மாநாட்டுக்குத் தயாராகும் சேலம்… மலைக்க வைக்கும் ஏற்பாடுகள்!

Published On:

| By Selvam

Salem youth wing conclave

திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு நாளை (ஜனவரி 21) சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் ஐந்து லட்சம்  நிர்வாகிகள் கலந்துகொள்ள  திட்டமிடப்பட்டுள்ளது.  இளைஞர் அணி மாநாட்டை முன்னிட்டு இன்று (ஜனவரி 20) ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கும் பைக் ஊர்வலம் மற்றும் போட்டோ ஷோ, கலை நிகழ்ச்சிகள் மாநாட்டு திடலில் நடைபெறுகிறது,

ADVERTISEMENT

இதனால் முன்கூட்டியே இன்று மதியம் சேலம் வருகிறார் உதயநிதி. மாலையில் முதல்வர் ஸ்டாலின் வருகிறார். சென்னையிலிருந்து இன்று மதியம் பஸ், வேன் மூலமாக இளைஞரணி நிர்வாகிகள், கட்சியினர் சேலத்திற்கு கிளம்புகிறார்கள்.

அதேபோல, தமிழ்நாடு முழுவதும் இன்று பகல் மற்றும் மாலையில் நிர்வாகிகள் புறப்படுகிறார்கள். மாநாட்டை முன்னிட்டு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Salem Dmk youth wing conclave Preparation

மாநாட்டு பந்தல் பின்புறத்தில் தற்காலிகமாக இரண்டு  மினி பங்களா தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் தான் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி இருவரும் தங்கி ஓய்வு எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில் சேலத்தில் தங்குவதற்கு கெஸ்ட் ஹவுசும் தயார் நிலையில் உள்ளது.

ADVERTISEMENT

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள் தங்குவதற்கு வீடுகள் மற்றும் விடுதிகள் எடுத்துள்ளனர். எந்த பக்கம் சென்றாலும் சாப்பாடு கிடைக்கும் வகையில், மாநாட்டுக்கு இரண்டு பக்கத்திலும் சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பிரியாணி தயார் செய்வதற்காக 1,500 ஆடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.  ஆத்தூர் அருகிலேயே பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதால், மாநாட்டுப் பந்தலுக்கு செல்வதற்கு அங்கிருந்து 4 கி.மீ தூரம் நடக்க  வேண்டியுள்ளது  என சில நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரத்தில் இவ்வளவு பெரிய மாநாடு நடக்கும் போது ஏற்பாடுகள் இப்படி தான் செய்ய முடியும் என்று ஏற்பாட்டாளர்கள் மத்தியில் சொல்கிறார்கள்.

Salem Dmk youth wing conclave Preparation

மாநாட்டுக்கு தனியார் பஸ்களை வாடகைக்கு எடுக்கும் கட்சியினர் அதற்கான வாடகையை கட்டி அந்த ரசீதை தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்று ஏற்கனவே நடந்த இளைஞரணி மாநாடு தொடர்பான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், நேற்று வரை  பில்  சரியாக செட்டில் செய்யப்படாததால், பல மாவட்டங்களில் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன்கள் சார்பில் மாநாட்டுக்கு செல்ல பஸ்கள் கொடுப்பதில் தயக்கம் காட்டிவந்தனர். மாவட்டச் செயலாளர்கள் இதில் தலையிட்டு பேசி வாகனங்களை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி,  ’திமுக மாநாடுன்னா 20 நாளைக்கு முன்னாடி பேட்ஜ், கார் பாஸ் எல்லாம் கொரியர்ல வந்துரும்.  ஒவ்வொரு வண்ண பேட்சுக்கும் ஒவ்வொரு பகுதி மாநாட்டில் ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனா, இன்று காலை வரை கார் பாஸ், பேட்ஜ் வரலை” என்று  மாநாடு நடக்கும் சேலத்தின்  பக்கத்து மாவட்ட நிர்வாகிகளே நம்மிடம் கூறினார்கள்.  இதுகுறித்து மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘பேட்சுகள் மாநாட்டுத் திடலிலேயே வழங்கப்பட்டு வருகிறது” என்கிறார்கள்.

Salem Dmk youth wing conclave Preparation

ஐந்து லட்சம் இளைஞர்கள் வருவதற்கான திட்டங்களைப் பற்றி நாம் சில மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ”ஒரு தொகுதிக்கு இரண்டாயிரம் இளைஞர்கள் என்ற வகையில் 234 தொகுதிகளில் இருந்தும் மாநாட்டுக்கு  வருகிறார்கள்.  அவர்கள் பெயர், வேன் அல்லது பஸ்களின் பதிவு எண், வேன் படம், ஓட்டுநர் பெயர் மற்றும் செல் நம்பர் வாங்கப்பட்டு வருகிறது. வாகனங்கள் நிறுத்த பத்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒரு தொகுதிக்கு 2,000 பேர் என்றால் 234 தொகுதிக்கும் 4 லட்சத்து 68 ஆயிரம் பேர் என முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு ஒயிட் & ஒயிட் டிஷர்ட், டிரேக் ஷூட் வழங்கப்பட்டுள்ளது.   மாநாட்டுப் பந்தலில் ஒன்றே கால் லட்சம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.  இவர்களைத் தவிர மாநாட்டுப் பந்தலில் நிற்பவர்கள் பந்தலுக்கு வெளியே திரள்பவர்கள், வந்து சென்றுகொண்டே இருப்பவர்கள் என கணக்கிட்டால்  ஐந்து லட்சம் பேர் வரை  கலந்துகொள்கிறார்கள்.  இந்த மாநாடு உலகளவில் சாதனை படைக்கும் மாநாடாக இருக்கும்” என்கிறார்கள்.

ஒவ்வொரு ஏற்பாடாக பார்த்துப் பார்த்து கவனித்து வருகிறார்கள் மாநாட்டுப் பொறுப்பாளரான அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலான நிர்வாகிகள்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘தி பீகீப்பர்’: விமர்சனம்

ஸ்ரீரங்கம், ராமநாதசாமி கோவில்களில் மோடி இன்று சாமி தரிசனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share