜம்முவுக்கும் ஸ்ரீநகருக்கும் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வீடு சேர்த்தார்கள்.

2015இல் சென்னை வெள்ளமும் கடந்த ஆண்டு கேரள வெள்ளத்தின்போதும் சீக்கியர்கள் களத்தில் நின்றார்கள். இந்தியாவில் வெள்ளம், பூகம்பம் என எந்த பேரிடர் வந்தாலும் இவர்களின் உதவிகள் அங்கு காத்திரமாக இருக்கும்.

சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து, மக்கள் மடிந்துவந்த நிலையில், போர்க்களத்துக்குச் சென்று, பாதிக்கப்பட்ட சிரியாவின் எளிய ஜனங்களுக்கு சீக்கியர்கள் உணவு, உடைகள், காலணிகள், அடிப்படை பொருட்கள் கொடுத்து உதவினார்கள்.

கிரீஸின் அகதிகள் பிரச்சினை, பிரிட்டனின் 2015 வெள்ளம், யெமெனின் சிவில் யுத்தம், 2015 நேபாளம் பூகம்பம், ஆஸ்திரேலியாவின் மார்சியா புயல் என என் கண்களில் இவர்கள் தெரிந்து கொண்டேயிருக்கிறார்கள், எனது பால்ய நண்பர்கள் மூலமாகவும் நான் இவர்களின் சேவைகள் குறித்து நிறைய கேட்டும் வருகிறேன்.

நியூசிலாந்தின் ஒரு தீவிரவாதி க்ரைஸ்ட் சர்ச்சில் 49 பேரைச் சுட்டுக் கொன்றபோது அங்கிருந்த பிரேதங்கள் அனைத்தையும் குளிப்பாட்டி, பள்ளம் வெட்டி மொத்த அடக்க நிகழ்வுகளையும் செய்தது நியூசிலாந்தின் சீக்கிய சமூகம்.

பல அமைப்புகள் இப்படியான சேவைகள் செய்யும்போது அவர்களுக்கு அதில் மறைவாக ஒரு அஜெண்டா இருக்கும், அப்படி ஒரு மறைவான உள்நோக்கத்துடனேயே அந்த காரியத்தில் ஈடுபடுவார்கள். இன்றைய கொரோனா சூழலில் எப்படியேனும் தமிழர்களிடம் நெருங்கி விட வேண்டும் என்று சில அமைப்புகள் குட்டிகர்ணம் அடிக்கும் போதும் அவர்களை தங்களின் கொண்டைகளை மறைக்க முடியவில்லை. அவர்கள் வெளியிடும் அறிக்கைகளும் காணொலிகளுமே அவர்களின் அரசியல் அபிலாசைகள் பறைசாற்றுகிறது.

இப்படியான அருவருப்பான எண்ணங்களை நான் சீக்கியர்களிடம் ஒரு போதும் பார்த்ததில்லை. அவர்களின் குணமும் துணிவும் என்னை எப்பொழுதும் வியக்கவைத்திருக்கிறது.

உலகம் எங்கிலும் அவர்கள் பரவிக்கிடக்கிற போதும் எங்கே வாழ்கிறார்களோ அந்த நிலத்தின் ஒரு பகுதியாகவே மாறுவது இன்றைய காலத்தின் முக்கிய தேவைகளில் ஒன்று. சீக்கிய சமூகம் அவ்வாறே தங்களின் வாழிடங்களின் பகுதியாகவே மாறிவிடும் ரசவாதம் ஆச்சரியம் அளிக்கிறது. நான் அறிந்த பலர் பல நாடுகளில் குடியுரிமை பெற்றுவிட்ட போதிலும் மனதளவில் அங்கே ஒட்டாமல் இலையும் நீரும் போலவே ஒரு விளக்கத்துடனேயே வாழ்கிறார்கள். அப்படியாக வாழ்கிறவர்கள் அனைவருமே சீக்கிய சமூகத்துடன் நெருங்கப் பழகி தங்களின் குணங்களை மாற்றிக்கொள்வது காலத்தில் கட்டாயம்.

யமுனைக் கரையில் சீக்கியர்கள் உணவளித்தார்கள் என்கிற போதும் என்னை இந்த நெடிய செய்திகளைத் தொகுத்து வழங்க ஊக்கம் அளித்த வேறு ஒரு நிகழ்வு. பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள ஹர்மந்தர் சாகிப் (பொற்கோவில்) அந்த மாநிலத்தில் கொரோனாவை எதிர்கொள்ள தேவைப்படும் ஒட்டு மொத்த N95 மாஸ்குகளையும் வெண்டிலேட்டர்களையும் வாங்கித்தர முன்வந்துள்ளது. ஒரு கோயிலால் இப்படி அந்த மாநிலத்தின் நெருக்கடியான நேரத்தில் உதவ முடிகிறபோது. உங்கள் ஊரில், உங்கள் மாநிலத்தில் நீங்கள் வழிபடும் நீங்கள் ஆகப்பெரிய சக்தி வாய்ந்த தெய்வமாகக் கருதும் அந்த வழிபாட்டுத்தலத்தின் நிர்வாகம் அந்த மாவட்டத்திற்கோ மாநிலத்திற்கோ இப்படி உதவ முன்வந்துள்ளதா என்பதை ஒரு கேள்வியாக உங்கள் முன்வைக்கிறேன்.

மனிதநேயத்துக்கும், உதவிகள் செய்வதற்கும் நிறம், இனம், நிலம் பார்க்கத் தேவையில்லை என்பதை உலக அரங்கில் சீக்கியர்கள் நிரூபித்து வருகிறார்கள். மீண்டும் ஒரு முறை சீக்கியர்களுக்கு ஒரு சல்யூட்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share