சேலம் அக்கா, தம்பி கொலை வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் பனமரத்துப்பட்டி ஒருவாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது சித்தப்பா மகன் தனசேகரன். இருவருக்கும் வீட்டுக்கு பின்னால் சிறிது தூரத்தில் நிலம் உள்ளது.
இருவரும் தங்களது தோட்டத்தில் பணப் பயிர்களான நந்தியாவட்டை, குண்டு மல்லி, சம்பங்கி, சாமந்தி, அரளி பூ ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர்.
ராஜாவுக்கு நவீனா (17) என்ற மகளும், சுகன் (எ) சுகவனம்(14) என்ற மகனும் இருந்தனர். நவீனா 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சுகன் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
பிள்ளைகள் இருவரும் நேற்று திங்கள் கிழமை பள்ளி முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து புத்தக பையை வைத்துவிட்டு வழக்கம் போல் பூ பறிக்க தோட்டத்துக்கு சென்றனர்.
அப்போது ராஜாவின் சித்தப்பா மகன் தனசேகரன் தனது தோட்டத்தில் மறைந்திருந்தவாறு ஓடிவந்து, அக்கா, தம்பி இருவரையும் சிறுபிள்ளைகள் என்றுகூட பாராமல் சரமாரியாக வெட்டியுள்ளார்
நவீனா கழுத்தை வெட்டிய போது அவர் தப்பியோட முயன்றிருக்கிறார். இருந்தாலும் விரட்டி விரட்டி வெட்டியிருக்கிறார் தனசேகரன். அக்காவை காப்பற்ற சென்ற தம்பி சுகவனத்தையும் வெட்டியுள்ளார்.
பூந்தோட்டத்தில் இருபிள்ளைகளும் ரத்த வெள்ளத்தில் சரிந்துவிழுந்து துடிதுடித்துள்ளனர். இவர்கள் அலறிக்கொண்டு கிடந்த இடத்தில் பூச்செடிகளும் சலசலத்துள்ளன.
இந்த சத்தத்தை கேட்ட ராஜா, பிள்ளைகளை பாம்புதான் தீண்டிவிட்டது என அலறியடித்து ஓடி வந்துள்ளார்.
மகளை தூக்கி பார்த்தபோது கழுத்தில் வெட்டுப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தது தெரியவந்தது.
“அய்யோ என் பிள்ளைங்க” என்று ராஜா கதறிக்கொண்டிருந்த நிலையில், அங்கு பதுங்கியிருந்த தனசேகரன் மீண்டும் வந்து ராஜாமீது இரும்பு கம்பிகளை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ராஜா தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த நவீனா, சுகன் இருவரது உடலும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து நேற்று இரவு மின்னம்பலத்தில், சேலத்தில் கொடூரம்… அக்கா, தம்பி கொலை! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த உளவுத்துறை ஐஜியும், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியும் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.
இந்தநிலையில், தலைமறைவாக இருந்த தனசேகரனை இரவோடு இரவாக சேலம் எஸ்.பி கெளதம் கோயலின் ஸ்பெஷல் டீமும் பனமரத்துப்பட்டி போலீசாரும் தேடி பிடித்தனர். தனசேகரனை போலீஸ் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடி விழுந்து அடிப்பட்டதாக ஒரு தகவல் வருகிறது.
தனசேகரன் மனைவி ஜனனி மற்றும் மாமியார் (ஜனனி தாயார்) ஆகியோரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
“போலீஸ் கஸ்டடியில் உள்ள ஜனனி கொடுத்த வாக்குமூலத்தில் ராஜா, தொடர்ந்து என்னைத் தொல்லை செய்து வந்தார். இது என் கணவர் தனசேகரனுக்கு தெரிந்து கோபப்பட்டார் ஆனால், இப்படி ஒரு செயல் செய்வார் என்று எனக்கு தெரியாது.
