அரசு பள்ளி ஒன்றுக்கு ஆய்வு சென்ற சமக்ரா சிக்ஷா திட்ட அதிகாரி, தமிழ் ஆசிரியையை நடிகை ஷகிலாவுடன் ஒப்பிட்டு பேசியிருப்பது குறித்து முதல்வர் வரை புகார் சென்றுள்ளது. salem apo mariyapan torchured nangavalli tamil teacher
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளியில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி 50 ஆண்டுகள் பழமையான பள்ளியாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக பொன் விழா கொண்டாடப்பட்டது. தற்போது இந்த பள்ளியில் சுமார் 1200 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் (சமக்ரா சிக்ஷா) உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்(ஏபிஓ) மாரியப்பன் கடந்த ஜூன் 5ஆம் தேதி, அதாவது 2025-26 கல்வியாண்டில் பள்ளி திறந்த மூன்றே நாளில் இந்த பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றார்.
அங்கு வகுப்பில் இருந்த தமிழ் ஆசிரியரை பார்த்து அவரது உடலமைப்பை வர்ணித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி முதல் முதல்வர் ஸ்டாலின் வரை புகார் சென்றுள்ளது.
இதுபற்றி நங்கவள்ளி பெண்கள் பள்ளியின் சக ஆசிரியர்கள்,மாணவிகளிடம் நாம் விசாரித்த போது, “தமிழ் ஆசிரியர் ரேணுகா 2005ல் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் தேர்வில் தேர்ச்சி பெற்று போலீசில் பணியாற்றி வந்தார். அதன்பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு தற்போது முதுகலை ஆசியரியாக இந்த பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஜூன் 5 ஆம் தேதி அந்த ஆசிரியை 11ஆம் வகுப்பு ‘சி’ பிரிவு மாணவிகளுக்கு 7ஆவது பீரியடில் பாடம் எடுத்து கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த அதிகாரி மாரியப்பன் வந்தார். முதலில் உள்ளே வராமல் வகுப்பறையில் வாயிலேயே நின்று கொண்டு ஆசிரியை பாடம் எடுப்பதையும் மாணவிகளையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே இருந்தார். காதில் ஹெட்செட் மாட்டியிருந்தார்.
பின்னர் உள்ளே வந்த மாரியப்பன் ஆசிரியையிடம் உங்கள் பெயர் என்ன? என்ன பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்? என பேச தொடங்கியவர் அடுத்ததாக சபல எண்ணத்துடன் பேசினார். இதை மாணவிகள் பார்த்துக்கொண்டே இருந்தனர். அப்போது மாணவிகளிடம் இவரைபோல ஷகிலா மாதிரி இருக்கும் ஆசிரியை பாடம் எடுத்தால்தான் உங்களுக்கு பிடிக்குமா என முகம் சுழிக்கும் வகையில் கேட்டார்.
இதையடுத்து 4.10 மணிக்கு பள்ளி முடிந்து எல்லோரும் கிளம்பிய போது அந்த அதிகாரி மாரியப்பன் ஆசிரியையை விடவில்லை. வராண்டாவில் நடந்து செல்லும்போது, ஆசிரியை அருகே சென்று பேசிக்கொண்டே இருந்தார். உங்களை போன்ற ஆசிரியையிடம் படித்தால் பிள்ளைகள் நாசமா போய்விடுவார்கள் என்று சொன்னார்.
இதைகேட்டதும் ஆசிரியை அங்கேயே அழுதுவிட்டார். இருந்தும் அவரை விடவில்லை. உடனே அங்கிருந்த மாணவிகள், ஏன் சார் தமிழ் அம்மா அழுகிறார். ஏன் அவரை திட்டினீர்கள் என கேட்டனர்.
இருந்தும் விடாத அந்த அதிகாரி மாரியப்பன், மாணவிகளிடம் இதுபோன்ற டீச்சரைத்தான் உங்களுக்கு பிடிக்குமா என்று கேட்டார்.
பின்னர் வராண்டாவில் இருந்து படிகட்டில் இறங்கும் போது ஆசிரியையிடம் ‘நீங்கள் மலையாள நடிகை ஷகிலா மாதிரி இருக்கீங்க… நல்லா இருக்கீங்க’ என்றார். அப்போது நாளைக்கு மெமோ வரும் பதில் சொல்லுங்க என்று தனது கைபேசி நம்பரை கொடுத்தார். ஆனால் தமிழ் ஆசிரியை அழுதுக்கொண்டே நம்பரைக் குறித்துக்கொள்ளாமல் சென்றார்.
