நாடாளுமன்றம் வரை ஒலித்தும் என்ன தீர்வு? தெருநாய் கடித்து சிறுவன் பலி!

Published On:

| By Selvam

சேலம் மாவட்டத்தில் தெருநாய் கடித்ததில் 4-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Salem child passed away

சேலம் மாவட்டம் வீராணம் இளங்கோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முனுசாமி. இவரது மகன் கிஷோர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். கிஷோர் உடல் சோர்வுடன் காணப்பட்டதால், வலசையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.

ADVERTISEMENT

சிறுவனை பரிசோதித்தபோது தெரு நாய் கடித்ததன் காரணமாக, ரேபிஸ் நோய் தொற்று உடல் முழுவதும் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக, சிறுவன் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர், “ஒரு மாதத்திற்கு முன்பாக தெருவில் கிஷோர் விளையாடிக்கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று கையில் கடித்துள்ளது. நாய் கடித்தது குறித்து எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பிறகே நாய் கடித்து ரேபிஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது” என்கிறார்கள்.

ADVERTISEMENT

நாய் கடித்தால் பொதுமக்கள் கண்டிப்பாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொதுசுகாதாரத்துறை அண்மையில் அறிவுறுத்தியிருந்தது.

நடப்பு சட்டமன்ற தொடரில் தெருநாய்கள் தொல்லையால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரான சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,

ADVERTISEMENT

“தெரு நாய்கள் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர திமுக எம்.பி-க்களை வலியுறுத்தியுளேன். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு தீர்வு காண நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக, ஈரோடு திமுக எம்.பி பிரகாஷ் மக்களவையில் பேசும்போது, “ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட வெறிநாய்கள் காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். இதனால் கிராம பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். வெறிநாய் தாக்குதலால் விவசாயிகளின் வாழ்வாதாரமான ஆடு, மாடு, கோழிகள் இறப்புக்குள்ளாகிறது. இதனால் மத்திய அரசு வெறிநாய்களால் தாக்குதலுக்குள்ளான பிராணிகளை கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

வீட்டில் வளர்க்கும் நாய்கள் நோய்வாய்ப்பட்டு அது வெறிநாயாக மாறும்போது குழந்தைகள் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படுகிறது.

தெரு நாய்களை கட்டுப்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெறிநாய்களை கட்டுப்படுத்த ப்ளூகிராஸ் அமைப்பு மற்றும் அனிமல் வெல்ஃபர் போர்டு ஆஃப் இந்தியா எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

வரும்காலங்களில் வெறிநாய்களால் பாதிப்பு ஏற்படும் போது விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படாத வகையில், வீட்டு வளர்ப்பு பிராணிகளான ஆடு, மாடு, கோழி போன்றவைகளுக்கு மத்திய அரசு உயிர் காப்பீடு செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் ” என்று வலியுறுத்தினார்.

சட்டமன்றம், நாடாளுமன்றம் வரை இப்பிரச்சினை பேசப்பட்ட நிலையில், தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் மார்ச் 28 வெளியிட்ட பதிவில்,

“பிரதமர் மோடியை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, தெருநாய்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவரது கவனத்திற்குக் கொண்டு சென்றேன். இந்தியாவில் 6.2 கோடிக்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளன.

உலகளவில் ரேபிஸ் தொடர்பான இறப்புகளில் இந்தியாவில் 36 சதவிகிதம் பதிவாகிறது . விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ABC) விதிகள், 2023 அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அதனை செயல்படுத்துதல் பயனற்றதாகவே உள்ளது.

தற்போதைய அமைப்பின் போதாமை குறித்து பிரதமரிடம் விளக்கினேன். உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்தப் பிரச்சினையை திறம்பட சமாளிக்க நிதி மற்றும் தொழில்நுட்பம் இல்லை. அதனால் அவசர நடவடிக்கை தேவை என்பது தெளிவாகிறது.

உள்ளாட்சி அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்ற தேசிய பணிக்குழுவை நிறுவுமாறு பரிந்துரைத்தேன். கூடுதலாக, இந்த சவாலை எதிர்கொள்ள ஒரு நீண்டகால செயல் திட்டம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் இன்னமும் தெருநாய்களால் விலைமதிப்பற்ற மழலைச் செல்வங்களை இழக்கும் நிலை தொடர்கிறது.

தெருநாய்கள் விவகாரத்தில் ஒன்றிய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்! மாநில அரசு இன்னும் அழுத்தமாக வற்புறுத்த வேண்டும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share