பூந்தோட்டத்தில் சத்தம் கேட்டு ஓடினோம். சாமந்தி பூ செடிகள் இப்படியும் அப்படியுமாக ஆடியது. அதைப் பார்த்து நானும் என் அம்மாவும் கிட்ட நெருங்கிய போதுதான், ராஜாவை என் கணவர் தனசேகரன் தாக்கிக்கொண்டு இருந்ததைப் பார்த்தோம். அவரை மறித்து இழுத்து வந்தோம், பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்களும் ஓடி வந்து மறித்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
போலீஸ் விசாரணை வளையத்தில் உள்ள தனசேகரன், ‘எனது மனைவியை ராஜா தொடர்ந்து தொல்லை செய்து வந்தார். இதனால் வாழ்க்கையில் நிம்மதியை இழந்தோம். கொலை சம்பவம் நடக்கும் முன்புகூட நேற்று மாலை தோட்டத்தில் பூ பறித்துக்கொண்டிருந்த எனது மனைவி ஜனனியிடம் சில்மிஷம் செய்தார் ராஜா.
நான் பார்த்ததும் ராஜா, வீட்டுக்கு போய்விட்டார், என் மனைவியையும் வீட்டுக்கு அனுப்பிட்டேன்.
பின்னர் ராஜா மீண்டும் எப்போது தோட்டத்துக்கு வருவார் என்று காத்திருந்தேன் அப்போதுதான் அவர் பிள்ளைகள் பள்ளியை முடித்துவிட்டு அரளி பூ எடுக்க வந்தாங்க.
கோபத்தில் இவர்களை வெட்டினால், ராஜா வருவார் என்று வெட்டினேன். நான் எதிர்பார்த்தது போல் ராஜா வந்தார். அவரையும் இரும்பு கம்பியால் தாக்கினேன். அப்போது கூடி இருந்தவர்கள் தடுத்ததால் தப்பித்து விட்டார்’ என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்” என்கிறார்கள் பனமரத்துப்பட்டி காவல்நிலைய வட்டாரத்தில்.
இந்தநிலையில், இன்று ராஜாவின் உறவினர்கள், தனசேகரன் மச்சான் கார்த்திக்கையும் வழக்கில் சேர்த்து கைது செய்யவேண்டும் என்று குழந்தைகள் நவீனா, சுகன் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை எதிரில் போராட்டம் செய்தனர்.

குழந்தைகளின் தந்தை ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், “பிள்ளைங்க 5.15 மணிக்குதான் ஸ்கூல்ல இருந்து வருவாங்க. சாப்ட்டு பூ எடுக்க போக 5.30, 6 மணி ஆகிரும். மழை வேற பெய்யுறதால அப்பவே இருட்டு கட்டிடும். நேத்து தூறல் வேற போட்டுக்கிட்டு இருந்துச்சு. அந்த கேப்லதான் அவன் இப்படி பண்ணிட்டான். நான் வேற அரளி பூ எடுத்துட்டு இருந்தேன். பிள்ளைகள் சத்தம் கேட்டு ஓடி வந்து அவங்கள கட்டிப்புடிச்சு அழுதுட்டு இருந்தப்பதான் என்னையும் அடிச்சிட்டான்.
பிள்ளையும், மவனையும் அறுத்துபோட்டுட்டான். பிளான் பண்ணி இத பண்ணிருக்கான். அவன் மச்சான் உன்ன விடமாட்டன்டா. வெட்டிடுவேன்… குத்திடுவேனு சொல்லிட்டு போறான்.
நான் பாத்தது ரெண்டு பேரு. எத்தன பேரு வந்தாங்கனு எனக்கு தெரியாது. நான் கத்துன கத்துல பால் பீசிட்டு இருந்த என் பொண்டாட்டி கத்திட்டு ஓடி வந்தா. என்ன அடிச்சு கொன்றுந்தா கூட பரவாலையே” என்று வேதனையுடன் கூறினார்.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட ராஜாவின் உறவினர்களிடம் காவல் துறை அதிகாரிகள் பேசி சில உத்தரவாதங்களைக் கொடுத்து போராட்டத்தை கைவிட சொல்லி உள்ளனர்.
இந்த கொலையில் வேறு யார் யாருக்கு தொடர்புகள் இருக்கிறது என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ராஜாவுக்கும் ஜனனிக்கும் வேறு விதமான தொடர்புகள் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகிறார்கள் பனமரத்துப்பட்டி போலீசார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
சாம்சங் போராட்டம் வாபஸ்.. நடந்தது என்ன? – அமைச்சர் வேலு பேட்டி!