அவர் பேசுவதை கேட்டு அழுதுகொண்டே வேகவேகமாக கீழே சென்ற ஆசிரியையிடம், ‘உன்னை இட மாற்றம் செய்ய முடியாது… சஸ்பெண்ட் செய்ய முடியாதுனு நினைக்கிறீயா.. நாளைக்கு ஓலை வரும்” என்று மிரட்டும் தொனியில் பேசினார். இப்படியாக சுமார் 1 மணி நேரம் டார்ச்சர் செய்தார்.
தொடர்ந்து கீழே இறங்கிய ஆசிரியை ரேணுகா, தலைமை ஆசிரியை வசந்த குமாரிக்கு போன் செய்து நடந்தவற்றை சொன்னார். ஆனால் தலைமை ஆசிரியை என்னால் என்ன செய்ய முடியும்… நீங்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டார்.
இதையடுத்துதான் ஆசிரியை மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தார். அதில் ஏபிஓ மாரியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதன்மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினார்” என்றனர்.
முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் சென்றதை தொடர்ந்து புகாருக்கு உள்ளான அதிகாரி, சேலம் மாவட்டம் பாவடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
“ஆனால் இந்த பணியிட மாற்றம் எல்லாம் கண் துடைப்பு நாடகம். ஒருவர் ஏபிஓ-வாக மூன்று ஆண்டுகள் தான் பணியாற்ற முடியும். ஆனால் இவர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த பதவியில் இருக்கிறார். ஆசிரியை புகார் அளித்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆசிரியை ரேணுகா, அந்த அதிகாரி பேசிதை கேட்டு கூனி குறுகிப் போய்விட்டார்” என்கிறார்கள் நங்கவள்ளி ஆசிரியர்கள் வட்டாரத்தில்.
இந்த புகார் குறித்து மாரியப்பனிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது “ஆசிரியை கூறுவது எல்லாம் பொய்” என்றார்.
எதற்காக உங்கள் மீது அவர் பொய் குற்றச்சாட்டு சொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு, “எனக்கு நேரம் சரியில்லை. நான் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இந்தம்மா என் மீது இப்படியொரு பொய்யை ஏன் சுமத்தினார் என தெரியவில்லை. நான் அந்த வகுப்பறைக்கு சென்ற போது அந்த ஆசிரியை சேரில் அமர்ந்துகொண்டு, கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு கண்ணை மூடி தூங்கிக்கொண்டிருந்தார். மாணவிகள் தான் போர்டில் எழுதிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். நான் சிறிது நேரம் நின்று பார்த்துக்கொண்டே இருந்தேன். அதன் பிறகுதான் அவர் எழுந்தார்.
அவரிடம் சென்று நீங்கள் எந்த பாட டீச்சர் என்று கேட்டேன். தமிழ் டீச்சர் என்றார். பாடம் நடத்த எவ்வளவோ இருக்கிறது. தூங்கிக்கொண்டிருக்கிறீர்களே… இதெல்லாம் சிஇஓ-வுக்கு தெரிந்தால் நோட்டீஸ் அனுப்பமாட்டாரா? என்று கேட்டேன்.

பின்னர் எதுகை மோனை குறித்து பாடம் எடுத்துவிட்டு, அந்த ஆசிரியைக்கு அறிவுரை கூறிவிட்டு வந்துவிட்டேன்.
இதையடுத்துதான் நான் சிஇஓவிடம் ரிப்போர்ட் செய்துவிடுவேன் என்று பயந்துபோய் அழுதார். அப்போதுதான் மாணவிகள் என்னிடம் வந்து, எங்கள் டீச்சர் ரொம்ப நல்லவர்… நல்லா பாடம் எடுப்பார் என்றனர்.
அவர்களிடம், கன்னத்தில் கை வைத்துக்கொண்டு, கால் மேல் கால் போட்டு தூங்கிகொண்டிருந்தால் சரியா என்று கேட்டுவிட்டு வந்துவிட்டேன். ஆனால் என் மீது இப்படி அபாண்டமாக பொய் புகார் சொல்கிறார்” என்று தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார் மாரியப்பன்.
மாவட்ட கல்வி அதிகாரி கபீரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஆசிரியர் கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தி உயரதிகாரிக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி மாரியப்பன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.
ஆசிரியை ரேணுகாவுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். அவரது கணவர் நங்கவள்ளி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த சம்பவம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியில் நடந்ததால் அவரது கவனத்துக்கும் புகார் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. salem apo mariyapan torchured nangavalli tamil teacher
