சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, புறவழிச்சாலையில் ஆம்னி பேருந்தும், ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஆம்னி காரில் பயணித்த, தாய், மகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் கிரைன் பஜார் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். ஆட்டோ மெக்கானிக்கான இவர், கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார்.
அவரது 30-வது நாள் காரியத்திற்காக உறவினர்கள் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இன்று ஆகஸ்ட் 23-ம் தேதி, அதிகாலை 1.30 மணியளவில், இரவு நேரத்தில் டீ குடிப்பதற்காக, ஆம்னி காரில் 11 பேர் ஆத்தூர் பேருந்து நிலையத்திற்குச் சென்று டீ குடித்து விட்டு, பின்னர் அங்கிருந்து சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பியுள்ளனர்,
அப்போது காரை ராஜேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது ஆம்னி கார், ஆத்தூர் புறவழிச்சாலை சேலம்- சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓட்டம்பாறை மேம்பாலம் பகுதியில் வலது புறத்தில் சென்ற போது,
ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து மீது ஆம்னி கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், ஆம்னி காரில் பயணம் செய்த ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த சரண்யா, சுகன்யா, ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தியா, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு போக்கம்பாளைய பகுதியை சேர்ந்த ரம்யா, கார் ஓட்டுனர் ராஜேஷ் ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் தன்ஷிகா, பெரியண்ணன், புவனேஸ்வரி, கிருஷ்ணவேணி, உதயக்குமார், சுதா, ஆகிய 6 பேரும் படுகாயமடைந்தனர்,
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் போலீசார் காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,
இதில் சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தன்ஷிகா என்ற பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா மற்றும் ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆகியோர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்வம்