இந்தியாவில் இதய நோய்களுக்கான மருந்துகளின் விற்பனை 50 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. Sales of drugs for heart diseases increase by 50% in 5 years!
பொதுவாக மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப்பழக்கங்கள், உடல் உழைப்பு குறைவது போன்றவை மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கான காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் மாரடைப்பு பாதிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா தாக்குதலுக்கு பிறகு இளைஞர்களிடையே மாரடைப்பு பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. பிரபலங்கள் தொடங்கி பல தரப்பினரும் மாரடைப்பால் உயிரிழக்கும் செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் இதய பாதிப்புகள் தொடர்பான மருந்துகளின் விற்பனை 50 சதவிகிதத்திற்கு மேல் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து 17 முக்கிய இந்திய மருந்து நிறுவனங்களின் விற்பனை புள்ளி விபரங்களைப் பகுப்பாய்வு செய்து ஃபார்மாராக் வெளியிட்டுள்ள ஜூன் மாத அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
அந்த அறிக்கையின் படி, ஜூன் 2021ம் ஆண்டில் ரூ.1,761 கோடியாக இருந்த இதய நோய் தொடர்பான மருந்துகளின் விற்பனை ஜூன் 2025ல் ரூ.2,645 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தத் துறையில் ஆண்டுதோறும் 10.7% நிலையான வளர்ச்சி விகிதம் இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.
இதய நோய்கள் குறித்த சிறந்த விழிப்புணர்வு, உயர் இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கான அளவீட்டு முறை மற்றும் அதிகரித்து வரும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட காரணங்களால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் இதய நோய் பாதிப்புகளுக்கான மருந்துகளில் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது குறித்து கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
