தங்க தட்டு வடை விற்பனை: அதிகாரிகள் ஆய்வு – அடுத்து என்ன நடந்தது?

Published On:

| By indhu

Sale of gold plates in Salem: Officials probe - What happened next?

சேலத்தில் தங்க தட்டு வடை விற்பனை செய்த கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சேலத்தில் புகழ்பெற்ற உணவு வகைகளில் ஒன்று தட்டுவடை செட். சேலம் பகுதிகளில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த தட்டு வடை செட் விற்பனை நடைபெறும்.

சேலம், அம்மாபேட்டை சாலையில் “துருவன்”  என்ற பெயரில் தட்டுவடை கடை நடத்தி வருபவர் ஸ்ரீதர்.

இவரது கடையில் தட்டு வடை செட், சுண்டல், கதம்பம் செட் என 50க்கும் மேற்பட்ட உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அட்சய திருதியை நாட்களில், தங்க தட்டு வடை செட்களை ஸ்ரீதர் விற்பனை செய்து வருகிறார். அந்த வகையில், அட்சய திருதியை நாளான நேற்று (மே 10), ஸ்ரீதர் தங்க தட்டு வடை செட்டுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த தங்க தட்டு வடை செட்டில் உலர் பழ வகைகள், காய்கறிகள், தட்டு வடை சட்னி, தங்க பேப்பர் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

அதாவது, தங்க பாயில் பேப்பரில் தட்டு வடை செட் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தங்க தட்டு வடை ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தங்க தட்டு வடை அறிவிப்பினால், இதை வாங்குவதற்கு ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

துருவன் தட்டு வடை செட் கடையில், “24 கேரட் தங்க தட்டு வடை செட் வழங்கப்படும்” என வைக்கப்பட்டிருந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.  இது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது.

இதனையடுத்து, தங்க தட்டு வடை செட் விற்பனை செய்யப்பட்ட கடையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், தங்க பாயில் பேப்பரில் உணவு தர குறியீடுகள் எதுவுமின்றி பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து, இந்த தங்க பாயில் பேப்பர் மனிதர்கள் சாப்பிட தகுதியானதா? என்பதை அறிவதற்காக அதிகாரிகள் அதனை கைப்பற்றி பகுப்பாய்விற்கு அனுப்பி உள்ளனர்.

ஆய்வு முடிவின் அடிப்படையில், தட்டு வடை செட் உரிமையாளர் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத் துறை தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய ‘ஸ்டார்’: முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?

”பாஜக வென்றால்… ஸ்டாலின், மம்தா உள்ளிட்ட தலைவர்கள் சிறையில் இருப்பார்கள்” : கெஜ்ரிவால் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share